மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

கூத்து வாத்தியார்கள்: 9

கூத்து வாத்தியார்கள்: 9

க.சீ. இரவி: ஒரு குழுவுக்கான ஆளுமைமிக்க பார்வையாளர் - 2

இரா.சீனிவாசன், மு.ஏழுமலை

2002இல் எனக்குத் திருமணமானது. என்னுடைய வாழ்நாளில் சினிமா தியேட்டருக்குச் சென்று திரைப்படம் பார்த்தது ஒரேமுறைதான். அதுவும் திருமணமான புதியதில் என்னுடைய மனைவிக்காக புதிய கீதை என்னும் திரைப்படம் பார்த்தேன். கூத்துக் கொட்டகைகள்தான் என்னுடைய அரங்கம், கூத்துப் பாடல்கள்கள் எனக்கு சுவாசம். பணிக்காக இரு சக்கர வாகனத்தில் செல்லும்பொழுதும் கூத்துப் பாடல்களைத்தான் பாடிக்கொண்டே செல்வேன்.

குண்டையார் தண்டலம் மாரியம்மன் தெருக்கூத்து மன்றம் ஒரு பரம்பரை கூத்துக் கலைஞர்களால் உருவான குழுவாகும். ஒரு தெருக்கூத்துக் கலைக்குரிய முறையான நெறியோடு கலையை வளர்த்து வருபவர்கள். இக்குழு,

1. சின்னகுழந்தை

2. குள்ளப்பன்

3. வரதன் (அண்ணன்) - பாலகிருஷ்ணன் (தம்பி)

4. தட்சணாமூர்த்தி (அண்ணன்) தேவன் (தம்பி) (வரதன் வாத்தியார் மகன்கள்), முருகன் (பாலகிருஷ்ணன் வாத்தியார் மகன்)

5. குமார் (தட்சணாமூர்த்தி வாத்தியார் மகன்)

என்று ஐந்து தலைமுறைகளால் வளர்ந்துவரும் சிறப்பை உடையது. சின்னகுழந்தை மேஸ்திரி வாத்தியார் கூத்தாடியதை எங்கள் தந்தை பார்த்திரு’ணகிறார். நான் பார்த்தது வரதன் வாத்தியார் முதல் குமார் வரையிலானவர்களின் கூத்தைப் பார்த்து வருகிறேன். வரதன் வாத்தியார் குழுவுக்கான தலையேற்ற நேரத்தில் மிக சிறப்பான கூத்து வாத்தியார்கள் பலர் இருந்தனர். அவர்களில் இளநகர் முருகப்பா வாத்தியார், இளநகர் லோகு, குண்டையார் தண்டலம் பாபு முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் கூத்துக்கலையை கரைத்துக் குடித்தவர்கள். இளநகர் முருகப்பா வாத்தியார்தான் அனைத்து முதன்மை வேடங்களையும் நிகழ்த்தக்கூடியவர்.

வரதன் வாத்தியார்

குண்டையார் தண்டலம் குழுவின் வரலாற்றைக் காணும்பொழுது, சின்னகுழந்தை மேஸ்திரி வாத்தியார், குள்ளப்ப மேஸ்திரி வாத்தியார் ஆகியோர்களுக்குப் பிறகு, இக்குழுவை மிக உயர்வான இடத்திற்கு கொண்டு சென்றவர் வரதன் வாத்தியார். இவர் தட்சணாமூர்த்தி வாத்தியார், தேவன் வாத்தியார் என்னும் கூத்து வாத்தியார்களை தெருக்கூத்துக் கலைக்குக் கொடுத்த தெய்வப் பிறவி ஆவார். கீசக சம்ஹாரம் கூத்தில் கீசகன் வேடம், அபிமன்னன் சண்டையில் அபிமன்னன், பதினெட்டாம் போரில் துரியோதனன் வேடம் கட்டினால் அந்த நிஜ உருவங்கங்களும் துடிப்பும் நம் கண் முன் தெரியும் அத்தகைய மிகத் திறமையான கலைஞர்.

பாலகிருஷ்ணன் வாத்தியார்

மாரியம்மன் தெருக்கூத்து மன்ற குழுவில் வரதன் வாத்தியாரின் உடன் பிறந்த தம்பி பாலகிருஷ்ண வாத்தியார். கிருஷ்ண வேடமிட்டு திரைக்குள்ளிருந்து,

தேவகி தனயனாகி என்றுமே புகழ் பெற்றோங்கும்

பாவலர் ஆசி கூற பாரளந்திட்ட மாயன் வருகின்றேனே

கோவலர் திலகனான கோபிகா ரமணென்னும்

பூவிழி ருக்மணி ராதா புகழ் சபை மேவி வருகின்றேனே

என்னும் விருத்தத்தை கூறிக்கொண்டு சபைக்கு வந்தால் வைகுந்தத்தில் இருந்து அந்த நாராயணமூர்த்தியே பூலோகத்திற்கு வந்ததைப் போன்ற கட்சி உருவாகும். அத்தகைய சிறப்பான வேடப் பொருத்தமுடையவர். சபைக்கு வந்து,

