மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சட்டமன்றம்: லைவ் ஆகுமா?

சட்டமன்றம்: லைவ் ஆகுமா?

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைத் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமென சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதுபோல, தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டில் லோக் சத்தா கட்சியின் மாநிலத் தலைவர் டி.ஜெகதீஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இதற்கு சமீபத்திய தொழில்நுட்பங்கள் கொண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்ப கட்டமாக ரூ.60 கோடி செலவாகும். எனவே, நேரடி ஒளிபரப்பு என்பது இயலாத காரியம் என்று சட்டமன்ற செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக்கொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், ‘சட்டமன்றக் கூட்டத்தொடரை எங்கள் கேப்டன் தொலைக்காட்சி மூலம் இலவசமாக ஒளிபரப்பத் தயாராக உள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால், இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே நாளை (ஜனவரி 8) சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் ஆரம்பிக்க உள்ளது. ஆளுநராகப் பதவியேற்ற பிறகு பன்வாரிலால் நாளை முதன்முறையாக உரையாற்றவுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 6) சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஆளும் அதிமுக அரசு தங்களுடைய ஒற்றுமையை நிரூபிக்கவும் அரசியல் காரணங்களுக்காகவும், எதற்கும் உபயோகம் இல்லாத எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை 200 கோடி ரூபாயில் நடத்திவருகிறது. எம்.ஜி.ஆரின் 100ஆவது பிறந்த நாளுக்காகச் சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அந்தப் பணத்தை ஒதுக்கி இருந்தால், தமிழகமே ஆளும் அரசை பாராட்டி இருக்கும். ஆனால், மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்தியதால், எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளும் அதிமுக அரசு மண்ணைக் கவ்வியது” என்று குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், “எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, அவரது தொலைக்காட்சி கேப்டன் டிவி மூலமாக இலவசமாக நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக இருப்பதாக கூறிய பின்னும் தமிழக அரசு அக்கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை. அரசின் ஆளுமையும், அமைச்சர்களின் திறமையும் உறுப்பினர்களின் வாதத்திறனும் குறைவாக இருப்பதினால் அரசு அஞ்சுகிறதா?” என்று கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் அதில், “அண்டை மாநிலமான ஆந்திராவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சிகள் அனுமதிக்கப்படுகிறது. இன்னும் எளிமையாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் அல்லது தூர்தர்ஷன் பொதிகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம். ஜனநாயகத்தின் கோயிலாக செயல்படும் சட்டசபையிலே வெளிப்படைத்தன்மை இல்லை என்பது வருத்தத்திற்குறிய செய்தி.

எனவே, இனிமேலும் அற்ப காரணங்களைக் காரணம்காட்டி காலம் தாழ்த்தாமல் ஜனநாயகத்தை வலிமைப்படுத்த உடனடியாக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். தமிழகச் சட்டமன்றத்தின் இணையதளமானது எந்த ஒரு தகவலையும் எளிதில் பெற முடியாதவண்ணம் மிகவும் மோசமாக உள்ளது. அதையும் தமிழக அரசு கருத்தில்கொண்டு மேம்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018