மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

கூத்துவாத்தியார்கள்: 9

கூத்துவாத்தியார்கள்: 9

க.சீ. இரவி: ஒரு குழுவுக்கான ஆளுமைமிக்க பார்வையாளர் - 3

(கூத்துக்கான மர ஆபரணங்கள் தயாரிப்பாளர் சுகுமார் உடன் K.S. ரவி)

இரா.சீனிவாசன், மு. ஏழுமலை

தேவன் வாத்தியார்

தேவன் வாத்தியார் பற்றி க.சீ. இரவி அவர்கள் கூறும்பொழுது ஒரு மிகுந்த மரியோதையோடு உரையாடியது ஒரு கலைஞனுக்கும் பார்வையாளனுக்கமான புனித உறவை உணர்ந்துகொள்ள முடிந்தது.

குண்டையார் தண்டலம் கூத்து’க் குழுவில் முன்பு குறிப்பிட்டதைப்போல், முதன் முதலில் நான் நெருங்கி பழகியவர் தேவன் வாத்தியாரிடம்தான். தேவன் வாத்தியார் அசாதரணமான கலைஞர். இத்தகைய அசாதரணமான நிலை என்பது இவருக்கு சாதாரணமாக வாய்த்தது இல்லை. மிகுதியான உழைப்பின் மீது உருவானதாகும். தன் தந்தை வரதன் வாத்தியார், சிற்றப்பா பாலகிருஷ்ண வாத்தியார் இவர்களெல்லாம் கூத்து நிகழ்த்திய காலத்தில் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தார் தேவன். சிறுவயதிலேயே தன் தந்தையும் சிற்றப்பாவும் கூத்து நிகழ்த்துவதை அவர்களுக்கு தெரியாமல் தம் ஊருக்குப் பக்கத்தில் நிகழ்த்தினால் பார்ப்பது வழக்கம். ஒருமுறை பக்கத்து ஊரில் கூத்து நிகழ்த்துவதற்காக சென்றிருந்த நேரத்தில் தேவன் அவர்களை வரதன் வாத்தியார் பார்த்து விட்டார். சோற்றுக்காகவா இங்க வந்தாய் என்று அடித்துவிட்டார். இவ்வாறு பலமுறை நிகழ்ந்துள்ளது. ஆனால் தேவன் இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் கலையை உள்வாங்குவதிலேயே மனதை செலுத்தி அனைத்து வேடங்களின் பாடங்களையும் கேட்டறிந்தார்.

வரதன் வாத்தியார் தேவன் கூத்துக் கலைக்கு வருவதைப் பலமுறை தடுத்தும் ஏற்கவில்லை. நான்காம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு கூத்துக் குழுவோடு இணைந்தார். தொடக்கத்தில் தோழி, புத்தி மந்திரி, கட்டியங்காரன் முதலான வேடங்களை ஏற்று நிகழ்த்தினார். மிகச் சிறுவயதிலேயே அனைத்து முதன்மை வேடங்களுக்கான அனைத்துப் பாடல்களையும் பாடும் திறமுடையவர். அப்பொழுது குழுவில் வரதன் வாத்தியார், பாலகிருஷ்ணன் வாத்தியார், இளநகர் முருகப்பா வாத்தியார், இளநகர் லோகு வாத்தியார் என்ற ஜாம்பவான்கள் இருந்ததால் இவரால் முதன்மை வேடம் அணிவதற்கான வாய்ப்பில்லை. அனாலும் இவருடைய ஆர்வத்தையும் திறமையையும் ஒரு கட்டத்தில் தடுத்து நிறுத்த முடியாமல் சில முதன்மை வேடங்களை வரதன் வாத்தியார் வழங்கினார். தான் ஏற்கும் வேடத்தின் மூலம் தன் முழு திறமையை காட்டியதால் கூத்துப் பார்வையாளர்களிடையே நன்மதிப்புப் பெற்றார். பார்வையாளர்களாலும், கூத்து ஏற்பாடு செய்பவர்களாலும் இந்த வேடத்தை தேவன்தான் நிகழ்த்த வேண்டும் என்று கேட்கக் கூடிய அளவிற்கு வந்த பிறகு தொடர்ந்து அனைத்து முதன்மை வேடங்களையும் வழங்க வேண்டிய சூழல் வந்தது. தேவன் தன்னுடைய 21 ஆம் வயதில் அனைத்து முதன்மை வேடங்களையும் ஏற்றி நிகழ்த்தும் கலைஞனாக உருவானாது கூத்தின் மீது கொண்ட மிகுந்த ஈடுபாடுதான்.

