மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

திமுக கூட்டணியில் தொடர்கிறோம்!

திமுக கூட்டணியில் தொடர்கிறோம்!

சென்னையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் நீடிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிமுகவின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று (ஜனவரி 7) நடைபெற்றது. இதில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை பின்வருமாறு:

திமுக கூட்டணியில் நீடிப்பது

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து, மாநில உரிமைகளைக் கபளீகரம் செய்து, பேரறிஞர் அண்ணா தொலைநோக்கோடு அறிவித்த மாநிலச் சுயாட்சிக்கு வேட்டுவைக்கும் வேலையில், மத்திய அரசு மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, திராவிட இயக்கத்தைக் காக்கவும், மாநிலச் சுயாட்சிக் கொள்கைக்கு வலுவூட்டவும், தமிழக வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திமுக தலைமையிலான கூட்டணியில், மதிமுக தொடர்ந்து செயல்படும்.

பொங்கலைச் சிறப்பாக கொண்டாட வேண்டும்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மதிமுக கொடிக்கம்பங்களுக்குப் புதிய வண்ணம் தீட்டி, அனைத்துப் பகுதிகளிலும் கொடி ஏற்று விழாக்களைச் சிறப்பாக நடத்த வேண்டும்.

ஆர்.கே.நகரில் பணம் கொடுத்தவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வேட்பாளர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தால்தான் ஜனநாயகம் தழைக்கும். அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

ஓகி நிவாரணம் வழங்க வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய ஓகி புயலால் அம்மாவட்டமே முற்றிலும் உருக்குலைந்து போனது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.

புயல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்காமல் மத்திய - மாநில அரசுகள் அலட்சியம் காட்டியதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கிக் காணாமல் போனார்கள். பலர் சூறாவளிக்குப் பலியானார்கள். எனவே, கன்னியாகுமரியை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவித்து, மத்திய - மாநில அரசுகள் முழு அளவில் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்; தமிழக அரசு கோரியுள்ள 13,520 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

நெல்லுக்கான ஆதார விலையை அதிகரிக்க வேண்டும்

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்று தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகள் நிலுவை தொகையை வழங்க வேண்டும்

நடப்பு கரும்புப் பருவத்துக்கு மத்திய அரசு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.2,550 என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4,000 ஆக தீர்மானிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்குச் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,000 கோடியை இந்த ஆண்டு பொங்கலுக்கு முன்பாக தமிழக அரசு பெற்றுதர வேண்டும்.

டிராக்டரை வணிக வாகனமாக மாற்றக் கூடாது

வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்பட்டுவரும் டிராக்டர்களுக்கு இதுவரையில் வரி விதிப்பு இல்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 மட்டுமே செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிராக்டரை வணிக பிரிவு வாகனமாக மாற்றி இருக்கிறது. இதனால், வணிக வாகனங்களுக்கு இணையாக டிராக்டருக்கும் சாலை வரியாக ஆண்டுக்கு ரூ.650 விதிக்கப்படும். விவசாயிகளைப் பாதிக்கும் இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

முத்தலாக்கை திணிப்பதற்குக் கண்டனம்

இஸ்லாமிய இயக்கங்களின் கருத்தை அறிய முற்படாமல், மூன்று ஆண்டுகள் தண்டனை என்ற விபரீதம் விளைவிக்கின்ற பிரிவுகளையும் சேர்த்து, முத்தலாக் தடைச் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளாட்சி வார்டுகளை வரையறையை மறு ஆய்வு செய்ய வேண்டும்

தற்போது உள்ளாட்சி வார்டுகள் வரையறை செய்யும் அதிகாரிகள் ஆளும் கட்சியினரின் விருப்பத்துக்கேற்ப வார்டுகளைப் பிரித்தும், சேர்த்தும் வகைப்படுத்தி உள்ளனர். இத்தகைய முறைகேடுகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன், உள்ளாட்சி வார்டுகள் வரையறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்; அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்துகளைப் பெற ஜனவரி 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

பட்டாசு தொழிலுக்கு விதிவிலக்கு

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாக சுமார் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோரும், பட்டாசு துணைத் தொழில்களான அச்சு, போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டோரும் வேலைவாய்ப்புப் பெற்று வருகின்றனர்.

லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மத்திய - மாநில அரசுகள் சுற்றுச் சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது

தேனி மாவட்டத்தில், அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நியூட்ரினோ திட்டத்துக்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி கொடுக்கக் கூடாது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018