மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தன.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று(ஜனவரி 8) தொடங்கியது. ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கியதும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டன கோஷம் எழுப்பின. அவர்களை அமைதியாக இருக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார். எனினும் தொடர்ந்து கோஷமிட்ட திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபூபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமிமூன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்தது தொடர்பாகச் சட்டப்பேரவை முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த அரசுக்கு 11எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளதாகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இந்த மைனாரிட்டி ஆட்சி தனது மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல், அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை படிப்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மேலும், மாநில சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் பல மாவட்டங்களில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுவருகிறார். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆனால் தமிழக அரசோ இதனை வேடிக்கைபார்ப்பதுடன், வரவேற்கவும் செய்கிறது.

தமிழகத்தில் நிதி நிர்வாகம் முடங்கியுள்ளது. தொழில் வளர்ச்சி கடைசி இடத்தில் உள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளபோதும் முதல்வர் அவ்வாறு செய்யாமல் உள்ளார். இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்துள்ளோம்” என்று விளக்கமளித்தார்.

அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை திமுக கொண்டுவருமா என்ற கேள்விக்கு, “வாக்கெடுப்பு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் அதன் உத்தரவு வந்த பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முடிவு செய்வோம் என்று பதிலளித்தார். தினகரனுடன் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு அப்படியான அவசியம் திமுகவுக்கு ஏற்படவில்லை என்று கூறினார்.

காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி பேசுகையில், “ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர், மரணமடைந்துள்ளனர் என்ற சரியான புள்ளிவிவரத்தைக்கூட அரசால் தர முடியவில்லை. தமிழகத்துக்கு நிதி வழங்குவதற்கு மத்திய அரசும் தயாராக இல்லை. தூங்கும் தமிழகத்தை எழுப்பும் நிலையில் நாம் உள்ளோம். ஆளுநர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்வது தவறு. இவர்களே குப்பையை கொட்டிவிட்டு இவர்களே அள்ளுகின்றனர் எனவேதான் ஆளுநர் உரையைப் புறக்கணித்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

“ஆளுநர் தனது எல்லைகளை மீறிச் செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. எனவே, மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரின் உரையைப் புறக்கணிக்கிறோம்” என்று மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தமிமூன் அன்சாரி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018