தேவன் வாத்தியார் வேடமேற்று நிகழ்த்திய வேடங்களில்,

1. வில்வளைப்பு - சித்திராங்கதன்

2. சுபத்திரை கல்யாணம் - அருச்சுனன்

3. ராஜசுயயாகம் - சிசுபாலன்

4. பகடைத்துகில் - துச்சாதனன்

5. தபசு - அருச்சுனன்

6. கீசகவதம் - கீசகன்

7. குறவஞ்சி - துரியோதனன்

8. கிருஷ்ணன் தூது - துரியோதனன்

9. அபிமன்னன் சண்டை - அபிமன்யு

10. கர்ணமோட்சம் - கர்ணன்

11. படுகளம் - துரியோதனன்

12. பாவடைராயன் பரமகேது - பரமகேது

13. வாலிமோட்சம் - வாலி

14. சயந்தவன் பங்கம் - சயந்தவன்

15. ரேணுகா சம்ஹாரம் - பரசுராமர், வண்ணான்

16. இரணிய விலாசம் - பிரகலாதன்

முதலன வேடங்கள் மிக குறிப்பிடத்தக்க வேடங்களாகும். கீசகவதம் கூத்தில்,

அண்டல மண்டல விண்டலத்தோர் யாரும்

எனக்கிணையிலை எனக் கூவி

அந்த விண்டலத்தோரும் எனைக் கண்டுமே

எந்தன் வீரமே பலபல பேச

சண்டகனத் திரு கேகயன் நாடன் கீசகன் வந்தனனே

என்று பாடிக்கொண்டு துடிப்பு மிக்க கர்ஜனையோடு வருவது பார்வையாளர்களிடையே ஒரு மிரட்சியை ஏற்படுத்தும். கூத்துப் பார்க்கும் பார்வையாளர்களில் சிலர் உறங்கிக் கொண்டிருந்தாலும் தேவன் வாத்தியார் வந்தவுடன் உறக்கத்திலிருந்து தன்னை எழுப்புமாறு அருகிலிருப்பவர்களிடமோ, உடன் வந்தவர்களிடமோ கூறிவிட்டு உறங்குவர். இவைதான் தேவன் வாத்தியாரின் ஆளுமையை உணர்த்தும் நிலைகள். குரல் சுத்தமாக இருக்கும். தேவன் எல்லாம் வேடம் கட்டவில்லை என்றால் அது கூத்தாகவே இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பானவர். 21 வயதில் முழுமையாக உருவான துடிப்பு 51 வயதாகியும் சற்றும் குறையாமல் இன்று உள்ளது வியப்பிற்குரியது. தற்பொழுதுவரை நூல் ஏணி, குச்சி ஏணி என்று 211 தபசு மரங்கள் ஏறி நிகழ்த்தியிருப்பது இவரின் கலை நிகழ்த்துதலுக்கான அங்கிகாரம் ஆகும். இந்த 211 தபசு மரம் ஏறிய இடங்கள் என் நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளேன்.

கர்ணமோட்சம் கூத்தில் கர்ணன் வேடம் 21 வயது தேவன், பொன்னுருவி வேடம் 50 வயது பாலகிருஷ்ண வாத்தியார் ஏற்று நிகழ்த்தும் கூத்து காண கண் கோடிகள் வேண்டும். கர்ணன் பொன்னுருவியிடம் அருச்சுனன்மீது போருக்குச் செல்வதற்காக தாம்பூலம் கேட்கும் சூழலில்,

