மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: 2017இல் ஆட்டம்கண்ட ஐடி துறை!

சிறப்புக் கட்டுரை: 2017இல் ஆட்டம்கண்ட ஐடி துறை!

அனன்யா பட்டாச்சார்யா

இந்தியத் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஒரு கனவு ஆண்டாகவே இருந்திருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு துறையாக இந்தியத் தொழில்நுட்பத் துறை இருந்தது. 160 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடி துறை கடந்த ஒரே ஆண்டில் (2017) 56,000க்கு மேலானவர்களின் பணிநீக்கத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. 2008ஆம் ஆண்டைவிட ஒரு மோசமான சூழலை ஐடி துறை கண்டிருக்கிறது என்று சில வல்லுநர்களும் கூறுகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளும் சரிந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேலாகச் சரிந்துள்ளது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஓரளவுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஐடி துறையில் முன்னிலையில் இருக்கின்றன. ஆனால், இந்த நிறுவனங்களிலும் பணியிழப்பு முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. டெக் மஹிந்த்ரா நிறுவனம் சில மூத்த பணியாளர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால்தான் பணியிழப்புகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ‘பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் சந்தையில் தங்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்’ என்கிறார் இன்செடோ நிறுவனத்தின் மனிதவளத் துணைத் தலைவர் அருண் பால்.

“சாதாரணமாக முந்தைய ஆண்டுகளில் ஒரு சதவிகித பணியிழப்புகள் ஐடி நிறுவனங்களில் நடைபெறும். ஆனால், 2017ஆம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்களில் 2 மற்றும் 6 சதவிகிதப் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்கிறார் ஆல்கா திங்க்ரா. இவர் டீம்லீஸ் சர்வீஸ் நிறுவனத்தின் பொது மேலாளராக உள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஜனவரி மாதத்தில் மட்டும் 9,000 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளது. “பத்து பேர் இருந்த இடத்தில் மூன்று பேர் இருந்தால் போதுமானதாக உள்ளது. உங்களிடம் மென்பொருள் இல்லை என்றால் சிலர் பயனடைவார்கள்” என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூறியிருந்தார் விஷால் சிக்கா. இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்.

காக்னிசன்ட் நிறுவனம் 6,000 பேர் வரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தானியங்கி மயத்தால் தான் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியிழப்புகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் காக்னிசன்ட் நிறுவனம் செலவு விகிதங்களைக் குறைக்கும் விதமாகத் தானியங்கி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

ஜூலை மாதத்தில் சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவொன்று செய்திகளில் வெளிவந்தது. அதில், நிறுவனத்தின் ஹெச்.ஆர். தனது ஊழியர் ஒருவரிடம் அடுத்த நாள் 10.00 மணி முதல் வேலைக்கு வர வேண்டாம் என்கிறார். மீறி வந்தால் வெளியேற்றப்படுவீர்கள் என்கிறார். இந்த ஆடியோ பதிவு ஒருவகையில் ஐடி நிறுவனங்களின் மீது வெறுப்பை உண்டாக்கியது.

இந்தப் பணியிழப்புகள் ஐடி என்ற பிரமிடின் கீழ்நிலையில் உள்ளவர்கள் மட்டுமன்றி மூத்த ஊழியர்களும் வெளியேற்றப்படுகின்றனர். மூத்த ஊழியர்களைப் பொறுத்தவரை திறனை மேம்படுத்திக்கொள்ளவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

டீம்லீஸ் நிறுவனத்தின் தொழில் துறைத் தலைவர் என்.சிவக்குமார் கூறுகையில், “தானியங்கி மயம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளால் ஆட்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் நிறுவனத்தின் செலவு குறைகிறது. தொடர்ச்சியாகப் பணியும் நடைபெறுகிறது. மனித ஆற்றலைப் பயன்படுத்திச் செய்யும் பணியை விடக் கூடுதலான பணியை இயந்திரங்கள் மேற்கொள்கின்றன” என்றார்.

பணியமர்த்துதல் பற்றிய மோசமான செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. இதுகுறித்து திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனமான டேலன்ட்ஸ்பிரின்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தானு பால் கூறுகையில், “கடந்த ஆண்டில் ஐடி நிறுவனங்கள் கேம்பஸ் முறையில் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வது 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை சுருங்கிவிட்டது. தனித்திறன் வாய்ந்தவர்கள் மட்டுமே கடந்த ஆண்டில் நியமிக்கப்பட்டனர். திறன் குறைந்தவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்” என்றார்.

