மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் பொது விவாதங்களின் தரம் எப்படி உள்ளது?

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் பொது விவாதங்களின் தரம் எப்படி உள்ளது?

டி.எம்.கிருஷ்ணா

குஜராத் தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. தட்டுத்தடுமாறி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதை வெற்றியாகக் கொள்ளலாமா என்ற சந்தேகத்தில் பாஜக இருந்துவருகிறது. இதுவரையில் தூங்கிக்கொண்டிருந்த காங்கிரஸ் விழித்து எழுந்து முன்னேறியுள்ளது. புது வருடம் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தின் இறுதிக் காலகட்டம் எதையெல்லாம் வெளிப்படுத்தப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் நாம் உள்ளோம். கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நமது அமைப்பு, அரசியல் அல்லது கலாசாரக் கட்டமைப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நம் பிரதமரின் அடுத்த விமர்சனத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். மோடி இதே திசையில் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தால், நாம் மேலும் அதிகமான ‘அவமரியாதைகள் மற்றும் பொய்களுக்குள்’ அடைபட்டுவிடுவோம்.

நமது பிரதமர், நம் நாட்டில் மிகப் பெரிய பதவிகளை வகித்தவர்களைக் குறித்துத் துளிக்கூட ஆதாரம் இல்லாத விநோதமான குற்றச்சாட்டுகள் சுமத்திவிட்டு, பிறகு அதன் விளைவுகள் குறித்த எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் இருப்பது நாம் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம். தான் ஒரு முன்னுதாரண தேசபக்தர் என்று மார்தட்டிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தைக்கூட இழக்க விரும்பாதவர் இந்த மனிதர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் தன் நண்பரும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான குர்ஷித் கசூரிக்காக டிசம்பர் மாதம் 6ஆம் தேதி ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் இந்திய ராணுவத் தலைவர், முன்னாள் பிரதமர், முன்னாள் துணை ஜனாதிபதி ஆகியோர் அதில் கலந்துகொண்டனர். இதை வைத்து, இவர்கள் தேசத் துரோகத்துக்கு உடந்தையாக இருந்தனர் என்கிற விதமாக மோடி பேசியது தார்மீக நெறிமுறைகளை மீறிய செயல். ஒரு ஒரே அடியில் மோடி நம் நாட்டின் மதிப்புக்குரிய பதவிகளை வகித்த மூன்று பேரின் கண்ணியத்தைக் குலைத்துவிட்டார். இப்படி நடந்துகொள்வது ஒரு பிரதமருக்கு அழகல்ல.

மந்திரத்தால் கட்டுட்டுண்டு கிடக்கும் நிலை

ஆனால், மோடியின் தேர்தல் பிரசார அறிக்கைகளில் அச்சுறுத்தும் வகையில் கண்டனங்கள், குற்றம்சாட்டுவது இது முதன்முறையல்ல. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற உத்தரப்பிரதேசத் தேர்தலின்போது இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் வகையில் தன் நிலை மறந்து நடந்துகொண்டார் பிரதமர். பாரதிய ஜனதாவின் முதலமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அன்றாடம் வாரி இறைக்கும் விமர்சனங்களுக்குப் பிரதமரை நாம் பொறுப்பேற்கச் செய்ய முடியாது என்றாலும்கூட, அவர்தான் அந்தப் பாதையில் அவர்களை வழிநடத்துகிறார் என்று சொல்ல வேண்டும். இது இன்னமும் அதிக ஆபத்தானது. பொதுவான நல்லொழுக்கத்தின் கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோட்டைப் பிரதமர் கடக்கும்போதெல்லாம், சங்க பரிவாரில் இருப்பவர்களுக்குத் தன் சிந்தனையின் போக்கைக் குறித்து சூசகமாகத் தகவல் அளிக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது. ரேடியோ நிகழ்ச்சியிலோ, ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையிலோ நிகழ்த்தப்படும் இவரது மதச்சார்பற்ற மற்றும் நியாயமான உரைகளைப் பற்றி எல்லாம் களத்தில் பணியாற்றும் தொண்டர்கள் கண்டுகொள்வதில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் ஏற்கெனவே தீர்மானமாக உள்ளனர். எனவே, ஒரு பிரதமருக்குரிய நிர்பந்தம் காரணமாக மோடி ஆற்றும் அன்பும் கனிவும் நிறைந்த உரைகளைச் சாமர்த்தியமாக வடிகட்டிக்கொள்கின்றனர்.

