மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பாமக: மகளிரணித் தலைவி ஆகிறார் சௌமியா அன்புமணி

பாமக: மகளிரணித் தலைவி ஆகிறார் சௌமியா அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸின் மகனான டாக்டர் அன்புமணி இப்போது பாமகவின் இளைஞரணித் தலைவராகவும் தேர்தல் வரும்போது அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் இருக்கிறார். ராமதாஸ், அன்புமணி ஆகியோரைத் தவிர அவரது குடும்பத்தில் வேறு யாரும் கட்சியில் ஆக்டிவ் அரசியலில் இல்லை.

இந்த நிலையில் இப்போது அன்புமணியின் மனைவியும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி மெல்ல மெல்ல பாமகவுக்குள் பரவிவருகிறார். பசுமைத் தாயகத்தில் நெடுங்காலமாகப் பணியாற்றிவரும் சௌமியா அன்புமணி, தனது கணவர் அன்புமணிக்காக அவர் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பரப்புரையும் செய்திருக்கிறார். அதோடு தனது கட்சி அரசியல் பணியை நிறுத்திக்கொள்வார்.

ஆனால், தற்போது பாமகவின் மகளிர் மேடை என்னும் நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணிதான் முக்கியமான பங்காற்றிவருகிறார். நேற்று (ஜனவரி 7) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த பாமகவின் மகளிர் மேடை நிகழ்ச்சியின் சிறப்புரையே சௌமியா அன்புமணிதான். சௌம்யாவுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பும், பழனி முழுவதும் வரவேற்பு பதாகைகளும் வைத்திருந்தனர், பதாகைகளிலும் சரி, நிகழ்ச்சி மேடை முகப்பிலும் சரி ராமதாஸ், அன்புமணி, சௌமியா ஆகியோர் படமே இடம்பெற்றிருந்தது.

சௌமியா அன்புமணி கட்சியில் முன்னிலை பெற்றுவருவது பற்றி பாமக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சௌமியா அன்புமணிக்கு கட்சியில் சமீபகாலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம், பாமகவில் மகளிரணி கொஞ்சம் வீக் ஆகத்தான் இருக்கிறது. பாமக என்றாலே காடுவெட்டி குரு போன்ற அதிரடி ஆண்கள்தான் என்ற இமேஜ்தான் இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் களப்பணிகளில் பெண்களின் பங்கும் சற்று குறைவாகவே இருக்கிறது. இதுபற்றி கடந்த தேர்தல் களத்திலேயே உணரப்பட்டு டாக்டருக்கும் தகவல் தரப்பட்டது.

வீடு வீடாக சென்று ஓட்டுக்கேட்கும் பணிதான் பாமகவில் முக்கியமானது. அதில் ஆண்களுக்கு நிகரான பெண்கள் இல்லை என்பதே உண்மை. இந்த நிலையில்தான் கட்சியில் மகளிரணியை வலிமையாகக் காட்டுவதற்கு ஓர் ஆளுமை தேவை என்ற நிலையில் இப்போது சௌமியா அந்த இடத்துக்குக் கொண்டுவரப்படுகிறார்.

அஞ்சறைப் பெட்டியில் இருந்து அரசியலுக்கு வாருங்கள் என்ற முழக்கத்தோடு பாமக சார்பில் தமிழகம் எங்கும் மகளிர் மேடை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கமே கிராமப்புற மகளிருக்குத் தொழிற்பயிற்சிகள் அளிப்பதோடு அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளிப்பதும் ஆகும். இந்தப் பணியில்தான் இப்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் சௌமியா அன்புமணி.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் பாமகவில் வலுவான மகளிரணி அமைக்கப்பட வேண்டும் என்பதே டாக்டர் மற்றும் அன்புமணி ஆகியோரின் நோக்கம். இதற்காகவே சமீபகாலமாக நேரடி அரசியலில் களமிறக்கப்பட்டிருக்கிறார் சௌமியா அன்புமணி.

சௌமியாவுக்கு அரசியல் ஒன்றும் புதிது அல்ல. அவரது அப்பா கிருஷ்ணசாமியும் அரசியல்வாதிதான். கணவர் அன்புமணியும் அரசியல்வாதிதான். அன்புமணிக்காகத் தேர்தல் பணிகள் ஆற்றியிருக்கிறார். அவரோடு பல வெளிநாடுகள் சென்றிருக்கிறார். பசுமைத் தாயகம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்.

இப்போது பசுமை நாயகர் என்று அன்புமணி அழைக்கப்படுகிறார். அதுபோல பசுமை நாயகி என்று சௌமியா அன்புமணி அழைக்கப்படுகிறார். சௌமியாவுக்குக் கட்சியில் முக்கியத்துவம் அதிகமாகி வருகிறது. எனவே, விரைவில் சௌமியா பாமகவின் மகளிரணி தலைவர் ஆனாலும் ஆர்யம் இல்லை. கனிமொழி, பிரேமலதாவுக்குப் போட்டியாக பாமக சார்பாக இனி சௌமியா களமிறங்குவார்” என்றனர்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 8 ஜன 2018