பந்தமற்ற தூயன் நான் பாண்டவர் சகாயன் நான்

பந்தமற்ற தூயன் நான் பாண்டவர் சகாயன் நான்

நான் பக்த வத்சல பறிசுத்த நிச்சல நந்தன்

பார்த்தன் சாரதியான தீர்த்தன் ஜனார்த்தனன்

வந்தனன் விந்தையாய் சிந்தை மகிழ்ந்து

சுந்தர நந்தகோபால கிருஷ்ணன் வந்தனன் வந்தனன் வந்தனன்

தேவகீத மைந்தன் நான் ஸ்ரீதர கோவிந்தன் யான்

தேவகீத மைந்தன் நான் ஸ்ரீதர கோவிந்தன் யான்

நான் தேவன் நான் தேவன் தேவர்க்கு வசுதேவன்

ஷேச சைன திண்ணன் செங்கமல கண்ணன் மேக வண்ணன்

(பந்தமற்ற தூயன்)

சங்கு சக்கர கையன் யான் சாதுகட்கு மெய்யன் யான்

சங்கு சக்கர கையன் யான் சாதுகட்கு மெய்யன் யான்

நான் சகல நான் சகல பரிபூரண அகிலத்துக்கும் காரண

சண்ட பிரசண்டமதை உண்ட கோதண்ட நான்

(பந்தமற்ற தூயன்)

என்று பாடிக்கொண்டு வந்தால் கிருஷ்ணன் கிருஷ்ணன்தான். இவர்களெல்லாம் இந்த வேடத்திற்கு இவர்கள்தான் என்று வாழ்ந்தவர்கள். வேறொருவர் கிருஷ்ண வேடமணிந்து வந்தால் கூத்து நிகழ்த்துதலை நிறுத்துவார்கள். இவர் இல்லையென்றால் கூத்து நிகழ்த்தவே வேண்டாம் என்று பார்வையாளர்கள் கூறுவார்கள். அத்தகைய சிறப்பு இவருக்குண்டு. இவருடைய நடை, உடை, பாவணை, உடல் உருவம், குரல் வளம் அனைத்தும் வேடத்திற்கு சிறப்பு சேர்க்கும். இதேப்போன்று குறவஞ்சி கூத்தில் குறத்தியாக வேடமணிந்து,

கிருஷ்ணன் தூது கூத்தில் கிருஷ்ணன் வேடமேற்று,

இதுவென்ன அதிசயமோ

இச்சபைதனில் இருக்கும் மன்னர் மன்னர்

வாய்திறவாமல் இருப்பது இதுவென்ன அதிசயமோ

மதுவதுண்ட மக்கடம்போல் அருகில் இருக்கும்

சகுனியின் சதி செய் சூதோ இல்லை விதியின் தீதோ

(இதுவென்ன அதிசயமோ)

தம்பி என்னும் பொல்லா துச்சாதனனின் நெட்டோ இல்லை

தமையன் கர்னனவனின் நெட்டோ

(இதுவென்ன அதிசயமோ)

என்று பாடிக்கொண்டு வந்தால் அவருடைய உடல்மொழியே அவருடையை ஆளுமையை உணர்த்தும் அத்தகைய மகா கலைஞன். இவர் கிருஷ்ண வேடத்திற்கு மட்டுமல்ல குறவஞ்சிக் கூத்தில் குறத்தி வேடத்திற்காகவும் பிறந்தவர். குறத்தி வேடமிட்டு வஞ்சி வந்தாளே குறவஞ்சி வந்தாளே என்ற பாடலை பாடியும், குறத்தி மொழியை பேசியும் நிகழ்த்துவது பார்வையாளர்களை வியப்படையச் செய்யும். இவர்கள் வாழ்ந்த காலமெல்லாம் தெருக்கூத்துக் கலையின் பொற்காலம்.

பாலகிருஷ்ண வாத்தியார் ஏற்று நிகழ்த்திய வேடங்கள் அனைத்தையும் அவருடைய மகன் முருகன் வாத்தியார் தற்பொழுது இக்குழுவில் ஏற்று நிகழ்த்துகிறார்.