கண்ணே இதற்கு என்ன செய்வேன்

கலங்குறேன் யாரை உய்வேன்

உன் முகத்தைப் பார்க்க பார்க்க

உளமுருகி வாடுறனே

பட்ட காலில் தான் படுமாம்

கெட்ட குடி தான் கெடுமாம்

என்னம் பழமொழி போலே

ஆச்சுதடி எங்கதியோ

கீர்த்திவர்மன் பெற்றெடுத்த

கிளிமொழியே என்ன செல்வேன்

மைந்தன் விஷ்வகேதுடனே

மாளிகையில் வீற்றிருப்பாய்

ஐயோ என் கண்ணே உனக்கு என்ன ஆறுதலைக் கூறுவேன் என்று பாடும் பாடலும்,

போர் செய்து பாண்டவாளை யானும்

நான் புகழுடனே பொறுப்புடனே

திரும்பி வருவேனோ வரமாட்டேனோ என் கண்ணே

அந்த தீரமுள்ள காண்டீபன் கணைதான் பட்டு

நான் சிதறிடவே என் மனம் பதறிடவே

இந்த பாராகிய பூமிதனில் வீழ்ந்தேனானால்

அந்த சூரசேன ராஜனவன் பெற்ற புதல்வியானும்

சொகுசாக எனை ஈன்ற குந்தம்மா தேவி

அவள் கேள்விப்பட்டு ஓடிவந்து என்மேல் விழுந்து

ஙூயோ கர்ணா கர்ணா மகனே மகனே என்று

மாரடித்து என்மேல் புரண்டழுவாள் அப்போ

மதிகுலத்து பிறந்த மன்னர் மன்னன் என்று அறிவாய் கண்ணே

என்ற விருத்தம் பாடும் பொழுதும் பார்வையாளர்களில் அழுகையை அறியாத கண்களும் குளமாகும். அத்தகைய நேர்த்தியான நிகழ்த்துதல் நிகழ்த்துவார். மேலும்,,

உன்னை நட்டாற்றில் விட்ட கருங்காலி நானடா

உனக்கு பால் கொடுக்காத பாவி நானடா

உனக்கு அன்னம் கொடுக்காத பாவி நானடா

ஐயோ கர்ணா மகனே மகனே என்று என் தாய் குந்தி அழுவாள் என்று சூழலுக்கு ஏற்ப சேர்த்து வசனம் பேசுவதில் வல்லவர் தேவன் வாத்தியார். இத்தகைய சிறப்புகளெல்லாம் தான் ஒரு மகா கலைஞனாக உயர்த்தியிருக்கிறது என்றால் மிகையில்லை.

இவ்வாறு ஒரு குழு குறித்த அனைத்துக் கலைஞர்களின் ஆளுமையை அளவிடும் திறன் ஒரு பார்வையாளர் பெற்றுள்ளார் என்பது சாதாரண பார்வையாளர் என்ற நிலையிலிருந்து பன்முக நோக்கில் பார்வையாளர்கள் குறித்து சிந்திக்க வேண்டியதற்கான களமும் உள்ளது. இத்தகைய வியப்பிற்குள்ளிருந்து மீள்வதற்குள் கூத்துப் பனுவல்களில் வரும் சொற்கள் குறித்து ஒரு பார்வையாளராக இருந்து செய்யும் பொருள் தேடல் முயற்சியைப் பற்றி கூறியபொழுது வேறொரு தளத்தில் க.சீ. இரவி அவர்கைளை வைத்து வியந்து பார்க்கச் செய்தது.

நான் கூத்துப் பாடல்களை கேட்டு ரசிப்பதோடு, அப்பாடல்களில் வரும் சொற்கள் குறித்தும் பொருள் தேடுவேன். அதில் 75 சதவீதத்திற்கான சொற்களுக்கு பொருளை கண்டுபிடித்து விடுவேன். 25 சதவீத சொற்களுக்கு பொருள் தேட முடியாமல் கைவிட்டுவிடுவேன். அவ்வாறு பொருள் காண முடியாத சொற்கள்தான் கூத்துப் பனுவலை இயற்றி ஆசிரியர்மீது மிகுந்த மரியாதையை என்னுள் உருவாக்கும். சயந்தவன் பங்கம் என்னும் கூத்தில், சயந்தவன் காட்டில் இருக்கக்கூடிய திரௌபதியை சந்திந்து உறவாகப் பேசி அழைத்து வருகிறேன் என்று துரியோதனனிடம் கூறுவான். அதற்காக தன் மனைவி அழைத்து உத்தரவு கேட்கும்பொழுது,

புதையல் போல் திரௌபதிக்கு ஐந்து பூதங்கள் காத்திருக்குதய்யா

அதனை நீவிர் கவனிக்காமல் அவ்விடம் சென்றீரானால்

சதயவே அவமானங்கள் சட்டமாய் நடக்குமன்னா

பதைக்குறாய் போவதற்கு பாவையால் செலவு தந்தேன்

என்ற விருத்தத்தைக் கூறி சயந்தவன் மனைவி உத்தரவு கொடுப்பாள். இந்த விருத்தத்தில் வருகின்ற செலவு என்னும் சொல்லுக்கு நீண்ட நாட்களாக பொருள் தேடி உத்தரவு என்பதை அறிந்தேன். இதுமாதிரியான வார்த்தைகளெல்லாம் அந்த காலத்து கூத்துப் பனுவல் ஆசியர்களுக்கு எப்படி தெரியும் என்று வியந்திருக்கிறேன்.

