மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஸ்பெஷல்: ட்ரெண்டில் உள்ள ஹேர் கலரிங்!

ஸ்பெஷல்: ட்ரெண்டில் உள்ள ஹேர் கலரிங்!

மணிக்கொடி

ஹேர் கலரிங் என்பது ஃபேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு விஷயமாக இன்று உருவாகிவிட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன.

ஹேர் கலரிங் வகைகள்

ஹேர் கலரிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் க்ரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்படப் பல வகைகளில் கிடைக்கிறது. நிரந்தர ஹேர் கலரிங் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருள்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் செமி-பெர்மனன்ட் கலரிங் செய்வதற்காக மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண க்கூந்தல் ஸ்பிரேக்கள் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. கூந்தலின் நீளத்தைப் பொறுத்து, அதற்கு ஹேர் கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு, ஹேர் கலரிங் செய்தால், மிக அழகாகத் தோற்றமளிக்கும். ஹேர் கலரிங் செய்பவர்கள், நிரந்தரமாகச் செய்துகொள்வதா அல்லது தற்காலிகமாக செய்துகொள்வதா என்பதை முதலில் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். நரை முடியை மறைப்பதற்காக ஹேர் கலரிங் செய்ய விரும்புபவர்கள், நிரந்தரமான ஹேர் கலரிங் முறையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மேலும், ஒட்டுமொத்த கூந்தலையும் ஹேர் கலரிங் செய்துகொள்வதா அல்லது ஹைலைட் மட்டும் செய்துகொள்வதா என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

ஹேர் கலரிங் முறைகள்

ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கலரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள். ஆனால், இன்றைய நவீன இளைஞர்கள் பொதுவாக, ஹைலைட்டிங் மற்றும் ஸ்ட்ரீக்கிங் ஆகியவற்றையே விரும்புகின்றனர். கூந்தல் பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு ‘ஹைலைட்டிங்’ என்று பெயர். பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாள்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், காப்பர் அல்லது சிவப்பு நிற கலரிங் செய்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். ஏனென்றால், இவை விரைவில் வெளிறிவிடும் தன்மைகொண்டது. ஹேர் கலரிங் செய்த பின் அதற்கென தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களையே பயன்படுத்த வேண்டும்.

ஹேர் கலரிங் செய்த பின், எவ்வாறு கூந்தலைப் பராமரிப்பது என்பதற்கு, கூந்தல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம். ஹேர் கலரிங் செய்வதற்குப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள்கள் நல்ல தரமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது நல்லது. நிரந்தரமான, வளமான தலைமுடி வேண்டும் என விரும்புவோர், ‘ஹேர் கலரிங்’ ஆசைக்கெல்லாம் அடிபணியக் கூடாது.

பொதுவாக, ஹேர் கலரிங் என்பதே ஆபத்தானதுதான். பல்வேறுவிதமான பக்க விளைவுகள் வர வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம், தலைமுடியில் நரை விழுந்தவர்கள் மட்டும்தான் ஹேர் கலரிங் செய்துகொள்வார்கள். ஆனால், இன்று டீன் ஏஜ்ஜிலேயே கலரிங் செய்துகொள்கிறார்கள்.

சிலர் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் முடியின் நிறத்தை மாற்றிக் கேட்பார்கள். ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம் செய்துகொள்ளும் தற்காலிக ஹேர் கலரிங் முதல் நிரந்தர ஹேர் கலரிங் வரை, பல வகைகளில் இது செய்யப்படுகிறது. எத்தனை முறை சாயம் ஏற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே ஹேர் கலரிங்கின் கால அளவு அமைகிறது. எவ்வளவு கால அளவுக்கு ஹேர் கலரிங் செய்கிறோம் என்பதைப் பொறுத்து, அதற்காகச் சேர்க்கப்படும் க்ரீம்கள் மாறுபடும்.

ஹேர் கலரிங் எப்படிச் செய்கிறார்கள்?

முதலில் தலைமுடியை நன்றாக அலசி, தலைமுடியில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீக்கி டிரையர் மூலம் காயவைக்கிறார்கள். பிறகு அவர்கள் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் கால அளவுக்கு ஏற்ப, அதற்குரிய சாயம் முடியில் அடிக்கப்படும். இந்த முறையில் தலைமுடியை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாகத் தலையில் இருந்து 2 செ.மீ அளவுக்கு முடியை விட்டுவிட்டு, அதற்கு மேல் பகுதியில்தான் சாயம் ஏற்றப்படுகிறது. தலைமுடி முழுவதும் நரைத்திருந்தால் மட்டும், தலைமுடியின் அடிப்பாகத்தில் இருந்து முழுவதுமாக சாயம் ஏற்றப்படும். தற்காலிகமாக ஹேர் கலரிங் செய்துகொள்பவர்கள் என்றால், எத்தனை நாள்களுக்கு கலரிங் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அத்தனை நாள்களுக்குத் தலைக்குக் குளிக்கக் கூடாது.

நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு, ஹேர் கலரிங் செய்தவுடன் 40 நிமிடங்கள் முடியை நன்றாகக் காயவைத்து, பின்னர் ஷாம்பூ, கண்டிஷனர், முடிக்கான மாஸ்க் ஆகியவை கலந்த 'ஹேர் ஸ்பா’ செய்யப்படுகிறது. இதுதான் ஹேர் கலரிங் செய்யப்படும் முறை.

டை அடிப்பதும் ஹேர் கலரிங் செய்வதும் ஒன்றுதான். தலைமுடி முழுவதும் நரைத்தவர்கள் வீட்டில் டை அடித்துக்கொள்ளலாம். ஆனால் சில முடிகள் மட்டும் நரைத்திருந்தால், தாங்களாகவே டை அடித்துக்கொள்வது தவறு. தலை வழுக்கையான பகுதியில் டை பட்டுவிட்டால், பல்வேறு தோல் அலர்ஜி பிரச்னைகள் வரலாம். மேலும், நிரந்தரமாக முடி நரைத்துவிடும். எனவே தரமான பொருள்களைப் பயன்படுத்தும் அனுபவமிக்க பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்து கொள்வது நல்லது.

ஹேர் கலரிங் செய்தவர்கள் அதன் பிறகு, கண்டிஷனர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மாதம் ஒருமுறையேனும் ஹேர் ஸ்பா செய்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் கலரிங் செய்துகொண்டவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள். அதிக ரசாயனம் சேர்த்த தரமற்ற ஷாம்பூ, க்ரீம்களைப் பயன்படுத்தினால், முடி சீக்கிரம் வலுவிழந்து கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, கவனம் தேவை!

ஹேர் கலரிங் செய்துகொள்வதால் வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?

பொதுவாக நமது முடி என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதிலிருந்து மிகச் சிறிதளவு வேறுபடும் கலரில் மட்டுமே கலரிங் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, கருமை நிறத்தில் முடி இருப்பவர்கள் மெல்லிய பிரவுன் நிறத்தில் கலரிங் செய்துகொள்ளலாம். அதை விடுத்து கிரே, ஆரஞ்சு என வித்தியாசமான கலரில், கலரிங் செய்துகொள்வது தலைமுடிக்கு ஆபத்து. ஹேர் கலரிங் செய்வதால் அலர்ஜி, முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஹேர் கலரிங் செய்துகொள்வதால் முடிக்கு மட்டுமின்றி சில சமயங்களில் கண்களும் பாதிக்கப்படும். கலையான முகமும் கறுத்துப்போகும். கண்களைப் பாதிக்கும் கிளக்கோமா மற்றும் வெண்புள்ளிகள் போன்ற தோல் பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஃபேஷனுக்காகச் செய்யும் இந்த கலரிங் முறை, உடலுக்கு உகந்தது அல்ல. மேலும் நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொண்டவர்கள், மீண்டும் விரும்பினாலும், பழைய கருமை நிற முடியைப் பெற இயலாது. முடி முழுவதையும் எடுத்துவிட்டு, பிறகு மீண்டும் இயற்கையாக முடி முளைத்தால் மட்டுமே பழைய நிறம் சாத்தியம். இல்லையெனில், ஏற்கனவே கலரிங் செய்யப்பட்ட முடியை மீண்டும் இயற்கையான முடியின் நிறத்துக்கு கலரிங் செய்துகொள்ள வேண்டும். பார்லர்களில் பயன்படுத்தும் க்ரீம்களில் லெட் அசிட்டேட் கலந்திருக்கலாம். அவ்வாறு 'லெட் அசிட்டேட்’ கலக்கப்பட்ட க்ரீம்களை தலைமுடியில் பூசினால், அது தோல் புற்றுநோயை வரவழைக்கக்கூடும். எனவே, தரமான க்ரீம்களைப் பயன்படுத்தும் பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்துகொள்ள வேண்டும்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

திங்கள் 8 ஜன 2018