மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: தமிழக அரசு அதிகாரபூர்வமாவது எப்போது?

சிறப்புக் கட்டுரை: தமிழக அரசு அதிகாரபூர்வமாவது எப்போது?

முருகேஷ்

சமூக வலைதளங்கள் தற்போது அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டன. பொழுதுபோக்கு, கேளிக்கை என்பதை தாண்டி பல்வேறு ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் தளமாக அவை உள்ளன. தனி நபர்கள் என்றில்லை, பல்வேறு நிறுவனங்களும் தங்களின் அதிகாரபூர்வ சமூக வலைதளக் கணக்கு மூலம் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுடன் பிணைப்புடன் இருந்துவருகின்றன. அந்தவகையில், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளுக்கு அதிகாரபூர்வ சமூக வலைதளக் கணக்கு என்பது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அரசின் செயல்பாடு மக்களுக்கும் தெரியவரும். மக்களும் தங்களின் குறைகளை அரசிடம் எளிதாக எடுத்துரைக்க முடியும். தமிழக அரசு இவ்விஷயத்தில் பின்தங்கியிருப்பதைக் காண முடிகிறது

பின்தங்கிய தமிழகம்

இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு உள்ளது, தமிழக முதல்வரை தவிர. யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் முதல்வருக்குக்கூட அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு உள்ளது. தினமும் அரசு சார்பில் தொடங்கப்படும் திட்டங்கள், வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் போன்றவை குறித்து அதில் பகிரப்படுகிறது. தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ட்விட்டர் கணக்குகூட உண்மையானது என்பதற்கான சரிபார்க்கப்பட்ட டிக் குறியீடு உள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பக்கத்தில் அப்படி எதுவும் இல்லை.

பிற மாநில முதல்வர்கள் தனிப்பட்ட கணக்கு மற்றும் அலுவல் சார்ந்த கணக்கு என இரண்டு கணக்குகளை வைத்துள்ளனர். அரசின் நடவடிக்கைகள் குறித்த செயல்பாடுகளை CMO எனத் தொடங்கும் தங்களின் அலுவல் கணக்கிலும், தனிப்பட்ட மற்றும் கட்சி சார்ந்த தகவல்களை தனிக் கணக்கிலும் பகிர்வார்கள்.

ஆனால், தமிழக முதல்வருக்கு இரண்டுமே ஒன்றுதான். அரசின் திட்டங்கள் ஆகட்டும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசும் அரசியல் கருத்துகள் ஆகட்டும், கட்சியில் நிர்வாகிகள் நீக்கப்படுவது, சேர்க்கப்படுவது போன்ற தகவல்கள் ஆகட்டும், கட்சிப் பிரசாரத் தகவல்கள் என அனைத்துமே ஒரே கணக்கில் இருந்துதான் பகிரப்படுகின்றன. கட்சி சார்பற்று இருக்க வேண்டிய முதல்வர் அரசின் செயல்பாடுகளுடன் தனது கட்சி செயல்பாடுகளையும் ஒரே கணக்கின்மூலம் பகிர்வது தமிழகத்தில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் எந்த அரசுத் துறைகளுமே இணையத்தில் ஆர்வம்காட்டுவதில்லை என்பதும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்று.

இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் காவல் நிலையத்துக்கான விருதை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். ஹைதராபாத், லக்னோ மாவட்டங்களைச் சேர்ந்த காவல் நிலையங்கள் அடுத்த இடங்களைப் பிடித்தன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், 2ஆம் 3ஆம் இடங்களைப் பிடித்த மாவட்டக் காவல் துறையினர் அதிகாரபூர்வக் கணக்குகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், முதலிடம் பெற்ற தமிழகக் காவல் துறையின் அதிகாரபூர்வப் பக்கம் குறிப்பிடப்படவில்லை. இதற்குக் காரணம், தமிழகக் காவல் துறைக்கென்று அதிகாரபூர்வக் கணக்கு என்று ஒன்று இல்லை என்பதே.

வழிகாட்டும் மத்திய அரசு

தேசிய அளவில் சமூக வலைதளச் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகவே உள்ளது. பிரதமரின் தினசரி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் உடனடியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்படுகின்றன. இதேபோல் ஏனைய மத்திய அமைச்சர்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் பகிரப்படுகின்றன. இதன்மூலம் மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அரசுக்கும் மக்களுக்குமான நெருக்கமும் அதிகரிக்கிறது. சில நேரங்களில் தான் என்ன பேச வேண்டும் என சமூக வலைதளம் மூலம் மக்களிடமே பிரதமர் கேட்டறிந்து கொள்கிறார்.

பல சந்தர்ப்பங்களின் சமூக வலைதளம் மூலமாக மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். விசா சிக்கல்கள், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்பது என ட்விட்டரில் தனக்கு விடுக்கப்படும் கோரிக்கைகளை அதன் தன்மையறிந்து அவர் உடனுக்குடன் நிறைவேற்றிவருகிறார்.

எல்லா மாநிலங்களிலும் முனைப்பு

தேசிய அளவில் மட்டுமல்லாது மாநிலங்கள் அளவிலும் அரசுக்கும் சமூக வலைதளங்களுக்குமான நெருக்கம் அதிகரித்துவருகிறது. மாநில முதல்வர்கள் பலர் தனிப்பட்ட கணக்கு அலுவல்ரீதியான கணக்கு என இரு கணக்குகளை வைத்திருக்கிறார்கள். பிற துறைகளும் இதில், முனைப்புடன் இருக்கின்றன. பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகர போலீஸார் தங்களின் அதிகாரபூர்வச் சமூக வலைதளக் கணக்குகள் மூலம் மக்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவுகின்றனர். குற்றவாளிகளின் புகைப்படங்களைப் பகிர்வது, காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள், போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்கள், சாலை விதிகளை மதிப்பதால் ஏற்படும் நன்மைகள் என ஆன்லைனில் அப்டேட்டாக உள்ளன. ஆனால், தமிழக போலீஸார் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கோவை காவல் நிலையச் சம்பவம் இதற்கு ஓர் உதாரணம்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சமூக வலைதளத்தின் வளர்ச்சி என்பது அபரிமிதமானது. அரசியல் தலைவர்கள் தங்களின் குடிமக்களுடன் எளிதாகத் தொடர்புகொள்கின்றனர். ஆசியாவைப் பொறுத்தவரை மற்ற நாடுகளைவிட இந்தியா இதில் முன்னணியில் உள்ளது. பிரதமர் மோடி ஆட்சியின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், தகவல் தொழில்நுட்பத்தில் அவர் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று. அவரது நகர்வுகள் ஒவ்வொன்றும் ட்விட்டர், ஃபேஸ்புக், தனக்கான பிரத்யேக செயலி போன்றவற்றில் பொதுமக்களுடன் பகிரப்படுகின்றன. மத்திய அமைச்சர்களும் பிற மாநில முதல்வர்களும் இவ்விஷயத்தில் சுறுசுறுப்பாகவே செயல்படுகின்றனர்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

செவ்வாய் 9 ஜன 2018