கூத்துப் பாடல்களிருந்தே அந்தக் கூத்தை இயற்றிய ஆசிரியர் பெயரையும் அறிந்துகொள்வேன் என்று க.சீ. இரவி கூறியது அவரின் ஆளுமையின்மீதான வியப்பை அதிகரித்தது. பகடைத்துகில் கூத்தில் வருகின்ற துச்சாதனன் திரைப்பாடலான,

திரௌபதி தாயே துணை வருவாயே

துரித உனதிரு பாதம் கதியென

துரித உனதிரு பாதம் கதியென

தினமும் நம்பினேன் எனைவந்து ஆதரி

உத்தமி என்றிடும் பத்தினி திரௌபதி

உரகக் கொடியோன் துரியன் தொடைமீது

விரித்த கூந்தலை முடித்த நாயகி

திரௌபதி தாயே துணை வருவாயே

நம்பினேன் உன்னையே இரட்சிப்பாய் என்னையே

நம்பினேன் உன்னையே இரட்சிப்பாய் என்னையே

நாடி உனதடி பாடி ‘வடிவேலன்’

தேடி எதிர்கொண்டோடி ஒருமிக்க

(திரௌபதி தாயே)

என்னும் பாடலில் வடிவேலன் என்று வருகின்றதன் மூலமும், வடிவேலன் என்று பாடும்பொழுது கூத்துக் கலைஞர்கள் கைகூப்பி வணங்குவதன் மூலமும் இக்கூத்துப் பனுவலை வடிவேல் என்னும் ஆசிரியர் எழுதியிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இதேப் போன்று குறவஞ்சிக் கூத்தில் குறத்தி வேடத்திற்குரிய கலைஞருக்கான பாலான,

பாஞ்சாலி பாரில் நல்ல புகழ் சீலி

பாஞ்சாலி பாரில் நல்ல புகழ் சீலி

துரியனின் சபதத்தை கெலிக்க

தூய கூந்தலினை முடிக்க

(பாஞ்சாலி)

வேல்விழி தனிநிகர் தேன்மொழி

வேல்விழி தனிநிகர் தேன்மொழி

‘முத்துசாமி’ பாடலில் புகுந்த

முகவசிகரம் மிகுந்த

(பாஞ்சாலி)

என்னும் பாடலில் வருகின்ற முத்துசாமி என்னும் பெயர் குறவஞ்சி கூத்துப் பனுவலையோ அல்லது இந்தப் பாடலையோ எழுதிய ஆசிரியராக இருக்கலாம். இதேப்போன்று மாசிலாமணி ஆசிரியரும் அருச்சுனன் தபசு கூத்தில் தன்னுடைய பெயரை ஒரு பாடலில் பதிவு செய்திருப்பார். ஒரு பாடலை பாடுவதை விட எழுதுவது கடினம். இவ்வாறான அரிதான வார்த்தைகளால் எழுதியிருக்கும் ஆசிரியர்கள் தெய்வப் பிறவிகள்தான்.

இவ்வாறு கூத்துப் பனுவல் ஆசிரியர்கள் பற்றி பகிர்ந்தகொண்டதன் தொடர்ச்சியாக தன்னுடைய எதிர்கால கனவையும் பதிவு செய்தார்.

