முகநூலில் வீடியோ: பைக் ரேஸ்காரர்கள் கைது!

சென்னையில் சாலையில் தீப்பொறி பறக்க சாலைத் தடுப்புகளை இழுத்துச் சென்று அட்டகாசம் செய்ததோடு மட்டுமல்லாமல் அதைச் சாகசமாக நினைத்து முகநூலில் வீடியோ மூலம் விவரித்தவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா காமராஜர் சாலை, கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் போக்குவரத்துத் துறையினர் வைத்துள்ள சாலை தடுப்புகளை பைக் ரேஸ்காரர்கள் இழுத்துச் சென்று அடாவடித்தனம் செய்தனர். இதன் காரணமாகக் காவல் துறையினர் தனிப்படை அமைத்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சாலைத் தடுப்புகளை இழுத்துச்சென்று அட்டகாசம் செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் செய்த அடாவடித்தனத்தை ஏதோ வீர சாகசம் செய்துள்ளதாக எண்ணி அந்தக் கும்பலில் ஒருவர் தனது முகநூலில் அச்சம்பவத்தை விவரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பைக் ரேஸில் ஈடுபட்டபோது காவல் துறையினர் பிடித்துச் சோதனை செய்ததால் ஆத்திரம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டு, அவர்களை ஒருமையில் பேசி அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோ காவல் துறையினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, சைபர் க்ரைம் காவல்துறை உதவியோடு, முகநூலில் வீடியோ பதிவு வெளியிட்ட பீட்டர் என்ற அந்த இளைஞனைத் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு பேர் தனிப்படை காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை அடையாளம் கண்டுபிடித்துள்ள தனிப்படை காவல் துறை, தலைமறைவாக உள்ளவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே பைக் ரேஸில் ஈடுபட்டதாகவும் மற்றும் சாலை இரும்பு தடுப்பு இழுத்தச் சென்ற சம்பவத்தில் தொடர்புடையதாகவும் கூறி, பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.