மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஆளுநர் டெல்லி பயணம்!

ஆளுநர்  டெல்லி பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக, நாளை (ஜனவரி 9) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி செல்லவிருக்கிறார்.

கடந்த அக்டோபர் 6ஆம் தேதியன்று தமிழக ஆளுநராகப் பதவியேற்றார் பன்வாரிலால் புரோகித். அதன்பிறகு, முதன்முறையாக இன்று அவர் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இதனையடுத்து ஆளுநரின் உரையுடன், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அவர் பேசத் தொடங்கியதுமே, அதிமுக அரசின் பெரும்பான்மை பற்றி கேள்வி எழுப்பினர் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள். அதற்கு ஆளுநர் ஏதும் பதில் சொல்லாததால், அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின், திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தனது உரையை முழுவதுமாக வாசித்து நிறைவு செய்தார் ஆளுநர் பன்வாரிலால்.

அதன்பின்பு, சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 12ஆம் தேதி வரை தொடருமென அறிவித்தார் சபாநாயகர் தனபால். அன்றைய தினம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை (ஜனவரி 9) ஆளுநர் டெல்லி செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மாலை 6.15 மணிக்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் சந்திக்கிறார். அதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, இவர்கள் இருவரிடமும் ஆளுநர் தகவல் தெரிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரான தினகரனின் சட்டமன்ற பங்கேற்பு, திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் வெளிநடப்பு மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்குள் அனுமதிக்கப்படாத விவகாரம் உட்பட பல பிரச்சனைகள் பற்றி அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தை தற்போது ஆட்டிப்படைக்கும் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் பற்றி அவர் விவாதிக்கக்கூடும் என்று தெரிகிறது.

இன்னும் சில நாட்களில் தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்துவரும் கூட்டத்தொடரில், அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை பற்றி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்புள்ளதாக, ஏற்கனவே தினகரன் கருத்து தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், நாளை டெல்லி செல்லவிருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால்.

பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் உடனான ஆளுநரின் சந்திப்புக்குப் பிறகு, ஒவ்வொரு மாவட்டமாக அவர் ஆய்வு மேற்கொள்வதில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018