மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

வேலை நிறுத்தம்: எங்களைப் புரிந்துகொள்ளுங்கள்!

வேலை நிறுத்தம்: எங்களைப் புரிந்துகொள்ளுங்கள்!

தொழிற்சங்கத் தலைவர் பேட்டி

தமிழக போக்குவரத்துறை ஊழியர்களுக்குக் கிடைக்கவேண்டிய ரூ 7 ஆயிரம் கோடியை தமிழக அரசிடம் கேட்டும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்கவேண்டும் என்றும் கடந்த ஐந்து நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறார்கள்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிடிப்புத் தொகையை கடந்த ஏழுவருடமாகக் கரைத்துவிட்டது தமிழக அரசு, இதனால் ஓய்வுபெறும் தொழிலாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைப் பெறமுடியாமல் போராடிவருகிறார்கள், கடந்த ஆறுவருடமாக, தொழிலாளர்களின் கோரிக்கையை செவிகொடுத்துக் கேட்கவில்லை நிலையில்லா அரசு.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுத்துவருகிறார்கள், அரசு ஊழியர்கள் சங்கமும் ஆதரவுகரம் நீட்டியுள்ளது.

ஒரு பேருந்து வைத்து ஓட்டும் தனியார் முதலாளிகள் ஓட்டுநர், நடத்துநர் , செக்கர், கிளீனர் போன்றவர்களுக்குக் கைநிறையை சம்பளம் கொடுத்து லாபகரமாகப் பேருந்துகளை இயக்கும்போது, சுமார் 22,500 பேருந்துகளை வைத்தும் ஒரு லட்சம் ஓட்டுநர்கள் நடத்துநர்கள், 50 ஆயிரம் அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் மெக்கானிக் , ஒர்க் ஷாப், இதையெல்லாம் நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருந்தும் ஏன் இந்த நிலை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு?

தமிழக அரசு போக்குவரத்து துறை சங்கங்களின் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நைனார் அவர்களிடம் மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை சார்பாக கேள்விகளை முன் வைத்தோம்.

தமிழக போக்குவரத்துக் கழகம் எந்த நோக்கத்தில் எப்போது துவக்கப்பட்டது?

மு.கருணாநிதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றபோது 1972ல், மக்கள் நலன் கருதி சேவைத்துறையாக அரசு போக்குவரத்துக் கழகமாக உருவாக்கினார், போக்குவரத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனைகளின் முயற்சியோடு.

கடந்த காலங்களில் போக்குவரத்து துறை லாபத்தை ஈட்டியுள்ளதே!

அப்போது டீசல் விலை வருடம் ஒருமுறை, அல்லது 2 வருடத்திற்கு ஒருமுறை விலையேறும், அதுவும் 5 பைசா, பத்து பைசா என்று, இப்போது அப்படியில்லை கட்டுப்பாடில்லாமல் நாள்தோறும் விலையை ஏற்றுகிறார்கள். ரூபாய் கணக்கில், அதுக்காக நாள்தோறும் பேருந்துக்கட்டணத்தை உயர்த்த முடியாது.

மாதந்தோறும் சம்பளம் வாங்கும் அரசு போக்குவரத்துறை ஊழியர்கள் சம்பளம் போதவில்லை என்று அடிக்கடி போராட்டம் செய்வதாக மக்கள் முகம் சுளிக்கிறார்களே?

உண்மையிலே போக்குவரத்துக் கழகம் ஊழியர்கள் வாங்கும் சம்பளம் மிக மிகக் கேவலமானது. ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்துள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 285 கொடுத்துவந்தார்கள். வருடக்கணக்கில், போராடி ரூ 435 பெற்றுகொடுத்தோம். நிரந்த ஊழியர்கள் மாதம் ரூ 14 ஆயிரம்தான் சம்பளம் வாங்குகிறார்கள். தனியார் பேருந்துகளில் தினம் ஆயிரம் ரூபாய் மற்றும் கலெக்ஷன் படி வாங்குகிறார்கள். ஏன் நகராட்சி, பேருராட்சிகளில் ஜீப் ஓட்டுநர்கள் வாங்கும் சம்பளம்கூட அரசு பேருந்து ஓட்டுநர்கள் வாங்கவில்லை.

தனியார் பேருந்துகளில் லாபம்வரும்போது அரசு பேருந்துகளில் இழப்புகள் ஏற்பட என்ன காரணம்?

தயவு செய்து தனியார் பேருந்துகளையும், அரசு பேருந்துகளையும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பேருந்தில் 45 பேர் பயணிக்கிறார்கள், 300 கிலோமீட்டர் தூரம், ஒரு டிக்கட் கட்டணம் ரூ 350 வசூலிக்கப்படுகிறது. ரூ 19 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரையில் வருமானம் வருகிறது. அதே பேருந்து சென்னையில் 300 கிலோமீட்டர் ஓடுகிறது 1500 பேர் பயணிக்கிறார்கள் வருமானம் 6ஆயிரத்திலிருந்து 7ஆயிரம் வரையில்தான் வருகிறது.

