மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஏமாற்றமே மிச்சம்!

ஏமாற்றமே மிச்சம்!

ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிச்சமிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று கூடிய நிலையில், முதல்முறையாக சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். ஆனால் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் தமிழக அரசைப் பாராட்டும் விதமாகவே அமைந்துள்ளது, எனவே ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

ஆளுநர் உரை வழக்கமான சடங்குபோல உள்ளதே தவிர, வேறொன்றும் புதிய அறிவிப்புகள் இல்லை. தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 இல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அறிவித்த தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ன ஆயிற்று? என்ற விளக்கம் இல்லை.ஜி.எஸ்.டி. நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டு நிதி மற்ற மாநிலங்களைவிட குறைந்திருப்பது பற்றி ஆளுநர் உரையில் குறிப்பிடாதது ஏன்?. மேலும் ஆளுநர் உரையின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் கேள்வியெழுப்பினார் வைகோ.

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்தும் ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது அதிமுக அரசின் அதிகார ஆணவத்தைக் குறிக்கிறது. மத்திய அரசிடம் மாநில உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடகு வைத்து வரும் அதிமுக அரசு தயாரித்து, ஆளுநர் சட்டமன்றத்தில் படித்த உரை கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ராமதாஸ், பாமக நிறுவனர்

ஆளுநர் உரையில் ஒரே ஒரு புதிய அறிவிப்பு கூட இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. ஆளுநர் உரையால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புளங்காங்கிதம் அடைந்து கொள்வதைத் தவிர தமிழகத்திற்கும், மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை என்பதே உண்மை. ஆளுநர் உரை பினாமி அரசின் பித்தலாட்ட அரசியலை முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள் அம்பலப்படுத்துகின்றன.

உழவர்கள் நலனுக்காகவோ, மாணவர்கள் நலனுக்காகவோ, வேலைவாய்ப்பைப் பெருக்கவோ, வறட்சியைப் போக்கவோ எந்த திட்டமும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படவில்லை. மாறாக அரசுக்கு தகுதியற்ற பாராட்டுக்கள் பொழியப்பட்டிருக்கின்றன. வழக்கமான ஆளுநர் உரைகள் பழைய மொந்தையில் புதிய கள்ளாக இருக்கும். ஆனால், இந்த ஆளுநர் உரை பழைய மொந்தையில் புளித்துப்போன கள்ளாக உள்ளது.

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்

அரசின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை விளக்கிக் கூறும் மரபுசார்ந்த நிகழ்வு ஆளுநர் ஆற்றும் உரையாகும். தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் அரசியல், சமூகம், பொருளாதார பிரச்சனைகளில் ஆளுநர் உரை கவனம் செலுத்தவில்லை. மத்திய அரசால் பறிக்கப்பட்டு வரும் மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஆளுநர் உரை அக்கறைக்காட்டவில்லை. பெருமழை வெள்ளம், வர்தா புயல், ஓகி புயல், வரலாறு காணாத வளர்ச்சி, மீனவர்கள் மாயம் என பல பாதிப்புகளைத் தமிழகம் சந்தித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு உதவிட மத்திய அரசின் உதவிக் கேட்டு மாநில அரசுத் தொடர்ந்து முறையிட்டும் பலனில்லை என்பதை ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டவில்லை. இயற்கை பேரிடர் மேலாண்மை திட்டம் மூலம் நிதித் தேவை என வலியுறுத்தப்படவில்லை

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களின் கடன் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆளுநர் உரை அதனால் ஏற்படும் அபாயம் பற்றி வாய்திறந்து பேசவில்லை. திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துள்ள நிலையில் மரபுவழியில் ஆளுநர் ஆற்றியுள்ள உரை தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கவில்லை. இது வெற்று உரையாகவே அமைந்துவிட்டது.

திருமாவளவன், விசிக தலைவர்

புதிய ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும், பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கும் உரையாக உள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018