பியூட்டி ப்ரியா: சருமத்தை அழகாக்கும் சாக்லேட் ஃபேசியல்!


ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லா சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 100 கிராம் சாக்லேட்டில் 30 – 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது.
சாக்லேட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லேட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல ‘தீனி’ கிடைத்துவிடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக்கொள்ளும். இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லேட்டைத் தவிர்ப்பதே நல்லது. ஆனால், அந்த சாக்லேட்டைக் கொண்டு ஃபேசியல் செய்து அசத்தலாம்.
சாக்லேட்டில் உள்ள கோகோ என்ற பொருள் சருமத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பணியாற்றுகிறது.
இது எல்லாவித சருமங்களுக்கும் உகந்தது.
தோலில் ஈரப்பதத்தை நிலைக்க செய்கிறது.
வயதான தோற்றத்தைத் தடுக்கிறது
சருமத்தை மென்மையாக மாற்றுகிறது.
கோக்கோ பவுடருக்கு மாற்றாகக் கறுப்பு சாக்லேட்டைப் பயன்படுத்தலாம்.
சாக்லேட்டை double boiling முறையில் உருகவைத்து அதோடு 1 டீஸ்பூன் தயிர், தேன் சிறிதளவு - வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் - சேர்த்து நன்கு கலந்து முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.
கண்களைச் சுற்றி சிறிது இடைவெளிவிட்டு பூசவும். இளம் சூடான நீரில் முகத்தைக் கழுவவும்.