ஆக, இந்தியாவின் பெரும்பாலான சிறுபான்மையினரின் மனங்களில் நிரந்தரமான பயம் குடிகொண்டிருப்பதற்கு அவதூறான, மோசமான தவறான கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் பிரதமர்தான் பொறுப்பு. இப்போதும்கூட சங்க பரிவாரின் உறுப்பினர்களால் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். பிரதமரின் உரைகள், அறிக்கைகள், மிகவும் கவனமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மவுனம் ஆகியவை மூலம் இந்தக் குற்றங்களை இழைப்பவர்கள் நம்பிக்கையைப் பெறுகிறார்கள்.

மோடியின் பேச்சுகளை துணிச்சலானவை, உறுதியானவை என இந்த நாட்டில் பலரும் கருதுகின்றனர் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது. வெட்கமற்ற பிரிவினை உணர்வை வெளிப்படுத்தும் இந்த அறிக்கைகள் இந்தியாவின் மிக உயர்ந்த பதவி வகிப்பவரிடமிருந்து வருவதை அடையாளம் காண முடியாத அளவுக்கா நாம் தாழ்ந்துவிட்டோம்? மோடி யாரையும்விட புனிதமானவர் என்று கருதப்படுவதும், அவர் எது வேண்டுமானாலும் செய்வதற்கும் என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கும் அனுமதிக்கப்படுவதும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நம் கண்கள் கட்டுண்டு, நாம் சிந்திக்கத் தெரியாதவர்களாக மாறி ஒரு மந்திரவாதியின் மந்திரத்தால் கட்டுட்டுண்டிருக்கிறோம்.

மணிசங்கர் அய்யரும் எப்போதும் போலவே யோசனையே இல்லாமல் மோடி குறித்து ‘நீச் கிஸம் கா ஆத்மி’ (இழிவான மனிதர்) என்று மோடியைக் குறிப்பிட்டு, கண்ணியமற்ற, சமூகச் சிக்கல் ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை வெளியிட்டார். காங்கிரஸ் உடனடியாக அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது. ஆனால், இதற்குப் பதிலாக, வல்லமைமிகுந்த நம் பேச்சாளர், காங்கிரஸ் தலைவருக்கு எதிராக இப்படிப் பேசியிருந்தால், இதேபோன்ற உடனடி எதிர்நடவடிக்கையை நாம் கண்டிருப்போமா?

பொது விவாதங்களின் தரம்

ஆனால், எல்லாவற்றையும்விட நாம் முக்கியமாகக் கேட்க வேண்டிய பெரிய கேள்வி ஒன்று உள்ளது. இந்தியாவில் பொது விவாதங்களின் தரம் எப்படி உள்ளது என்பதுதான் அது. பேச்சாளர்கள் எல்லாம் எங்கே? நமது அரசியல் தலைவர்களின் வார்த்தைகளில் மிகப் பெரிய வெற்றிடம் வெளிப்படையாகத் தெரிவதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். இந்தியாவின் உணர்வுபூர்வமான, கலாசார மற்றும் சமூக நிலைகள் குறித்த எதுவுமே அறியாத தனிப்பட்ட பேச்சாளர்களின் அர்த்தமற்ற வாசகங்கள், அறிக்கைகள்தான் காணப்படுகின்றன. இவர்களது நாட்டைப் பற்றிய தொலைநோக்கற்ற, வரையறைக்கு உட்பட்ட புரிதல்கள், யாருடைய வாக்குகள் உறுதியாக கிடைக்குமோ அவர்களது தேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. இப்படி நடப்பது நிச்சயமாக புதிதான ஒன்றல்ல. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்துவரும் இந்தப் போக்கு இப்போது தெளிவாக உணரப்படுகிறது. இந்த நாட்டைக் குறித்த மகத்தான கற்பனைகளோ நாட்டின் முன்னேற்றம் குறித்த பேராவலோ இல்லாதவர்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம்.

நான் 1970களில் பிறந்தவன். நான் பி.ஆர். அம்பேத்கர், ஜெயபிரகாஷ் நாராயண், ஜவகர்லால் நேரு, பெரியார், சி.ராஜகோபாலாச்சாரியார் அல்லது சுபாஷ் சந்திர போஸ் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களைப் பற்றி வெளியிடப்பட்டுள்ள உரைகள், கடிதங்கள் அல்லது விவாதங்கள் மூலம்தான். இவற்றைப் படிக்கும்போது எனக்குத் தேசத்தைப் பற்றி பெருமித உணர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், அறிவுபூர்வமாகவும் நான் வளம்பெறுகிறேன். பகுத்தறிவு, நுண்ணுணர்வு மற்றும் தொலைநோக்குடன் கொண்டிருந்த இவர்கள் நாட்டைக் குறித்துத் தங்கள் கண்ணோட்டத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதுதான் முக்கியமான அம்சம்.

