மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்: இன்று கூடுகிறது சட்டப்பேரவை!

வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்: இன்று கூடுகிறது சட்டப்பேரவை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே தமிழகச் சட்டப்பேரவை இன்று கூடுகிறது.

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் ஒவ்வோர் ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் கூடுவது மரபு. அதன்படி, 2018ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது. வழக்கமாக ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்று உரையாற்றி, கூட்டத் தொடரை தொடங்கிவைப்பார்.

அந்த அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு புதிதாகப் பொறுப்பேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதன்முறையாக பேரவைக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஆளுநருக்குத் தமிழ்மொழி மீது பற்றுள்ளதால் சிறப்பு ஆசிரியரின் துணையோடு தமிழை அவர் கற்று வருவதாக ஆளுநர் மாளிகை சில மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதேபோல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தாம் தமிழ் கற்றுவருவதாகவும் விரைவில் அமைச்சர்களைப் போன்று நன்றாகத் தமிழில் பேசுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே, இன்றைய உரையை அவர் தமிழில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆளுநர் உரையைத் தொடர்ந்து பேரவைத்தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், பேரவை நிகழ்ச்சிகளை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது பற்றி முடிவெடுக்கப்படும். பேரவை நிகழ்வுகளைப் பொறுத்தவரை வரும் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், தொடர்ந்து 12ஆம் தேதி முதல்வரின் பதிலுரை ஆகியவை நடக்கும் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு நடந்துவருவதால், அவர்கள் சட்டப்பேரவைக்குள் வர முடியாது.

அதேநேரம், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வென்ற தினகரன் பேரவைக்கு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் சுயேட்சை எம்.எல்.ஏவாக பதவியேற்ற டி.டி.வி.தினகரனுக்கு எதிர்க்கட்சி வரிசையில் 148ஆவது இருக்கை எண் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது உரை எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு நிகழ்கிறது.

இதற்கிடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், வாய்ப்பு வந்தால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என்று கூறியிருந்தார். திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் தாங்கள் ஆதரவளிப்போம் என்று காங்கிரஸும் தெரிவித்துள்ளது. எனவே, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018