மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

நாத்திகம் என்பது அன்பும் மனிதநேயமுமே!

நாத்திகம் என்பது அன்பும் மனிதநேயமுமே!

உலக நாத்திக, மனிதநேய சகோதரத்துவ சிந்தனையாளர்கள் மாநாடு திராவிடர் கழகத்தின் முன்னெடுப்பில் திருச்சியில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி 6, 7 தேதிகளில் நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நாள், பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓகாசே புத்தகக் காட்சியைத் திறந்துவைத்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் மாநாடு தொடங்கியது. திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் (அமெரிக்கா) டாக்டர் லட்சுமண்தமிழ் தொடக்க உரையாற்றினார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடா நாத்திக மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம் மாநாட்டின் நோக்க உரையாற்றினார். மாநாட்டில் இந்தியா முழுவதுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் பங்கேற்றனர்.

பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளை துணிவுடன் பேசியும், எழுதியும் வந்த அறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் படங்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்துவைத்தார்.

இம்மாநாட்டில் கி.வீரமணி எழுதிய ஆங்கில நூல்களான Bhagavad Gita - Myth or Mirage (பகவத் கீதை கற்பனை அல்லது புரட்டு) மற்றும் March of Atheism (நாத்திகத்தை நோக்கிய நடைப்பயணம்) ஆகிய நூல்களுடன், பேராசிரியர் சுரேந்தரா அஜ்நாத் எழுதிய Compilation of ‘Old Testament of Indian Atheism’ - இந்திய நாத்திக தொன்மையான கருத்துகளின் தொகுப்பு எனும் ஆங்கில நூல், வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் எழுதிய Essays on Matters which Matter (A Rationalist’s Perception) முக்கியத்துவம் மிக்க கட்டுரைக் கோவை உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. பன்னாட்டு மனிதநேயம் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் லண்டன் தலைமைச் செயல் அலுவலர் கேரே மெக்கலாண்ட், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல்தலைவர் அவினாஷ் பாட்டில், பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் சார்பில் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இணைவேந்தர் ச.ராசரத்தினம் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இரண்டாம் நாள் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்புரையாற்றினார். அப்போது நாத்திகரான தான் திருப்பதி கோயிலுக்கு சென்று வந்தது பற்றி விளக்கினார் கனிமொழி.

“இங்கே வந்திருப்பவர்களில் சில இறை நம்பிக்கையாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே சொல்வேன்... நீங்கள் இங்கு வந்தால் உண்மையான ஒளியை அடைவீர்கள். ஆம், பெரியார் என்பதே அப்பேரொளி.

இங்கே வந்திருக்கிறவர்கள் பிறப்பால் பல்வேறு மதங்களில் பிறந்தவர்கள். இஸ்லாமியர்களாக, கிறிஸ்துவர்களாக, சீக்கியர்களாக, இந்துக்களாக பிறந்திருப்பார்கள். நாம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், நம்மை எல்லாம் நாத்திகம் என்ற மனிதம் ஒன்று சேர்த்திருக்கிறது” என்ற கனிமொழி பெரியாரைப் பற்றி பேசினார்.

“பெரியாரை ஒரு நாத்திகர் என்று மட்டுமே நாம் வர்ணிக்க முடியாது. பெரியார் ஒரு மனிதநேயர். பெரியார் நாத்திகத்தை, கடவுள் மறுப்பை கையில் எடுத்ததற்குக் காரணம், மக்கள் தங்கள் சுயமரியாதையை இழந்து வாழ்ந்த வாழ்க்கைக்கும், பெண் அடிமைக்கும் காரணமான மதம்” என்று குறிப்பிட்டார்.

பின் தான் திருப்பதி சென்று வந்தது பற்றி பேசினார் கனிமொழி.

“எம்.பி ஆக இருக்கும்போது நம்மை நாடாளுமன்றத்தின் கமிட்டிகளில் உறுப்பினர்களாக நியமிப்பார்கள். அந்தவகையில் நான் ஹோம் அஃபயர்ஸ் கமிட்டியில் இருந்தேன். அந்த கமிட்டியின் தலைவராக வெங்கையா நாயுடு அவர்கள் இருந்தார். அவர் கமிட்டியில் இருந்த எங்கள் எல்லாரையும் திருப்பதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். சரி, அங்கே என்ன இருக்கிறது என்று பார்த்து வருவோம் என்று நினைத்துக்கொண்டு போனேன். அது மிக சிறப்பாக இயங்கும் நிறுவனம் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறேன். அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் எம்.பிக்கள் என்பதால் சிறப்பு தரிசனத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். கடவுளின் முன் எல்லாரும் சமம் என்கிறார்களே அது பொய். அதிக காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால் சிறப்பு தரிசனம், இல்லையென்றால் பத்து மணி நேரம் நிற்க வேண்டும். நாங்கள் உள்ளே நிற்கும்போது இன்னொரு எம்.பி. என்னிடம் கேட்டார், ‘இத்தனை ஆயிரம் பேர் கடவுளைப் பார்க்க காத்திருந்து வருகிறார்கள். அவர்கள் இந்த கடவுளிடம் கேட்டதையெல்லாம் அவர் கொடுக்கிறார். ஆனால், நீ எப்படி கடவுளை நம்பாமல் எப்படி இருக்க முடியும்?’ என்று என்னிடம் கேட்டார்.

நான் திரும்பிக் கேட்டேன். ‘கடவுளின் கண்ணில்படும் அளவுக்கு இதோ ஒரு உண்டியல் இருக்கிறதே... அதற்கு துப்பாக்கி ஏந்திய ஆள் பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுள் இந்த உண்டியலைப் பாதுகாப்பார் என்று அவர் மீது நம்பிக்கையுள்ள உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், நான் எப்படி நம்புவது?’ என்று கேட்டேன்” என்ற கனிமொழி,

“ஒவ்வொரு சர்ச்ச்சிலும் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறார்கள். மசூதிகளில் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறார்கள். இந்துக்களில் அதிலும் ஆயிரம் பிரிவுகள் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை என்று கூடுகிறார்கள். இந்நிலையில் கடவுள் இல்லை என்று சொல்லும் நாம் மட்டும் ஏன் அடிக்கடி சந்திக்காமல் இருக்க வேண்டும்? இன்று கடவுள் மறுப்பாளர்களுக்கு உலகம் முழுதும் அச்சுறுத்தல் இருக்கிறது. இந்த நிலையில் நாம் ஒருவர் கையை ஒருவர் பற்றியிருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுபோன்ற ஒன்று கூடல்களை அடிக்கடி நடத்த வேண்டும். நாத்திகம் என்பது உண்மையான அன்பும், மனிதநேயமும்தான் என்பதை நாம் ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். உலகம் ஒருநாள் மாறும்” என்று தன் உரையை நிறைவு செய்தார் கனிமொழி எம்.பி.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018