மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: மோடி அரசும் இந்தியப் பொருளாதாரமும்!

சிறப்புக் கட்டுரை: மோடி அரசும் இந்தியப் பொருளாதாரமும்!

பிரதமர் நரேந்திர மோடியும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் 2017ஆம் ஆண்டு இந்திய அரசியல் பொருளாதாரத்தில் நிகழ்ந்த சிக்கல்கள் குறித்து அறிய, குறுகிய காலக் கனவு எல்லா நேரத்திலும் வருவதைத் தவிர்க்க வேண்டும். பல்வேறு வழிகளில் 2017ஆம் ஆண்டில் பொருளாதார பாதிப்புகள் கடுமையாக இருந்துள்ளது. இந்திய அரசின் சொந்த முயற்சிகளே இந்தியப் பொருளாதாரத்தை பாதித்து, உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சியைக் குறைத்துள்ளது. இது புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் சரிவடையச் செய்துள்ளது. இன்னொன்றையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நடப்பு ராபி சீசனுக்கு முன்பாக வேளாண் விளை பொருள்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் 20 முதல் 30 சதவிகிதம் வரை விலை சரிந்தது. மண்டிகளில் நிலவிய பண நெருக்கடியே விலை சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.

விவசாயிகளின் வருவாய் சரிந்ததற்கு அரசியல் பொருளாதாரமே காரணமாகும். 2002ஆம் ஆண்டு முதல் சவுராஷ்டிராவில் இதுபோன்ற சிக்கல்கள் பாஜகவுக்கு மிக மோசமான தேர்தல் முடிவுகளை அளித்து வருகிறது. அந்தத் தேர்தலில் பதிதார் மக்களின் ஓட்டுகள் பாஜகவுக்கு எதிராகவே விழுந்தது. இவர்கள் சவுராஷ்டிராவின் நடுத்தர விவசாயிகளாவர். மோடியின் களத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இறக்கினார். இதன்மூலம், இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை மோடி உணர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. சவுராஷ்டிராவின் தோல்வி குறித்து ஆராய்வதாக பாஜக கூறுவது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதாகும். பாஜகவினர் கடுமையாக உழைத்ததாக மோடி கூறுகிறார். ஆனால் கடந்த 30 வருடங்களாக குஜராத்தில் சாதி அரசியலைத்தான் முன்னெடுத்து வருகிறது பாஜக. ஆனால், அதே சாதி தலைதூக்கி மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

உணர்வுபூர்வமாகவோ அல்லது வேறுவிதமாகவோ நடுத்தர விவசாயிகள் கிளர்ச்சி மத்திய, வடகிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மோடி இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 90 சதவிகித இடங்களைக் கைப்பற்றி இருந்தது. உண்மையில் விவசாயிகளை இடைநிலைச் சாதிகளின் பிரதிநிதிகள் ஒருங்கிணைத்து வாக்களிக்கச் செய்துள்ளனர். பொருளாதாரக் குறைபாடுகள் நீக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதுதான் மகாராஷ்டிராவின் மரத்தாஸ், மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தினரிடம் நடந்தது.

அண்மையில் ராஜஸ்தானில் நடந்த உள்ளூர் தேர்தல்களில் பாஜகவின் மீதிருந்த கோபத்தின் காரணமாக பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள பொருளாதார பலம் கொண்டவர்களுடன் கூட்டு சேர்ந்து பாஜவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 56 சதவிகிதமாக இருந்தது. ஆனால், உள்ளூர் பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 15 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

அண்மையில் உத்தரப்பிரதேசத்தின் நாக்பூரில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாஜக 13 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயிகள் அதிகமாக உள்ளனர். இதனால் இந்தப் பகுதிகளில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தேர்வு செய்த வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். சுயேச்சையாக நின்றவர்களும், மற்ற கட்சியினரும் முன்னிலை பெற்றுள்ளனர். ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு எதிராக இருந்ததே இதற்குக் காரணமாகவுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2017 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தவர்களும் இவர்கள்தான். எனவேதான், குஜராத்தைப் போல மற்ற பகுதிகளிலும் சாதியை பாஜக கையிலெடுத்தது. இன்று பாஜக ஆளும் பல மாநிலங்களில் சாதியை வைத்தே ஆட்சியைக் கைப்பற்றியது.

