மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஆளுநர் உரை!

ஆளுநர் உரை!

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 8) காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

கடந்த அக்டோபர் 6ஆம் தேதியன்று தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார். அவர் பொறுப்பேற்றபிறகு, கடந்த இரண்டு மாதங்களாக தமிழக சட்டமன்றம் கூடவில்லை. இந்த நிலையில், ஜனவரி 8ஆம் தேதி 2018ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவித்தார் சட்டமன்ற செயலாளர் பூபதி.

இதன்படி, இன்று காலை தமிழக சட்டமன்றம் கூடியது. இதற்காக, காலை 9.55 மணிக்கு ஆளுநர் சட்டமன்றத்திற்கு வந்தார். சபாநாயகர் தனபால் மற்றும் சட்டமன்ற செயலாளர் பூபதி அவரை வரவேற்றனர். அவைக்குள் நுழைந்தவுடன் சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், உறுப்பினர்களைப் பார்த்து அவர் வணக்கம் தெரிவித்தார். அதன்பின் தமிழ்த்தாய் உரையுடன் கூட்டம் தொடங்கியது.

தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றபிறகு, முதன்முறையாக சட்டமன்றத்தில் உரையாற்றினார் பன்வாரிலால். வணக்கம், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் பேசி, அவர் தன் உரையைத் தொடங்கினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சிறந்த ஆட்சியை இந்த அரசு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

“காணாமல்போன கடைசி மீனவர் மீட்கப்படும்வரை மீட்புப்பணியை மத்திய அரசு தொடரும். இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. கச்சத்தீவை மீட்பது மட்டுமே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.2000 கோடி ஒதுக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு இந்த அரசு முயற்சிக்கும்.

அரசுக்கான வருவாய் குறைந்த போதிலும், தமிழக அரசு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுகிறது. ஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழக அரசு செயல்படுகிறது” என்று பேசினார் ஆளுநர்.

தொடர்ந்து பேசியவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லம் நினைவிடம் ஆக்கப்படும் என்றார். ” மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் மின்மிகை மாநிலமாகியுள்ளது. பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் தமிழக மக்களுக்கு பயனளிக்கிறது. 5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். நில பதிவேடுகளும், நில வரைபடங்களும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.

மாவட்டங்களில் தொழில் முனைதல் மற்றும் ஊரக தொழிலை ஊக்குவிக்க உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைக்கப்படும். நீராபானம் விற்பனை தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய பயனை அளிக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. 2016-17 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.2,4780 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிமுகப்படுத்தும். கறவை பசு, வெள்ளாடு, செம்பறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கால்நடை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும். கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி தேசிய சாலையாக மேம்படுத்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் ஆளுநர்.

ஆளுநர் உரையுடன் இன்றைய சட்டமன்ற செயல்பாடுகள் முடிவடைந்தது. முன்னதாக, ஆளுநர் உரையைத் தொடங்கியபோது, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின், அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018