தமிழக மாணவருக்கு எதிராக பாகுபாடு!

குஜராத் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக தலித் மாணவர் மாரிராஜ் சாதியப் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று ஜனவரி 8 விடுத்துள்ள அறிக்கையில், “குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் டாக்டர்.மாரிராஜ். தமிழகத்தைச் சேர்ந்த தலித் மாணவரான டாக்டர் மாரிராஜ் தனது துறை பேராசிரியர்களாலும், சக மாணவர்களாலும் சாதி ரீதியான பாகுபாட்டிற்கு கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “அவருக்கு அறுவைசிகிச்சை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை என்பதுடன் சாதி ரீதியாகவும் இழிவுப் படுத்தியுள்ளனர்” எனக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், இது குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.