மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜன 2018

இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராட்டம்!

இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராட்டம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் மத்திய அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றக் கோரியும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

திராவிடர் கழக கோயம்புத்தூர் மண்டல கலந்துரையாடல் கூட்டம் நேற்று (ஜனவரி 8) நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ‘சாதி வெறியும் மத தீவிரவாதமும் தமிழகத்தில் பெருகிவரும் சூழலில் நாத்திகம்தான் மனிதநேயத்தை உருவாக்கும்’ என்று தெரிவித்தார்.

“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியபோது, அரசு வேலைவாய்ப்புகளில் 12-14% மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் குறிப்பிட்டதைவிட, இது குறைவானதாகும். எனவே, இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவோடு, இந்த விவகாரத்தை தேசிய அளவில் எழுப்ப உள்ளோம். இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பின்பற்ற வேண்டியது பற்றி விளக்கங்கள் அளிப்பதோடு, இதர போராட்ட முறைகளையும் கையில் எடுக்கவிருக்கிறோம்.

கேரளாவில் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அமல்படுத்தியது போல, தமிழகத்திலும் அமைக்கப் பாடுபடுவோம். ஏற்கனவே, மாநிலம் முழுவதும் 206 அர்ச்சகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார் வீரமணி.

தற்போது தமிழகத்தை வாட்டிவரும் போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தம் பற்றி பேசியவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் போக்கைக் கண்டிப்பதாகக் கூறினார். “அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை. நீதிமன்றங்களுக்கென்று ஒரு எல்லை உண்டு. எனவே, அரசு இந்தப் பிரச்னையில் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக தீர்வு காண வேண்டும்” என்றார்.

தமிழக ஆளுநரின் முதல் சட்டமன்ற உரையை, அமைச்சரவையினால் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார் வீரமணி. “தமிழகம் மருத்துவத்துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என்று ஆளுநர் சொல்லியிருப்பது வேடிக்கையானது. இதை அவர் தனது ஆய்வுகளில் உறுதிப்படுத்தினாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியல் தொடங்கியிருப்பது குறித்தான கேள்விக்கு, “ஆன்மிகம் என்பது சாமியார்களின் வேலை. ஆட்சி செய்வது அரசியல்வாதிகளின் வேலை. இரண்டுக்கும் தொடர்பு இல்லை. அரசியல்வாதிகள் நல்ல நடிகர்களாக இருந்திருக்கிறார்கள். நடிகர்கள் நல்ல அரசியல்வாதிகளாக இருப்பார்களா?” என்று பதிலளித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, திருச்சியில் மூன்று நாள்கள் நடந்த உலக நாத்திகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார் வீரமணி.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 9 ஜன 2018