2017ஆம் ஆண்டில் விவசாயப் பொருளாதாரம் மிகவும் சீரடைந்துள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகே விவசாயப் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாகவே தொடர் வறட்சியில் இந்திய விவசாயம் பாதிக்கப்பட்ட சூழலில் 2017ஆம் ஆண்டு இதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பிருந்த நிலையில்தான் 2016ஆம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் தாக்கத்தால் 2017ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு வரை விவசாயிகளின் வருவாய் மொத்தமாகப் பாதித்தது. உண்மையில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் வளர்ச்சி 2017ஆம் ஆண்டு காரிஃப் பருவத்தில் சிறப்பாகவே இருந்தது. குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டபோதிலும் பாஜக திட்டங்களால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இயவில்லை. இது விவசாயிகளை மேலும் வாட்டியது.

இதன் விளைவால் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இதனால் 2017 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.7 சதவிகிதமாகச் சரிந்தது. அடுத்த காலாண்டில் ஜிடிபி சற்று உயர்ந்து, 6.2 சதவிகிதமாக அதிகரித்தது. பட்டியலிடப்படாத லட்சக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் முறைசாரா நிறுவனங்கள் வருங்காலங்களில் இந்தியாவின் ஜிடிபியை மாற்றியமைக்கும் என்று இந்திய தலைமைப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2017 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7 சதவிகிதமாக இருந்தது என்று மத்திய புள்ளியியல் அமைப்பு அறிக்கை கூறுகிறது. இது பங்குச் சந்தை வாயிலாகவும், செபியில் பதிவுசெய்த பெரிய நிறுவனங்கள் வாயிலாகவும் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும். உற்பத்தித் துறையைப் பொறுத்தவரையில் 20 சதவிகிதம் அளவுக்குப் பட்டியலிடப்படாத லட்சக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் பங்கு வகிக்கின்றன. 2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சிறு குறு நிறுவனங்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் 50 சதவிகிதத்துக்கு மேல் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி சங்கிலியில் இந்நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேற்கண்ட ஆய்வறிக்கைகளின் மூலம் இந்தியாவின் உற்பத்தித் துறை உண்மையில் வளர்ச்சியைக் குறிக்கவில்லை. இறங்குமுகத்தை தான் கண்டுள்ளது.

ஜிஎஸ்டி சார்ந்த சிக்கல்களும் இந்தியாவின் ஜிடிபியைப் பாதித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசுகள் வாட் வரி வசூலிப்பது தொடர்கிறது. தலைமைப் புள்ளிவிவர அதிகாரி புரோனோப் கூறுகையில், “பெட்ரோல், டீசலுக்கு வாட் வரி தொடர்வதால் உற்பத்தி நிறுவனங்கள், சிறு குறு வர்த்தக நிறுவனங்களின் சுமை கூடுகிறது. பணமதிப்பழிப்பின் தாக்கமும் உள்ளது.

இந்தியாவின் பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் ஜிஎஸ்டியின் தாக்கங்கள் இந்தியாவின் ஏற்றுமதித் துறையையும் வெகுவாகப் பாதித்துள்ளது. ஏற்றுமதியைப் பெருமளவு முடங்கும் அளவுக்குச் செய்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் 2017ஆம் ஆண்டு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சீனா, வங்கதேசம், வியட்நாம், தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட்டுள்ளது. மோர்கன் ஸ்டான்லி அண்மையில் வெளியிட்ட ஆய்வொன்றில் உலகின் பல நாடுகளின் ஜிடிபி விகிதம் முந்தைய ஆண்டைவிட 2017ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. ஆனால், இந்தியாவில் ஜிடிபியும் சரிந்துள்ளது. வேலையின்மையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அண்மையில் ருசிர் ஷர்மா எழுதிய கட்டுரையில், கடந்த பத்தாண்டுகளாகவே உலகளவில் வேலையின்மை குறைவாகவே உள்ளது. சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகள் தங்களை முன்பைக் காட்டிலும் மேம்படுத்தியுள்ளன என்கிறார். இந்தியா தனது பணமதிப்பை வலுப்படுத்த போதிய முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. மற்ற நாடுகளின் டாலருக்கு நிகரான பணமதிப்பு வலுவடைந்திருக்கிறது. இந்தியா ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் தேக்கமடைந்திருக்கிறது. மோடியும், ஜேட்லியும் 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய இந்தியாவை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள எல்லா நாடுகளும் சரிவைக் கண்டிருந்தது. ஆனால், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை எல்லாவற்றுக்கும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தது தற்போதைய ஆளும் அரசு.

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018