மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்போம்: திமுக மாசெ கூட்ட பரபரப்பு!

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்போம்: திமுக மாசெ கூட்ட பரபரப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்திருக்கும் நிலையில் இன்று (ஜனவரி 7) காலை அறிவாலயத்தில் திமுக மாசெக்கள் கூட்டத்தைக் கூட்டினார் பொதுச் செயலாளர் க.அன்பழகன்.

கம்பூன்றி மெல்ல மெல்ல நடந்து வந்து அன்பழகன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டம் தொடங்கியதுமே முதலில் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பேசினார். ‘இது வழக்கமா நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கிடையாது. மற்ற எல்லா கட்சிகளையும் விட திமுகதான் ஜனநாயகமா இருக்கிற கட்சி. ஆனாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தொடர்பா நம்ம கட்சியில யாரும் வெளிப்படையான கருத்து தெரிவிக்கல. இன்னிக்கு மாவட்டச் செயலாளர்கள் உங்க மனம் விட்டுப் பேசுங்க. உங்க உள்ளத்துல என்ன இருக்கோ, அதை அப்படியே இங்க பேசவேண்டும். அது கட்சித் தலைமைக்கு எதிரான கருத்தா இருந்தால் கூட பரவாயில்லைங்குறேன். ஏன்னா கட்சி வளர்ச்சி பற்றித்தான் பேசப் போகிறோம். அதனால என்ன நினைக்கிறீர்களோ அதைப் பேசுங்கள்’ என்று ஆரம்பித்து வைத்தார் துரைமுருகன்.

சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஆரம்பித்து, ஆர்.கே.நகரில் பணியாற்றிய வெளிமாவட்டச் செயலாளர்கள் பலரும் பேசியது இதுதான். ‘திமுக பெரிய கட்சி என்று சொல்கிறோம். வலுவான அமைப்புள்ள கட்சிதான். ஆனால் வடசென்னையில் குறிப்பா ஆர்.கே.நகரில் திமுகவின் அமைப்பு வலிமை பற்றி நிறைய கேள்விக் குறிகள் இருக்கிறது. மக்களும் பெருவாரியாக கரெப்ட் ஆகிவிட்டார்கள். ஒரு ஓட்டுக்கு 200,300 கொடுத்தாலே ஓட்டை மாற்றிப் போடுகிற நிலைமையில்தான் அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது ஒரு ஓட்டுக்கு தினகரன் தரப்பில் 23 ஆயிரம் கொடுத்திருக்கிறார்கள் என்றால் எப்படி நமக்கு ஓட்டுப் போடுவார்கள்? ஜெயலலிதா இருந்தபோது நாம் வாங்கிய 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் எங்கே என்பதுதான் இப்போதைய கேள்வி. களத்தில் பணம் பலமாக புழங்கும்போதே இந்த ரிசல்ட்ட்டை எதிர்பார்த்தோம். ஆனால் திமுகவின் ஓட்டுகள், கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகள் இவ்வளவு குறைவதற்குக் காரணம் கட்சியின் கட்டமைப்புதான்’ என்று சென்னையை ஒட்டிய மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து அடுத்து பேசிய பேச்சு சூட்டைக் கிளப்பியது.

திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன்

பாலைவன ரோஜாக்கள் படத்தில் தலைவர் ஒரு வசனம் எழுதியிருப்பார். ‘ரயில் இன்ஜினையே களவாடிச் சென்றவர்களை விட்டுவிட்டு கரித்துண்டுகளை பொறுக்கியவனுக்கு தண்டனையா?’ என்று கேட்டிருப்பார். அதுபோல ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக என்ற ரயிலின் இன்ஜினையே சீர் குலைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, கரித்துண்டுகளைத் திருடிய வட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆர்.கே.நகரில் இன்ஜினையே திருடி விற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்?’ என்று கேட்டார். இதை துரைமுருகன் குறித்துக் கொண்டார்.

அடுத்து அவர் பேசிய பேச்சில் துரைமுருகனே கொஞ்சம் டர்ர் ஆகிவிட்டார்.

’கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் பொதுப்பணித்துறை சார்பான நீர் நிலை தூர்வாருதல் பணிக்காக 3,500 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் 40 சதவிகிதம் கமிஷனை ஆளுங்கட்சியினர் பெற்றுக் கொண்டனர். அதை வைத்துதான் அவர்கள் தேர்தல் செலவுகளை மேற்கொண்டனர். நமது ஆட்சியில் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர்தான். அவருக்கு இந்த விவரங்கள் எல்லாம் இன்னும் விரிவாக தெரியும்’’ என்று சொல்ல துரைமுருகன் சிரித்துக் கொண்டார். அடுத்து ரஜினி பற்றி பேச்சு சென்றது.

கடலூர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை திமுகவை பாதிக்குமா என்று பலரும் டிவிகளில்தான் பேசுகிறார்கள். எம்.ஜி.ஆர். திமுகவை விட்டுப் போய் புதுக்கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு பலத்த எழுச்சியும், வரவேற்பும் கிராமங்கள் தோறும் இருந்தது. அடுத்து வைகோ நம்மை விட்டுப் பிரிந்தபோதும் பலத்த அதிர்வு இருந்தது. கடைசியாக விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது வட மாவட்டங்களில் பல கிராமங்களிலும் அவருக்கு கிளைகள் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இப்போது ரஜினிக்கு மீடியாக்கள் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றன. அவருக்கு கிராமங்களில் எந்த வரவேற்பும் இல்லை. எனவே நாம் ரஜினி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று தெரிவித்தார்.

ஒருமணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை என திட்டமிட்டு தொடங்கப்பட்ட மா.செ.க்கள் கூட்டம் 15 மாவட்டச் செயலாளர்கள் வரை பேசியதால் ஒருமணி ஆகிவிட்டது. பேராசிரியர் அன்பழகன் தன்னால் பேச இயலவில்லை என்று சொல்லி பேச மறுத்துவிட்டார். நிறைவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

“ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் ஆரம்பகட்டத்தில் கழகத்துக்கு நல்ல செல்வாக்கு இருந்தது உண்மை. ஆனால் போகப் போக அதில் மாற்றம் இருந்ததை நானே அறிந்தேன். டிடிவி அதிக ஓட்டுவாங்குவார் என்று எனக்கே தகவல்கள் வந்தன. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வோம். இனி மாநகர பகுதிகளில் கட்சி அமைப்பை ஒரு பூத்துக்கு ஒரு கிளை என்று மாற்றி அமைக்க உள்ளோம்.

அடுத்து பொதுத் தேர்தலுக்குத் தயார் ஆவோம். பொதுத் தேர்தலில் சூழலுக்கு ஏற்ப திமுகவும் தயாராக இருப்போம். அதாவது எதிரிகள் என்ன ஆயுதம் எடுக்கிறார்களோ அதற்கேற்ற மாதிரி நாமும் ஆயுதத்தை எடுப்போம். இதைவிட விளக்கமாக இதுபற்றி நான் சொல்ல முடியாது என்று உங்களுக்கே புரியும்’’ என்று முடித்தார் ஸ்டாலின்.

ஆனால் கடைசி வரை இன்ஜின் திருடியவர்களுக்கு என்ன தண்டனை என்று அவர் சொல்லவே இல்லை. அதேநேரம் எதிரிகள் எடுக்கும் ஆயுதத்தை திமுகவும் பொதுத் தேர்தலில் எடுக்கும் என்று அவர் சொன்னது பணத்தைதான் என்று சொல்லி மா.செ.க்கள் குஷியில் இருக்கிறார்கள்.

-ஆரா

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018