300 கிலோமீட்டர் தூரம் 45 பேர் பயணம் செய்தால் அதிகமாக லாபம் வருகிறது, அதே 300 கிலோமீட்டர் தூரம் சிட்டிக்குள் ஓடுகிறது 1500 பேர் பயணிக்கிறார்கள் வருமானம் குறைவாக வருகிறது.

தனியார் பேருந்துகள் மக்கள் சேவை செய்வதில்லை, வருமானம் குறைவான வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கமாட்டார்கள், அரசு போக்குவரத்துக்கழகம் மட்டும்தான் மக்கள் நலன் கருதி இயக்கப்படுகிறது. இரவு நேரத்தில் நகரத்திலிருந்து கிராமத்துக்கு செல்லும் பேருந்தில் இரண்டு பேர் ஏறினாலும் அழைத்துச் செல்வோம். அப்போது லாபத்தை எதிர்பார்ப்பதில்லை மக்கள் சேவையைத்தான் பார்க்கிறோம்.

மாநில அரசு மத்திய அரசிடமிருந்து ஒரு கிலோ அரிசி ரூ 8க்கு விலைக்கு வாங்கி மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறது, அதே போல் மின்சாரத்தை வெளியில் ஒரு யூனிட் 9 ரூபாய்க்கு வாங்கி மக்களுக்கு ரூ 2 க்கு விற்பனை செய்கிறது. அரசு மருத்துவமனையில் வருமானம் இல்லாமல்தான் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். அதுபோல்தான் அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு சேவைத்துறை.

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓடும் பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டாருக்கு ரூ 32 செலவாகிறது வரவு ரூ 23தான், அதாவது ஒரு கிலோமீட்டருக்கு 9 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது நாள் ஒன்றுக்கு, ஒரு கோடி கிலோ மீட்டர் தினந்தோறும் ஓடுகிறது. அப்படியென்றால் ஒரு நாளைக்கு 9 கோடி ரூபாய் இழப்புதான். அதை அரசுதான் ஈடுகட்டவேண்டும்.

அதிக இழப்புக்கு மலிந்துபோன ஊழலும் ஒரு முக்கிய காரணம். அனைவருக்கும் தெரியும் எங்கு எதில் எப்படி ஊழல் என்று. 22,533 பேருந்துகளில் 25% சதவீதம் பேருந்துகள் காலாவதியானது.

இப்போது தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகை 7 ஆயிரம் கோடியாக அதிகரிக்கக் காரணம் என்ன?

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை, ஏழு வருடம் முன்பிலிருந்து எடுத்துச் செலவுசெய்துவிட்டார்கள் அரசாங்கத்தில். தற்போது ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளிகளுக்கு ரூ 1,500 கோடி கொடுக்கவில்லை. உழைத்த ஊதியத்தில் பிடித்தம் செய்த பணத்தை கேட்டுத்தான் போராடிவருகிறார்கள். அதேபோல் பணியில் இருக்கக்கூடிய வருங்கால வைப்பு நிதியை ரூ 5500 கோடியைக் கொடுங்கள் என்றுதானே போராடிவருகிறோம், இதில் என்ன தவறு?

அரசு பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் போடுவதில்லை, விபத்துகள் அதிகமாக ஏற்படுவதால் நஷ்ட ஈடு அதிகமாக கொடுக்கும் சூழல் ஏற்பட்டு இழப்பு அதிகமாவதாகச் சொல்கிறார்களே?

அரசு பேருந்துகள் அனைத்தும் விபத்துக்குள்ளாகுவதில்லை, அதனால் அரசு பேருந்துகளுக்கு இன்சுரன்ஸ் செலுத்தத் தேவையில்லை என்று விதிவிலக்கு உண்டு. அதுவே கழகத்துக்கு லாபம்தானே.

சலுகைகள் பறிக்கப்பட்டதாக சொல்கிறீர்களே அது என்ன சலுகைகள்?

ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இரவு நேரத்தில் டிப்போவில் ஓய்வு எடுத்துவிட்டு, காலையில் 5.00 மணிக்கு டூட்டிக்கு போகும்போது ஒரு டீ கொடுத்தார்கள். அந்த டீயை கூட இப்போது நிறுத்திவிட்டார்கள். கேண்டீனில் சாப்பாடு கொடுக்கும்போது அப்பளம் கொடுத்ததை நிறுத்திவிட்டார்கள். வருடத்தில் 4 செட் சீருடை கொடுத்து தையல் கூலி கொடுப்பதையும் நிறுத்திவிட்டார்கள். விடுப்பு நாளில் டூட்டி பார்த்தால் அரை நாள் சம்பளம் கொடுக்கிறார்கள் இதுபோல் பறிக்கப்பட்ட சலுகைகளைப் பட்டியல் போட்டுச் சொல்லலாம்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் அதிகமான உழைப்புகள் கொடுத்து கிடைக்கும் மலிவான ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியைத்தான் கேட்கிறோம். ஊடகங்கள் தவறுதலாகச் சித்தரிக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தேவையில்லாமல் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவழித்து விழாகொண்டாடிவருகிறார்கள்.

உழைக்கும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மக்கள் பிரதிநிதிகள் அரசு ஊழியர்கள் சிரமங்களை உணரவேண்டும்’’ என்று முடித்தார் நைனார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 8 ஜன 2018