மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

தொழில்துறையில் பின்தங்கிய தமிழகம்!

தொழில்துறையில் பின்தங்கிய தமிழகம்!

தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டின் அளவு பாதியாக குறைந்துள்ளதாகவும் தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் பின் தங்கியுள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 9) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு கடந்த 2016-17 ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட பாதியாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் பினாமி ஆட்சியில் தொழில்துறை முதலீடுகள் மிக மோசமான அளவுக்குக் குறைந்துள்ளது” எனத் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே காலக்கட்டத்தில் மேற்கு மாநிலங்களின் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “குஜராத் மாநிலத்தில் நேரடி முதலீட்டு அளவு ரூ.14,000 கோடியிலிருந்து ரூ.21,266 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், மராட்டியம், தாத்ரா நாகர் மற்றும் ஹாவேலி, டாமன் -டையூ ஆகியவற்றுக்கான முதலீட்டின் அளவு ரூ.60,127 கோடியிலிருந்து, ரூ.1,24,051 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 51 விழுக்காடு குறைந்துள்ள நிலையில், குஜராத்திற்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 51.90% அளவுக்கு உயர்ந்துள்ளது. மராட்டிய மண்டலத்திற்கு வந்த முதலீட்டின் அளவு 106.40% அளவுக்கு அதிகரித்திருக்கிறது” எனப் பல மாநிலங்களின் தொழில்துறை வளர்ச்சியை மேற்கோள் காட்டியுள்ளார்.

தமிழகத்தின் தனியார் நிறுவனம் வெளிநாட்டு நேரடி முதலீடு கணிசமாக குறைந்திருப்பதாக கோட்டக் வங்கிக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், “ 2016ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு மொத்தம் ரூ.2.83 லட்சம் கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீட்டின் அளவு ரூ.8366 கோடி, அதாவது 2.9% மட்டுமே என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது 2015ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு கிடைத்த ரூ.36,686 கோடி முதலீட்டில் கால்வாசிக்கும் குறைவாகும். இதே காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீடு ரூ.51,823 கோடியிலிருந்து, ஒரு லட்சத்து 29,697 கோடியாக, அதாவது கிட்டத்தட்ட 3 மடங்காக அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலம் ஈர்த்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு ரூ.16,138 கோடியிலிருந்து ரூ.20,666 கோடியாகவும், ஆந்திராவுக்கு வந்த முதலீட்டின் அளவு ரூ.6794 கோடியிலிருந்து ரூ.14,438 கோடியாகவும் உயர்ந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொழில் முதலீடுகளும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் குவிந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனைத்து வகையான முதலீடுகளும் குறைந்து வருவது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம் எனக் கூறியுள்ள அவர், “தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உரிய அனைத்து சூழல்களும் உள்ளன; அற்புதமான மனித வளமும் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் முன்வராததற்குக் காரணம் தமிழகத்தில் நிலவும் ஊழல் தான். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் தொகையில் 40% வரை கையூட்டாக வழங்க வேண்டும் என்று தமிழக ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்துவது தான் தமிழகத்தில் முதலீடு குறைவதற்கு முக்கியக் காரணம்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் தொழில் வளம் என்பதே இல்லாமல் போய்விடும்; வேலைவாய்ப்புத் திண்டாட்டம் பெருகிவிடும் என எச்சரித்துள்ள அவர் “தமிழகத்தின் நலனை அடகு வைத்து, தங்களின் சொந்த நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாளர்கள் திருந்துவதோ, தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் பணிகளில் ஈடுபடுவதோ சாத்தியமற்றது. இன்றைய நிலையில் பினாமி ஆட்சியை மக்கள் எழுச்சியால் விரட்டியடிப்பதன் மூலம் மட்டுமே தமிழகத்தை அது எதிர்கொண்டு வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்ற முடியும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

செவ்வாய் 9 ஜன 2018