மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: அயோத்திதாசரும் பாப் மார்லியும்!

சிறப்புக் கட்டுரை: அயோத்திதாசரும் பாப் மார்லியும்!

ஸ்டாலின் ராஜாங்கம்

Casteless என்ற சொல்லை சாதியில்லாத, சாதியற்ற என்றுதான் மொழிபெயர்க்க நினைப்போம்.

‘சாதி பேதமற்ற என்று சொல்லலாமா?’ என்றார் பா.ரஞ்சித். சாதி என்ற ஒட்டோடு சேர்ந்து பேதம் என்பதைக் குறிக்க நேரடியான சொல் இல்லை என்று அறிந்திருக்கிறேன்.

“அப்படியா?” என்றேன் எதையோ புரிந்துகொண்டவனைப்போல்.

“ஆமாம். நூறாண்டுகளுக்கு முன் அயோத்திதாசர் கையாண்ட சாதி பேதமற்ற தமிழன் அல்லது திராவிடன் என்ற பிரயோகத்திலிருந்தே casteless என்ற இந்தச் சொல்லை எடுத்தோம்” என்றார். சாதியற்ற என்பது சாதியை முற்றிலும் மறுக்கிறது. சாதி பேதமற்ற என்பது சாதி இருக்கலாம் ஆனால், அவற்றுக்கிடையே பேதம்தான் இருக்கக் கூடாது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் இச்சொல்லை இவ்வாறு நேரடியாகப் பொருள்கொள்ள வேண்டியதில்லை. வரலாற்றின் தொடர்ச்சியைக் கையெடுத்து வருதல் என்ற விதத்திலேயே அச்சொல் கையாளப்பட்டிருக்கிறது. சொல் தமிழ்மொழி. அர்த்தம் ஆங்கில வார்த்தையில் இருக்கிறது.

இவ்வாறு அர்த்தமும் மொழியும் ஒன்றுக்குள் ஒன்று மயங்கிக் கலப்புத் தன்மையோடுதான் தலைப்பு தொடங்குகிறது என்று கூறுவது பலருக்கு வியப்பு அளிக்கலாம். ஆனால், உண்மை அதுதான். கலப்புத்தன்மை தான் இந்த இசை முயற்சியின் அடிப்படை. சாதி பேதம் மறுப்பதும் கலப்பிலிருந்துதானே தொடங்குகிறது.

அச்சொல்லின் அர்த்தத்தை இன்றைய சூழலுக்கேற்ப வளர்த்தெடுக்க வேண்டுமென்ற நம்பிக்கையை பா.ரஞ்சித் புரிந்துவைத்திருந்தார்.

போராட்டத்தின் வடிவமாக இசை

Casteless Colletive என்ற பெயரிலான இந்த இசை முயற்சியை, அது தொடர்பான விளக்கங்களை பார்க்கும் யாருக்கும் பாப் மார்லி என்ற கருப்பின இசைப் போராளி நினைவுக்கு வந்தே தீருவார். பாப் மார்லி நடத்தியது இசைக்கான போராட்டமல்ல. மாறாக அவரின் இசையே போராட்டத்தின் வடிவமாகவே இருந்தது. ‘ரெகே’ என்கிற இசைப் பாணியை அவர் வளர்த்தெடுத்தார்.

ஜமைக்காவின் ஒன்றிணைந்த மற்றும் வட்டார இசைகளான ஸ்கா ராக்ஸ் டெடி டப் டான்ஸ்ஹால் ரக்கா ஆகிய இசை மரபுகளின் கூறுகளைக் கலந்தே ரெகே இசைப் பாணியை பாப் மார்லி உருவாக்கினார். இவ்வாறுதான் ரெகே ஒரே நேரத்தில் போராட்ட வடிவமாகவும் கொண்டாட்டத்தின் புதிய அடையாளமாகவும் ஆனது.

ரஞ்சித்தின் படங்களில் கானா பாடலும் (அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி) பாப் மார்லியின் பிம்பங்களும் (மெட்ராஸ், கபாலி) முக்கிய இடம்பிடித்து வந்திருக்கின்றன. அவ்வாறு காட்டியது சினிமாவுக்கான கச்சாப் பொருளில் அல்ல என்பதை நீலம் பண்பாட்டு மையத்தின் இந்த இசை முயற்சி காட்டியது.

கறுப்பின மக்களின் இசைப் போராளியாக மட்டும் நில்லாமல் பலவிதமான மதநெறிகளை உள்வாங்கிய ரஸ்தஃபாரி என்ற மத நெறியிலும் பாப் மார்லி ஈடுபாடுகொண்டார். அயோத்திதாசரும்கூட அவருக்குச் சொல்லப்பட்ட வரலாற்றின் மீது கடும் அதிருப்தி கொண்டு பௌத்தத்தை முற்றிலும் புதிய மாற்றாக நிறுவி மாற்றுப் பண்பாட்டு வரலாற்றை எழுதினார். இவ்வாறுதான் இருவருக்கும் எந்தவித தொடர்பு இல்லாவிட்டாலும் பாப் மார்லியும் அயோத்திதாசரும் அடுத்தடுத்த தலைமுறையினரின் முயற்சிகளில் இணைவுகொள்கிறார்கள். அரசியல் ஓர்மை மிக்க கலைஞனின் யோசனையின்போது இருவரும் இயல்பாக உள்ளே வந்து இணைந்துகொள்கிறார்கள்.

