படமாகும் மெரினா புரட்சி!

பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாண்டிராஜ் தயாரிப்பாளராகவும் வெற்றிக்கண்டுள்ளார். தற்போது அவர் தனது ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார்.
எம்.எஸ்.ராஜ் என்பவர் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு ‘மெரினா புரட்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘கலாசாரத்தைக் காப்பாற்ற ஒரு போராட்டம்’ என்ற டேக் லைன் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழரின் பாரம்பர்யத்தை பறைசாற்றியதோடு மட்டுமல்லாமல் உலக அளவில் தமிழனை தலைநிமிர செய்தது. எனவே, ஜல்லிக்கட்டை மையமாகக்கொண்டு பல படங்கள் உருவாகிவருகின்றன. அந்தவகையில் இந்தப் படமும் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்துக்கு அல்ரூஃபியான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.