மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

இசை வலம்: இசை விழாவுக்குச் சிறப்பூட்ட என்ன செய்யலாம்?

இசை வலம்: இசை விழாவுக்குச் சிறப்பூட்ட என்ன செய்யலாம்?

கிருஷ்ண பாகவதர்

மனம் குளிர மழை பொழிந்து நீர்நிலையெல்லாம் நிரம்பும் சமயத்தில் மழையினால் ஏற்படும் மேடு பள்ளங்கள் எவரின் கவனத்தையும் அதிகம் ஈர்க்காது. மழை முடிந்து அது கடந்த பிறகு, நிதானமாக அசை போடத் தொடங்கும் நம் மனது, அடுத்த வருட மழைக்குத் தேவையான ஆயத்தங்களை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்ய வேண்டும் என எண்ணத் தொடங்கும்.

சென்னையில் மட்டும் இசை மழைக் காலமாகத் திகழும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் காலை முதல் மாலை வரை அரங்கத்துக்குள் கொட்டும் இசை மழை முடிவுக்கு வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், அடுத்த வருடத்துக்காக எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் பற்றிச் சற்று விவாதிப்பது அவசியம்.

இசை விழாவின் மேன்மைகளும் அது தொய்வின்றித் தொடர வேண்டியதன் அவசியங்களும் பலரால் பலமுறை எடுத்துக் கூறப்பட்டுவிட்டதால் நேரடியாக விஷயத்துக்கு வருவோம். அந்த நிகழ்வு அண்மைக்காலமாக, குறிப்பாக, இவ்வருடம் சந்திக்க நேர்ந்த சில முக்கியப் பிரச்னைகளை முதலில் பார்ப்போம்.

காலி அரங்குகள்

மொத்தமாக நடந்த கச்சேரிகளில் பத்து சதவிகிதம் அளவுக்குக்கூட அரங்குகள் நிரம்பவில்லை. சில குறிப்பிட்ட வெகு பிரபலமான கலைஞர்களைத் தவிர்த்துப் பெரும்பான்மையான திறமைமிக்க இசைக் கலைஞர்கள், பாதி நிரம்பும் அரங்கே தனக்குக் கிடைத்த பெரும் பரிசாகக் கருதிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். நன்றாகப் பாடிய, அதிகம் அறிந்திராத சில பாடகர்களின் மாலை 4 மணி கச்சேரிகூட பத்து ரசிகர்களுடன் மட்டுமே நடந்தது. கேன்டீனில் இருக்கும் பணியாளர்கள், உடன் இருக்கும் பக்க வாத்தியக்காரர்கள் ஆகியவர்களின் எண்ணிக்கை அளவுக்குக்கூட வராத ரசிகர்களே இசை விழாவின் தலையாய பிரச்னை.

உள்கட்டமைப்பு போதாமை

நினைத்த நேரத்தில் விரும்பிய இடத்தில் தேவைப்படும் விதமாக, ஸ்மார்ட் போன், நோட்புக் போன்ற சாதனங்கள் மூலமும் முகநூல், வாட்ஸ்அப் இன்ன பிற ஏராளமான சமூகதளங்கள் வாயிலாகவும் கர்னாடக இசை உட்பட அனைத்து இசைகளையும் கேட்கும் நல்ல வாய்ப்பை எளிதாகப் பெற்றுள்ள இசை ரசிகர்கள், அதையெல்லாம் விட்டு இசை அரங்குக்கு வந்து நேரில் கச்சேரிகளை ஏன் கேட்க வேண்டும்? ‘லைவ்’ என்று கூறப்படும் பாடும் / வாசிக்கும் கலைஞர்கள் முன் அமர்ந்து அவர்களின் உடல் மொழியையும் இசையையும் ரசிப்பது அலாதியான சுகம். அங்கு வியாபித்திருக்கும் அமைதியான, அமானுஷ்யமான, சுகமான சூழலில் உள்ளத்தினுள் புகும் கர்னாடக சங்கீதம் எழுத்தில் வடிக்க இயலாத ஏகாந்த அனுபவம்.