மாற்ற வேண்டிய அடையாளங்கள்

பறை, கானா போன்ற இசை வடிவங்கள் இதுவரை விளிம்பு நிலை மக்களின் அடையாளங்களாகக் கருதிப் பேசப்பட்டு வந்தாலும் அவை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே பாணியிலானதாகவே இருக்கின்றன. இவ்வாறுதான் அவை வெறும் அடையாளங்களாகவே நின்று போய்விட்டன. இவற்றின் இசைத்தன்மையை மீட்க வேண்டிய அதே வேளையில் அவற்றின் மீது படிந்து கிடக்கும் சாதிய நினைவுகளையும் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. அந்த நோக்கில் முயற்சிகள் பிறக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில் கானா ராப் ராக் ஆகிய முற்றிலும் வேறு பிரதேசங்களின் இசைக் கூறுகள் இணைகின்றன. நிச்சயமாக கானாவை இது அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்லும். உள்ளூரின் பிற இசை வடிவங்களிலும் இதுபோன்று மாற்று முயற்சிகள் பிறக்க வேண்டும்.

அரசியல் ஓர்மை மிக்க கலைஞன் என்ற வகையில் ரஞ்சித் திரை முயற்சிகளிலும் திரைக்கு வெளியே இத்தகைய பண்பாட்டு முயற்சிகளிலும் அர்த்தபூர்வமான தலையீட்டை நடத்தி வருகிறார். கானா, தெருக்கூத்து, மாட்டுக்கறி, பிம்பங்களின் அரசியல், மெட்ராஸ், கபாலி போன்ற பெயர்களின் அரசியல், பட உரையாடல்கள், பாடல் வரிகள் என யாவற்றிலும் அதுவரை புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் அடையாளங்களை மிக விரிவாக முன்வைத்திருக்கிறார். இன்றைக்கு வடசென்னை தமிழ் சினிமாவின் கதைக்களமாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணமாயிருப்பவர். அவற்றை வணிகரீதியான வெற்றி பார்மூலமாகவும் மாற்றினார்.

வெற்றியின் மூலம் கிடைத்த கவனத்தை வைத்து இந்த முயற்சியைப் பிற தளங்களுக்கும் கொண்டுசெல்கிறார். தான் திரைப்படங்களில் பேசிய அடையாளங்களைத் திரைப்படத்துக்கு வெளியே முன்னெடுக்க நீலம் என்ற பண்பாட்டு அமைப்பை நிறுவி அதை அரசியல் செயல்பாடாக மாற்றினார். நூல் விமர்சனக் கூட்டங்கள், கல்வி தொடர்பான அரங்குகள், நாடகம், புகைப்படக் கண்காட்சி எனப் பல நிகழ்வுகளை நீலம் அமைப்பு நடத்திவருகிறது.

கானா என்னும் அரசியல்

இசை நிகழ்வில் ஜெய்பீம் என்ற முழக்கத்தோடு பேசத் தொடங்கிய ரஞ்சித் கலைகளை அரசியல்படுத்துவோம் என்று கூறிப் பாடல்களுக்கு வழி விட்டார். பாடல்கள் பெரும்பாலும் சமூக அரசியல் விழிப்புணர்வை மையமாகக் கொண்டவை. கானாவை முன்னெடுப்பது அதன் வடிவத்துக்காக மட்டுமல்ல. அதன் வழியான அரசியலுக்காகவும்தான். இவ்விடத்தில்தான் பாப் மார்லியும் அயோத்திதாசரும் வருகிறார்கள்.

சென்னையைப் புகழ்ந்த பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. இரண்டு மூன்று பாடல்களைத் தாண்டியதும் குழந்தைகள் ஆடத் தொடங்கினார்கள். நிகழ்ச்சி உச்சத்தை அடைந்தபோது எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். இடஒதுக்கீடு பற்றிய பாடலை இரண்டு முறை பாடினார்கள். கூட்டம் ஆர்ப்பரித்தது. குழுவிலிருந்த கலைஞர்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருந்தார்கள். சாவுக்குப் பாடுபவர்கள் தொடங்கி ஐஏஎஸ்ஸுக்குத் தயாராவோர் வரையிலும் வந்திருந்தனர்.

இதுபோன்ற மேடை கிடைத்தமைக்காகக் கலைஞர்கள் நன்றி சொன்னபோது குரல்கள் மழுங்கினாலும் முகங்கள் ஒளிர்ந்தன. நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட்டம் கலையாமல் நின்றிருந்தது. இந்த முயற்சி இனி கானா பாடல்களுக்குப் புதிய மரியாதையைப் பெற்றுத் தரக்கூடும்.

தமிழ்நாட்டு தலித் மக்களின் அரசியல் வரலாறு சென்னையிலிருந்து தொடங்குகிறது. நூறாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைத் தழுவியது அது. ஆனால், சென்னையின் நவீன வரலாறு அம்மக்களையும் அம்மக்களின் அடையாளங்களையும் ஊருக்கு வெளியே துரத்தியிருக்கிறது அல்லது இழிவு செய்து வைத்திருக்கிறது. மிச்சமாய் சேரிகளில் எஞ்சி கிடந்தவர்களை எவ்வித எதிர்ப்புமின்றி அண்மையில் வெளியேற்றியிருக்கிறது. இப்பின்னணியில் சென்னையும் சென்னையின் விளிம்பு நிலை அடையாளமும் வேறொரு தளத்தில் கட்டியெழுப்பப்படுகின்றன. இதன் விளைவை இனி நாம் பார்க்க வேண்டும்.

புதிய எண்ணங்களால் வண்ணங்கள் கூடட்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர், எழுத்தாளர். கள ஆய்வுகள், தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர். அயோத்திதாசர் வாழும் பௌத்தம், ஆணவக் கொலைகளின் காலம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018