திருச்சியில் ரெடிமேட் பயணியர் நிழற்குடை!

தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ‘ரெடிமேட்’ பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணியர் நிழற்குடை பழுதடைந்து இருந்தது. பின்னர் ஆட்சியரின் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது. இரண்டு நாள்களுக்கு முன்பு பயணியர் நிழற்குடைக்கான பாகங்களைக் கொண்டு, சுமார் மூன்று மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடித்து அமைக்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த கட்டுமான ஊழியர்கள் இந்தப் பயணியர் நிழற்குடையை அமைத்துக் கொடுத்தனர்.
“இந்த ரெடிமேட் பயணியர் நிழற்குடை சாதாரண கட்டுமான கட்டடத்தை விட 20 சதவிகிதம் கூடுதலாக உழைக்கும். இதற்கு ஏழு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. மேலும் உரிய முறையில் பராமரித்தால் 50 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும். இதேபோல் கழிப்பிடங்கள், கழிவுநீர் தொட்டி, குடிநீர்த் தொட்டி, சுரங்கப்பாதை எனப் பலவும் உருவாக்க முடியும். மேலும் இந்தப் பயணியர் நிழற்குடையை எப்போதும், எங்கும் மாற்றிக்கொள்ளலாம்” என்று கட்டுமான ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த ரெடிமேட் பயணியர் நிழற்குடை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.