இந்த இனிய அனுபவத்தை ஒரு சில பெரிய அரங்குகளில் மட்டுமே அடைய முடிகிறது. குளிரூட்டப்பட்ட வசதியான இருக்கைகள் உடைய, வெளிச்சத்தம் இடையூறு செய்யாத, மியூசிக் அகாடமி, நாரத கான சபா, வாணி மஹால், கர்னாடக சங்க அரங்கு போன்ற சில பெரிய அரங்குகள், ராகசுதா, பேத்தாச்சி ஆகிய சிற்றரங்குகள் தவிர்த்துப் பெரும்பான்மையான அரங்குகள் கர்னாடக இசையை அதன் முழுப் பரிமாணத்தில் ரசிக்க ஏதுவாக இல்லாதது ஒரு முக்கியப் பிரச்னை. பார்த்தசாரதி சபா போன்ற பாரம்பரிய சபா அமைப்புகூட இதுபற்றி ஏதும் செய்ய இயலாமல் இருப்பதை அங்கு நடந்த சில நல்ல கச்சேரிகளின்போது கேட்க நேர்ந்த வெளிச்சத்தங்கள் எடுத்துக்காட்டின.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் விளம்பரம்

சீசன் டிக்கெட், தினசரி டிக்கெட் ஆகியவை ஒரு சில சபாக்கள் தவிர மிக அதிகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நியாயமாகவே இருந்தன. ஆனால், இந்த விவரம் சரியான முறையில் அனைத்துக் கர்னாடக இசை ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கப்படவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபல பாடகர்களின் நிகழ்ச்சிகள் ஒரே தினத்தில், ஒரே நேரத்தில் பல சபாக்களில் நடைபெறும்போது ரசிகர்களுக்கு ஏற்படும் குழப்பம் எல்லாப் பாடகர்களையும் பாதிக்கிறது.

மேலே கூறப்பட்ட பிரச்னைகளுக்கான தீர்வாக எதையும் தீர்மானமாக உடனே முன்வைக்க முடியாவிட்டாலும் சில பரிந்துரைகளை முன்வைக்கலாம். குணம் நாடி குற்றம் நாடி அவற்றில் மிகை நாடி எது சாத்தியமோ அதைச் செய்யவோமாக.

பிரசாரம்

வீடியோக்களும் கம்ப்யூட்டர்களும் திரை அரங்குக்கு வந்த ரசிகர்களைக் குறைத்தாலும், அரங்கத்துக்கு வந்து காணும் சினிமா அனுபவமே அற்புதம் என்று சொல்லப்படுவதுண்டு. அதுபோலவே, நல்ல சங்கீதம் என்பது நேரில் கேட்டு அனுபவித்து உணர்வதே என்ற பேச்சு பல தளங்களிலும் தொடர்ந்து எழ வேண்டும். இடைவிடாது செய்யப்படும் இத்தகைய பிரசாரம் இன்னும் அதிக ரசிகர்களை இசை விழா சமயத்திலாவது அரங்கத்துக்கு அழைத்து வரும்.

இருக்கைகள், ஒலி அமைப்பு

அதிக இருக்கைகள், ஆடம்பரக் கட்டட அமைப்பு என்றில்லாவிட்டாலும் ஒலி ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒருங்கிணைப்பு செய்யக்கூடிய சிறிய சிறிய இசை அரங்குகள் அடையாளம் காணப்பபட வேண்டும். அரங்கத்துக்கு வந்து கேட்கும் கர்னாடக இசை அனுபவம் முற்றிலும் புதியதாகவும் புத்துணர்வு அளிக்கக்கூடியதாகவும் விளங்க வேண்டும்.

கொல்கத்தா நகரில் ரவீந்திரநாத் இசை வாரம் கொண்டாடப்படும் தருணத்தில் அந்த நிகழ்வின் தாக்கத்தை அங்கு உள்ள ஒவ்வொரு சந்திலும் சாலை சந்திப்புகளிலும் தெரிந்துகொள்ள முடியும். அந்த இசை பற்றிய அறிமுகம் இல்லாத, ரசிக்க இயலாத சாதாரண மக்கள் மற்றும் அங்கு வசிக்கும் இதர பிரதேச மக்கள் உட்பட அனைவரின் மேல் அந்த இசையின் நிழல் சிறிதாவது படர்ந்திருக்கும். அந்தச் சூழலை லட்சியமாகக் கைக்கொண்டு இயன்றவரை செயல்பட்டால் இசை மழைக்காலம் மேலும் ரம்மியமானதாக மாறும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

செவ்வாய் 9 ஜன 2018