மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சிறையில் லாலுவின் பணி என்ன?

சிறையில் லாலுவின் பணி என்ன?

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலுவுக்குச் சிறையில் செய்ய வேண்டிய பணி மற்றும் அதற்கான ஊதியம் போன்றவை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த 1996ஆம் ஆண்டில், கால்நடை தீவனத் திட்டத்தில் ரூ.89.27 லட்சம் முறைகேடு செய்தது தொடர்பான 2ஆவது வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததையடுத்து, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட 16 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்துத் தீர்ப்பளித்தார். இதில், லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறையில் லாலுவுக்குத் தோட்ட பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நாளொன்றுக்கு அவருக்கு ரூ.93 ஊதியம் வழங்கப்படவுள்ளது.

நீதியின் மீது நம்பிக்கை உள்ளது

லாலுவுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து அவரது மகனும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து லாலு பிரசாத் யாதவ் மண்டியிடுவார் என நினைத்த அனைவருக்கும் அவர் பயமறியாதவர் என்பது இப்போது தெரிந்திருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் லாலு தனது கொள்கையில் இருந்து விலகமாட்டார்.

இந்தத் தீர்ப்பு முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இருப்பினும் நீதித்துறை அதன் கடமையைச் செய்துள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் அடங்கிய நகல் கிடைத்தவுடன் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

லாலுவுக்கு நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஏனெனில் நீதியின்மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நாங்கள் பயந்துவிடப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சி

இதற்கிடையே லாலுவுக்குத் தண்டனை கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறுகையில், “லாலுவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை நாங்கள் முழுமனதாக வரவேற்கிறோம். இது பீகார் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம் ஆகும். இதனால் ஊழலின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018