தட்சணாமூர்த்தி வாத்தியார்

மாரியம்மமன் தெருக்கூத்து மன்றம் என்னும் இக்குழு நிகழ்த்தாத ஊரே இல்லை என்ற அளவிற்கு பெயர் பெற்ற குழுவாக விளங்கியது. இந்நிலையில் இக்குழுவின் மூத்தக் கலைஞராகவும் வாத்தியராகவும் விளங்கிய வரதன் வாத்தியார் காலமான பிறகு இக்குழுவினர் அனைவரும் மீள முடியத துயரத்தை அடைந்தனர். இதேப்போன்று, வரதன் வாத்தியார் போன்ற ஆளுமையை இனி யார் இந்த குழுவில் நிகழ்த்துவார்கள் என்று தெருக்கூத்துப் பார்வையாளர்களும் வருந்திய நேரத்தில் மிகப் பெரும் ஆளுமைகளோடு உருவானவர்தான் வரதன் வாத்தியாரின் மூத்த மகன் தட்சணாமூர்த்தி வாத்தியார். மிகச் சிறந்த குழு நிர்வாகியாகவும் கலைஞராகவும் உருவானார். வரதன் வாத்தியார் ஏற்று நிகழ்த்திய அனைத்து முதன்மை ஆண் வேடங்களையும் ஏற்று நிகழ்த்தினார். குழுவின் பெயரை, மரியாதையை விட்டுக்கொடுக்காமல் வளர்ச்சிபெறச் செய்தார். தட்சணாமூர்த்தி வாத்தியார் அனைத்து கூத்துப் பாடங்களையும் அறிந்தவர் என்ற பெயரெடுத்ததோடு, கலைஞர்களை விட்டுவிடாமல், மது அருந்தாத கூத்துக் குழு என்ற சுய கட்டுப்பாடுடைய குழுவாக வளர்த்துவரும் பெருமை இவருக்கு உண்டு. ஒரு தெருக்கூத்துக் கலைஞன் என்றால் சாதாரணமானவன் அல்ல அனைத்தும் அறிந்தவன் என்ற சமார்த்தியத் தன்மையோடு, கம்பீரத்தோடு, கலைஞன் என்ற ஆணவத்தோடு வலம் வந்துகொண்டிருப்பவர்.

தட்சணாமூர்த்தி வாத்தியார் நிகழ்த்தும் வேடங்களில்,

1. வில்வளைப்பு - பாஞ்சால மன்னன்

2. சுபத்திரை திருமணம் - பலராமர்

3. ராஜசுய யாகம் - காளி வேடம்

4. பகடைத்துகில் - துரியோதனன்

5. அருச்சுனன் தபசு - குறவன்

6. குறவஞ்சி - குறவன்

7. கிருஷ்ணன் தூது - துரியோதனன்

8. அபிமன்யு சண்டை - அருச்சுனன்

9. கர்ணன் மோட்சம் - கட்டியக்கரன்

10. பதினெட்டாம்போர் - துரியோதனன்

11. இரணியவிலாசம் - இரணியன்

12. ரேணுகா சம்ஹாரம் - ஜமதக்கினி முனிவர்

முதலான வேடங்கள் மிக சிறப்பான வேடங்களாகும். சுபத்திரை திருமணம் கூத்தில் கிருஷ்ணராக பாலகிருஷ்ண வாத்தியாரும் பலராமராக தட்சணாமூர்த்தி வாத்தியாரும் வேடமணிந்து செய்யும் தர்க்க நிகழ்வை காணக் கண் கோடி வேண்டும். அதேப்போன்று கிருஷ்ணன் தூது கூத்தில் பாலகிருஷ்ண வாத்தியாரின் கிருஷ்ண வேட ஒப்பனையும் துரியோதனனோடு (தட்சணாமூர்த்தியோடு) செய்யும் தர்க்கமும் பார்வையாளர்களை இன்பத்தில் ஆழ்த்தும் அத்தகைய அற்புதமான நிகழ்த்துதலாக அமையும்.

தட்சணாமூர்த்தி வாத்தியார் நிகழ்த்துதலுக்கு கிரிடம் வைத்தாற்போல் திகழ்வது, அவர் நிகழ்த்தும் பதினெட்டாம்போர் துரியோதனன் நிகழ்த்துதலாகும். திரைப்பாட்டான,

சாம்ப சாம்ப சிவ சோம சுந்தரேசா

சர்வ பரிபூரண நந்தா நந்தா

காமனை எரித்த கருணாகரனே

காட்சி தந்தருளுவது எப்போ எப்போ

பாமரன் போலவே பதறி நான் வாடுறேன்

பாதுகாத்தருள்வாள் என்னை என்னை

வருகிறான் எதிர்க்கிறான் சங்கடம் செய்கிறான்

மண்டியிட்டு அழைக்கிறான் என்னை என்னை

(சாம்ப சாம்ப சிவ)

எமனைப் போலவே எருமைக் கடாவில் எறி

எந்தனை எதிர்க்கிறான் என்னை என்னை

தாமரை இலைமேல் தண்ணீரைப் போல்

தயங்குது எந்தன் மனம் நொந்து நொந்து

(சாம்ப சாம்ப சிவ)

என்று தன் உரத்தக் குரலில் தெளிவான சொற்களில் பாடி வரும்பொழுது மேடையே புதிய பொலிவு பெறும். உறங்கும் பார்வையாளர்களும் விழித்துக்கொள்வார்கள். அத்தகைய அற்புதமான குரல்வளமும் உருவமும் அமைந்திருப்பது சிறப்பாகும். ஐம்பத்தாறு தேசத்து அரசனுக்குரிய கம்பிரம் இருக்கும்.