பல ஆண்டுகளாகவே ஐடி நிறுவனங்கள் திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பணிநீக்கம் செய்வதை வழக்கமாகவே கொண்டுள்ளன. தொலை உணர் தொழில்நுட்பம், வீடியோ கான்ஃபரன்சிங், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வளர வளர ஆட்குறைப்பும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

ஐடி துறையில் வேலை என்ற கனவு அடுத்த சில ஆண்டுகளில் லாபகரமானதாக இருக்காது என்கிறார் டி.டி.மிஸ்ரா. இவர் கார்ட்னர் சந்தை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராவார். ஐடி துறை ஊழியர்களின் பணிக்கு ஓர் உத்திரவாதம் இல்லாத இந்தச் சூழல் இன்னும் சில காலத்துக்கு நீடிக்கலாம் என்றும் கார்ட்னர் கூறுகிறது. இன்னும் பல காலத்துக்குத் தானியங்கி முறை அதிகரித்தால் அடித்தட்டு பணிகளில் உள்ள பணியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். திறன் மிக்க பணியாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்கப் போவதில்லை. அதாவது வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு மடங்கு திறன் குறைந்த பணியாளர்கள் ஐடி துறையிலிருந்து வெளியேற்றப்படலாம். அண்மையில் வெளியான ஹெச்.எஃப்.எஸ் ஆய்வறிக்கையில், இந்தியாவில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான தொழில்நுட்பவியலாளர்கள்தான் அதிக திறன் தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளத் தகுதியானவர்கள் என்று கூறுகிறது.

இதுபோன்ற திடீர் பணிநீக்கத்தால் பணியாளர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்குப் பணத்தட்டுப்பாடு, பதற்றம், மன அழுத்தம், சுயமரியாதை குறைவு போன்றவை ஏற்படுகின்றன. “பெரும்பாலான ஐடி துறையினர் பணிக்காக வேறு பகுதிகளிலிருந்து நகரங்களுக்குக் குடியேறியவர்கள். குறைந்தபட்ச சமூக ஆதரவைப் பெற்றவர்களாவர்” என்று டைம்ஸ் மேகஸின் இதழுக்கு பெங்களூர் நியூரோ சயின்ஸ் அண்ட் ஹெல்த் நிறுவனத்தின் பி.என்.கங்காதர் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், “இவ்வாறு வந்து தங்கியிருப்பவர்கள் அதிகமாகத் தனித்து இருப்பவர்களாகவே உள்ளனர். திருமணமாகி குடும்பத்தோடு இருப்பவர்களும் குறைவாகவுள்ளனர். இவ்வாறு இருப்பவர்களுக்கு திடீரென பணிநீக்கம் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் சில சமயங்களில் அவர்களின் முடிவு தவறான பாதைக்கும் அழைத்துச் செல்ல வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்ற பிறகு, இந்தியர்களுக்கு ஹெச் 1-பி விசா அளிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கம்ப்யூட்டர் புரோகிராம் தொடர்பான பணிகளுக்கு ஹெச் 1-பி விசா எடுத்துச்செல்வது கடினமானது. அதேசமயம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும்விதமாக ‘அமெரிக்காவில் தயாரிப்போம், அமெரிக்கர்களைப் பணிக்கு அமர்த்துவோம்’ என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுவும் அமெரிக்கா சார்ந்த ஐடி துறை தொழில்களில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை நசுக்கியது. நவம்பர் மாதத்தில் அமெரிக்கப் பணியாளர் சட்டத்தில் சில திருத்தங்களையும் கொண்டுவந்தது.

அமெரிக்காவின் இத்தகைய விசா கட்டுப்பாடுகளால் போலி விசாக்களைப் பயன்படுத்தித் தங்கியிருப்பவர்களும் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தனர். அமெரிக்காவில் செயல்படும் இந்திய ஐடி நிறுவனங்களும் அமெரிக்கர்களைப் பணிக்கு அமர்த்தத் திட்டமிட்டன. வரும் ஆண்டில் தானியங்கி மயம் 70 சதவிகிதம் அதிகரிக்கக் கூடும் என்று சந்தை ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

“அதேபோல வளர்ந்த நாடுகள் தங்களது குடிமக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளன. எதிர்காலத் திட்டங்களை வகுக்கின்றன. இந்தியா அதிக மதிப்புடைய பணிகளை உருவாக்கியுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான பணிகளை உருவாக்கவில்லை” என்கிறார் பால்.

இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடருமென்றும், அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில் தானியங்கி மயம் போன்ற நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்றும் மிஸ்ரா கூறுகிறார். அதேசமயம் 2020ஆம் ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தற்போதைய சிக்கல்கள் சரியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி: ஸ்க்ரோல்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 9 ஜன 2018