ஒரு கூத்திற்கு சென்றால்

தத்தோம் தத்தோம் தத்தோம்

ஜெயனா ஜெயபவ ஜெயனா ஜெயபவ

ராஜகோபாலன் பஜே பஜே

ராஜகோபாலன் பஜே பஜே

ராஜகோபாலன் பஜே பஜே

என்ற போற்றிப் பாடல் தொடங்கி,

அகனா மணிகுணி பானுக்கு மங்கள பவனுக்கு மங்களம்

ஸ்ரீராம சந்திரருக்கு ஜெய மங்களம் திவ்யமுக சுந்தரருக்கு சுப மங்களம்

என்று மங்களப் பாடல் பாடல் பாடி கூத்து நிகழ்த்துதலை முடிக்கும் வரை இருப்பேன். இப்படிதான் இந்த தெய்வீகக் கலையான தெருக்கூத்துக் குறித்த இந்த சிற்றரிவைப் பெற்றேன். இந்தக் கலையை பார்த்து ரசித்த நான் மேடை ஏறவில்லை என்பது என் மனக்கவலை. இந்த கவலையை என் மகன் சரவணனை மேடையேற்றி தீர்த்துக்கொள்வேன். அவனும் என் குறையை போக்குவான் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

என்னுடைய மகனுக்கு தற்பொழுது பத்து வயதாகிறது. இந்த வயதிலேயே பெரும்பாலான கூத்துப் பாடல்களை பாடம் செய்துவிட்டேன். அருச்சனனுக்கு வில்வித்தையை கற்றுத்தந்த என்ற முனிவரின் சிலையை செய்து வைத்து வில்வித்தையை கற்றுக்கொண்டதைப் போன்று தேவன் என்னும் மகா கலைஞனின் கூத்து நிகழ்த்துதல் குறுந்தகடுகளைக் கொண்டே பாடல், ஆடல், அடவு முதலானவற்றை கற்றுக்கொள்கிறான். இந்த கூத்துக்குரிய குறுந்தகடு கொடைக்கல் என்னும் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பாரதக்கூத்தை ஆய்வு செய்த அயல்நாட்டு பெண்மணி பதிவு செய்ததாகும். எனக்கும் என் மகனுக்கும் விடுமுறை கால பொழுதுபோக்கே கூத்துப் பதிவு செய்யப்பட்ட குறுந்தகடுகளை தொலைக்காட்சியில் இட்டு பார்த்து ரசிப்பதும் பாடல்களை, அடவுகளை கற்றுக்கொள்வதுதான். தேவன் எப்படி அடவு, கிறிக்கி இடுகிறரோ அப்படியே என் மகனுக்கு செய்து காட்டுவேன். அவனும் அப்படியே அடி மாறாமல் பாடுவான். அடவும் இடுவான்.

இவ்வாறு கூத்துமீது மிகுந்த ஆர்வமுள்ள என் மகன் சரவணனை 18 வயதிற்குள் முதன்மை வேடங்களை ஏற்கும் தெருக்கூத்துக் கலைஞனாக உருவாக்கிவிட்டால் என் வாழ்நாள் புண்ணியம் பெற்றதாகிவிடும். இதுதான் என் வாழ்நாள் கனவும். தெருக்கூத்துக் கலை என்பத சாதாரணமானத அல்ல. ஒவ்வொரு கூத்தும் மக்களுக்கு நன்மை, தீமை, பாவம், புண்ணியம் என்னும் நற்பண்புகளை உணர்த்துகிறது. ஒவ்வொரு வேடமும் ஒரு குணங்களை மக்களுக்கு பாடம் புகட்டுகிறது.

க.சீ. இரவி அவர்கள் குண்டையார் தண்டலம் மாரியம்மன் கூத்துக் குழுவைக் குறித்து பகிர்ந்து கொண்ட பதிவுகள் பொன் ஏட்டில் பதிக்க வேண்டியவையாகும். தெருக்கூத்துக் கலையில் இத்தகைய மிகுந்த ஆர்வம் கொண்டதோடு, ஒரு குழு குறித்த பரம்பரையான வரலாற்றை மிகுந்த நுண்ணிய நுட்பத்துடன் கூடிய அறிதலோடு, ரசித்தலம், சொல் ஆய்வும் கொண்டுள்ளவரை எந்நிலையில் போற்றுவது. தன் மகனை மருத்துவராகவோ, பொறியாளராகவோ வளர்க்க வேண்டும் என்று கனவு காணும் மனித சமூகத்திற்கிடையில் ஒரு தெருக்கூத்துக் கலைஞனாக பார்த்துவிட்டால் தன் வாழ்நாள் புண்ணியம் பெற்றுவிடும் என்று கூறுவது இன்றைய தெருக்கூத்துக் கலை சார்ந்த பார்வையாளர்களின் மீதான பார்வையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கிறது.