பதினெட்டாம்போர் துரியோதனன் வேடம் ஒரு கலைஞனுக்கு சவாலான வேடமாகும். துடிப்பு சார்ந்த வேடத்தையும் நிகழ்த்திவிடலாம். இரவு முழுவதும் சல்லியன் இறப்பு, சகுனியின் இறப்பு, வீமனுக்கு தான் அஞ்சிய நிலை என துயரத்துடனே நடிக்க வேண்டிய நிலையில் தட்சணாமூர்த்தி வாத்தியார் சாதாரணமாக நிகழ்த்துவார். தன் தந்தை நிகழ்த்திய பதினெட்டாம் போர் துரியோதனன் வேடத்தை உள்வாங்கி நிகழ்த்துவார்.

தட்சணாமூர்த்தி வாத்தியாரின் நிகழ்த்துதலை எடுத்துக்காட்டும் பாடல்களில்,

வாரேன் வாரேன் இதோ துரியன் என்னும் பாவி

துரியன் என்னும் பாவி துரியன் என்னும் பாவி

ஆராத துயரத்தை ஆற்றுவார் இல்லையே

ஆராத துயரத்தை ஆற்றுவார் இல்லையே

என்னும் பாடலும்,

அய்யய்யோ பாயும் தெய்வம் செய் சதிதானோ

அய்யய்யோ பாயும் தெய்வம் செய் சதிதானோ

இதுவும் நல்ல விதிவசமோ வேதாங்கம் விட்டகதி

அந்த அதிபலன் பீமன் இருப்பதால்

மாயக் கண்ணனும் உடன் இருப்பதால்

வெம்பி வெம்பியே உள்ளம் சோருதே

தத்தி தளும்புதே சித்தம் கலங்குதே

அய்யய்யோ பாயும் தெய்வம் செய் சதி தானோ

என்ற பாடலும், சகுனி இறந்த பிறகு அவருடைய உடலை வைத்துக் கொண்டு பாண்டவர்களை இழிவாகப் பாடும்,

நான் இருக்கும் மஞ்சத்திலே மாமா மஞ்சத்திலே மாமா

இந்த நாய்கள் இருந்து வாழ நாளச்சுதோ மாமா

அய்யய்யோ மாமா அலைய விட்டாயோ என்னை

அய்யய்யோ மாமா அலைய விட்டாயோ என்னை

என்ற பாடலும், வீமனுக்கு பயந்து மண்டியிட்டும், மண்ணில் மார்பை தேய்த்தும் நிழ்த்துதலின் பொழுது வருகின்ற,

காளிகளா கூளிகளா உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கிறேன்

கட்டெரும்பே சிற்றெரும்பே உங்க காலலில் விழுந்து கேட்டுக்கிறேன்

இதுவும் எந்தன் விதிவசமோ வேதாந்தன் விட்ட கதி

என்ற பாடலும் பாடி நிகழ்த்தினால் ஐம்பத்தாறு தேசத்து அரசன் மண்ணாசையால் எத்தகைய நிலை அடைந்து துன்புறுகிறான் என்று பார்வையாளர்களும் கண்கலங்குவார்கள். இவ்வேடத்திற்காவே வாழ்ந்த வரதன் வாத்தியார் விட்ட இடத்தை தட்சணாமூர்த்தி வாத்தியார் மிகுந்த ஆளுமையோடு நிரப்பினார்.

(அடுத்த பகுதி மாலை 7 மணி பதிப்பில்)

கூத்துகள் – அருச்சுனன் தவம், ராஜசூயயாகம், கருமாரி பிறப்பு.

மாரியம்மன் தெருக்கூத்து நாடகக் குழு

படங்கள் – சே. சுந்தரமூர்த்தி, மு. ஏழுமலை, மீனாட்சி மதன்

க.சீ. இரவி: ஒரு குழுவுக்கான ஆளுமைமிக்க பார்வையாளர் - 1

கலையைக் காற்றில் கரைத்த கலைஞர்

திரௌபதி வழிபாடு: விரிவடையும் அர்த்தங்கள்

கமலக்கண்ணன் வாத்தியார்

குமாரசாமித் தம்பிரான்

திருவேங்கடம் வாத்தியார்

தங்கவேல் ஆசிரியர்

மண்ணு வாத்தியார்

த.ரங்கசாமி வித்துவான்

ஜெயராமன் வாத்தியார்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018