மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

டிரஸ்ட் இல்லாததால் ‘டிரஸ்டி’ பதவி விலகல்!

டிரஸ்ட் இல்லாததால் ‘டிரஸ்டி’ பதவி விலகல்!

பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது நடிகர்கள் சங்கம் மலேசியா வரை சென்று நடத்திய நட்சத்திரக் கலை விழா. தற்போது அதன் எதிரொலியாக நடிகர்கள் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் போட்டியிட்டு டிரஸ்டியாகப் பதவியேற்ற எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்திருக்கிறார்.

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவுக்குத் திரையுலகிலுள்ள சிலர் அழைக்கப்படவில்லை. அழைக்கப்பட்டவர்களில் பலர் நன்முறையில் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மின்னம்பலத்திலும், விழாவில் ஏற்பட்ட சொதப்பல்கள் குறித்து எழுதியிருந்தோம்.

கடந்த 7ஆம் தேதி “வெளிநாட்டு நட்சத்திரக் கலை விழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமமாக மிக கவுரவமாக நடத்தி, நடிகர்கள் சங்கக் கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது. HATS OFF TO U CAPTAIN” என்று எஸ்.வி.சேகர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, பதவி விலகுவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அவரது அறிக்கை பின்வருமாறு:

நம் சங்கத் தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை, ஆலோசனைகள், வழி நடத்துதல் தேவை எனக் கேட்டுக்கொண்டீர்கள். ஆனால், ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்தபோது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல், எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை.

குறிப்பாக நம் நடிகர்கள் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோட்டை ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகாரைப் பற்றிக் கேட்டபோதுகூட, அப்படி ஒன்றுமே இல்லையென்று விஷாலும் கார்த்தியும் சொன்னார்கள். ஆனால், உடனடியாக வழக்கும் ஸ்டேவும் வந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த 18 கிரவுண்டுக்கும், அந்த ரோடுக்கும் உரிமையாளர் என்ற ஆதாரம் நம்மிடம் உள்ளதா என்று தெரியவில்லை. எதிர்தரப்பினர் அங்கு ரோடு உள்ளது என ஆதாரங்கள் காட்டியும் தீர்ப்பு நடிகர் சங்கத்துக்கு ஆதரவாக வந்துள்ளது. ஆனால், எதிர்த் தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிகிறேன். அங்கு தீர்ப்பு வேறுவிதமாக வந்தால் நடிகர் சங்கம் இதுவரை செலவழித்த பணம் என்ன ஆகும்?

அதேபோல் சமீபத்தில் நடந்த மலேசியக் கலை விழாவிலும் பல குளறுபடிகள். பல கலைஞர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் எனத் தெரிந்துகொண்டேன். குறிப்பாக இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், ஆர்.சுந்தரராஜன், பார்த்திபன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் போன்ற பலர். இதன் பெயர்தான் நிர்வாகக் கோளாறு. இப்படி அரைகுறையாகச் செய்வதற்கு எதற்கு பார்க் ஹோட்டலில் இத்தனை நாட்கள், இவ்வளவு ரூம் போட்டு நம் டிரஸ்ட் பணம் செலவழிக்கப்பட வேண்டும்?

ரஜினி, கமலுக்கு மரியாதை கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அதே மரியாதையை அனைத்து மூத்த கலைஞர்களுக்கும் கொடுக்கத் தெரிய வேண்டும். அதை எப்படி என்று நம் முன்னாள் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் திருந்த வாய்ப்பில்லை. மலேசியாவில் பிச்சை எடுக்க வந்த தமிழ் நடிகர்கள் என்ற தலைப்பிட்டு வந்த [பத்திரிகைச் செய்தியைப் பார்க்கவில்லையா?[(http://www.seithipunal.com/cin ema/malasiyan-news-paper-stron gly-oppose-tamil-actors)

இத்தனை பணம் மலேசியத் தமிழர்கள் மூலம் சம்பாதிக்கும் நாம், நலிந்த மலேசிய தமிழ்க் குழந்தைகள் கல்விக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் குறைந்து போய்விடுவோமா?

பணம் தேவைதான். அது சுய மரியாதையை விற்று சம்பாதிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் நடிகர்கள் சங்க மூத்த நாடகக் கலைஞர்கள் சிலரை அழைத்துச் சென்று அரிச்சந்திர மயான காண்டம் காட்சி நடித்திருந்தால் (15 நிமிடங்கள் மட்டுமே வரும்), நீங்கள் நாடகக் கலைஞர்களை உண்மையாக நேசிக்கிறீர்கள், ஓட்டுக்காக அல்ல என்றாவது தெரிந்திருக்கும். அதையும் செய்யவில்லை. ஆகவே, என் மனசாட்சிக்கு எதிராக நம் சங்கத்தின் பக்கம் ஏற்படும் தவறுகளுக்கு நான் உடன்பட முடியாது என்பதாலும், டிரஸ்டி என்ற பதவி நடிகர்கள் சங்கத்தைப் பொறுத்தவரையில் ஓர் அலங்காரப் பதவியாக கருதப்படுவதாலும், மற்ற சக கலைஞர்களுக்கு உங்களால் ஏற்பட்ட அவமரியாதைக்காகவும் எனக்களிக்கப்பட்ட டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்கிறேன்.

இதுவரை என் இ-மெயிலில் குறிப்பிட்ட பதில் இல்லாக் கேள்விகளுக்காகவும், என் ஒப்புதல் இல்லாத செயல்பாடுகளுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் இக்கடிதம் மூலம் உறுதி செய்கிறேன். என் கடிதத்தின் மூலம் ரோஷப்பட்டு நீங்கள் அனைவரும் ராஜினாமா செய்தாலும் நம் சங்கக் கட்டடம் கட்டப்படும்.

அடுத்த முறை வரும் தேர்தலில் நீங்கள் யாரும் ஜெயிக்கவும் முடியாது எனக் கூறிக்கொள்கிறேன். இவ்வுலகில் யாரும் நிரந்தரமில்லை என்பதைக் காலமும் அனுபவமும் உங்களுக்கு உணர்த்தும். பொது வாழ்வில் எவ்வளவு நேர்மையாக வாழ வேண்டும் என்று நம் மூத்த கலைஞர் திரு.சிவகுமார் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்

S VE SHEKHER

08-1-2018

IF GOD BE WITH US, WHO CAN BE AGAINST US.

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

செவ்வாய் 9 ஜன 2018