க.சீ. இரவி அவர்கள் தன் வீட்டின் அழகு பொருள்களாகவும், தன் வாழ்வின் அர்த்தப் பொருள்களாகவும் மிருதங்கம், கூத்தர் பயன்படுத்தும் கைத்துண்டு, கத்தி முதலானவற்றை வைத்திருப்பதோடு, தன் இரு மகள்களுக்கும் மகனுக்கும் கூத்துப்பாடல்களை மனனம் செய்யுமாறு கூறுவதை காணும்பொழுது தெருக்கூத்துக் கலைக்கு மரணம் என்பதே இல்லை என்பதை உணரச் செய்கிறது.

கூத்துகள் – அருச்சுனன் தவம், ராஜசூயயாகம், கருமாரி பிறப்பு.

மாரியம்மன் தெருக்கூத்து நாடகக் குழு

படங்கள் – சே. சுந்தரமூர்த்தி, மு. ஏழுமலை, ஷோபா ராஜகோபாலன்

க.சீ. இரவி: ஒரு குழுவுக்கான ஆளுமைமிக்க பார்வையாளர் - 1

க.சீ. இரவி: ஒரு குழுவுக்கான ஆளுமைமிக்க பார்வையாளர் - 2

கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்பு

முனைவர் இரா. சீனிவாசன்

20 ஆண்டுகள் ஆசிரியப் பணி, மாநிலக் கல்லூரியில் இணைப் பேராசிரியர். பதிப்பாசிரியர், ஆய்வாளர்.

முனைவர் பட்டம்: தமிழ் இலக்கண மரபுகள்

பன்முக நோக்கில் திரௌபதி வழிபாடு என்னும் பொருளில் பேராய்வுத் திட்டத்தை முடித்துள்ளார்.

நல்லாப்பிள்ளை பாரதத்தை (18 பருவம், 131 சருக்கம், 13,946 பாடல்கள்) சந்திபிரித்துப் பதிப்பித்துள்ளார்.

தமிழ் இலக்கண மரபுகள், ஐந்திலக்கணம், நல்லாப்பிள்ளை பாரதம் (இரண்டு தொகுதிகள்), தமிழகத்தில் பாரதம் - வரலாறும் கதையாடலும், ஓர்மைவெளி, மணிமேகலையில் சமயமும் மெய்யியலும், சுழலும் மச்சேந்திரம், தொல்காப்பியச் செய்யுளியல்: புலனெறி இலக்கிய வழக்கு, மண்சிற்பங்கள், தெருக்கூத்து ஆக்கம் நிகழ்த்துதல் இரசித்தல், மகாபாரதக் கீர்த்தனை ஆகிய புத்தகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், புதியபனுவல் - தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழி வெளிவரும் ஆய்விதழ் (அச்சு & இணையம்) செம்மொழி நிறுவன நிதியுதவியுடன் நடத்திய இரண்டு பயிலரங்குகள், ஒரு கரத்தரங்கு ஆகியவை இவரது பங்களிப்புகள்.

முனைவர் மு. ஏழுமலை

சோளிங்கர் என்னும் வைணவத் தலத்திற்கு அருகில் உள்ள கரிக்கல் என்ற ஊரைச் சேர்ந்தவர். பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் படித்தவர். சென்னை மாநிலக்கல்லூரியில் ‘நாட்டார் பெண்தெய்வ வழிபாட்டின் அரசியல், பொருளாதாரம் - வேலூர் மாவட்டம்’ என்ற பொருளில் முனைவர்பட்ட ஆய்வை முடித்துள்ளார். பன்முக நோக்கில் திரௌபதி வழிபாடு (2008 - 2011), ‘தெருக்கூத்து பனுவல் உருவாக்கமும் நிகழ்த்துதலும்’ ஆகிய இரண்டு பெருந்திட்ட ஆய்வுகளிலும் ஆய்வு உதவியாளர். தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்று 40 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். இவருடைய முனைவர்பட்ட ஆய்வேட்டை உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் நூலாக வெளியிட்டுள்ளது.

கலையைக் காற்றில் கரைத்த கலைஞர்

திரௌபதி வழிபாடு: விரிவடையும் அர்த்தங்கள்

கமலக்கண்ணன் வாத்தியார்

குமாரசாமித் தம்பிரான்

திருவேங்கடம் வாத்தியார்

தங்கவேல் ஆசிரியர்

மண்ணு வாத்தியார்

த.ரங்கசாமி வித்துவான்

ஜெயராமன் வாத்தியார்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 ஜன 2018