அவர்கள் அனைவரும் தொலைநோக்குக் கொண்டவர்கள், இந்தியாவை ஆழமாக உணர்ந்தவர்கள், நாட்டை மிகப் பெரிய அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சித்திரத்தை உருவாக்கியவர்கள். அவர்கள் கனவில், ஒவ்வொரு குடிமகனும் சமமானவர், துடிதுடிப்பான பங்கேற்பாளர். அக்கறை, நேசம், வளம், பரிவுகொண்ட நாட்டை அவர்கள் விரும்பினார்கள். நாட்டின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்று, ஒருவர் கருத்தை மற்றவர் கேட்பது, மதிப்பதற்கும் பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தது. மாறுபட்ட தத்துவங்களில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் அவர்கள். இந்த அறிவுசார்ந்த விவாதங்களிலிருந்துதான் நாம் வலுவான அரசியல் அமைப்பைக் கட்டமைத்தோம்.

ஆனால் இன்று, இந்தக் கடந்த காலத் தலைவர்களின் வார்த்தைகள் மதிப்பிழந்துவிட்டன. அவர்களுடைய வார்த்தைகள் நம் மனங்களை திசைதிருப்பும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திரித்துக் கூறப்படுகின்றன.

நாடாளுமன்ற விவாதங்களும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறுக்கீடுகள் என்பதே அரசியல் வழக்கமாக மாறிவிட்ட இந்த நிலையை ஒதுக்கி வைத்துப் பார்த்தாலும்கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவாதங்களில் எதுவுமே குறிப்பிடத்தக்க விதத்திலோ அல்லது சிந்தனையைத் தூண்டும் வகையிலோ இல்லை. ஒரே ஒரு அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றம்கூட துடிப்பான ஜனநாயகத்துக்கு உதாரணமாகக் கொண்டாடப்படும் அளவுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் அர்த்தமற்றுப் போய்விட்டன. நம்பிக்கை ஊட்டும் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய அளவு நிலவரம் படுமோசமாக உள்ளது. நம்மைப் பெருமிதம் கொள்ளச்செய்வதற்குப் பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்மை சங்கடப்படுத்துவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர். மதிப்பீடுகளைக் காப்பாற்றியபடி விவாதங்களில் பொறுப்புணர்வோடு கலந்துகொண்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சீதாராம் யெச்சூரி.

அச்சுறுத்தல், அவ்வப்போது கொடுக்கப்படும் லாலிபாப் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தி விடக்கூடிய அசட்டுக் குழந்தைகள்போல நாம் நடத்தப்படுகிறோம். 2018 நமக்காகக் காத்திருக்கிறது. ஆனால், அதைவிட முக்கியமாக, பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் 2019ஆம் ஆண்டு நெருங்கி வருகிறது. இனியும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று நாம் மோடியிடம் கூறி அவரது சொல்லாடலின் தன்மையை மாற்றிக்கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டும். காங்கிரஸும் பிற கட்சிகளும் உயர்தரம் வாய்ந்த அரசியல் கட்சிகளாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். இவர்கள் அனைவருமே நம்மை ஏமாற்றியே வந்துள்ளனர்.

2019இல் யார் வெற்றி பெற்றாலும், நாம் நம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாமே தோண்டிக்கொண்ட குழியில் நாம் தொடர்ந்து விழுந்து கொண்டிருப்போம்.

நன்றி: https://scroll.in/article/862815/the-tm-krishna-column-the-quality-of-public-debate-in-india-is-dismal-the-cue-comes-from-modi

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எம்,கிருஷ்ணா. கர்னாடக இசையுலகில் தனித்த அடையாளம் பெற்ற குரல். மேடைக்கு வெளியிலும் தனித்து ஒலிக்கும் குரல். இசைச் சூழலின் சகல அம்சங்களையும் கூர்மையான கேள்விகளுக்கு உட்படுத்தும் சமூக அக்கறை கொண்ட கலைஞர். ‘சதர்ன் மியூஸிக், த கர்னாடிக் ஸ்டோரி’ என்னும் நூலும் இவரது கட்டுரைகளும் இசை உலகிலும்அறிவுலகிலும் தொடர்ந்து அதிர்வுகளை எழுப்பிவருகின்றன. ரோமன் மகசஸே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018