மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

திமுக - அதிமுக கூட்டணி: சாட்சியாகும் தர்மபுரி!

திமுக - அதிமுக கூட்டணி: சாட்சியாகும் தர்மபுரி!

நாளை (ஜனவரி 8) தமிழகச் சட்டமன்றம் கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க சபையைக் கூட்ட உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வரும் முன்பே சட்டமன்றம் கூடுகிறது. ஆகையால், இந்தத் தொடரில் அரசுமீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால், இதற்கிடையில் திமுக எம்.எல்.ஏக்களைக் கைக்குள் போட்டுக்கொள்ள திட்டமிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கான்ட்ராக்ட் பணிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார் என்று ஜனவரி 5ஆம் தேதி மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை பகுதியில், ‘திமுகவுக்கு எடப்பாடியின் பொங்கல் பரிசு’என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தச் செய்திக்கு இன்னொரு ஆதாரமாக அரங்கேறியிருக்கிறது நேற்று (ஜனவரி 6ஆம் தேதி) தர்மபுரியில் நடந்த பொங்கல் பரிசு வழங்கும் அரசு விழா.

அதிமுக அரசின் விழாக்களில் திமுக எம்.எல்.ஏக்கள் தலையைக்கூட காட்ட மாட்டார்கள் என்பதுதான் இதுவரையில் தமிழ்நாடு பார்த்துவந்த அரசியல். ஆனால், இதற்கு நேர் மாறாக தர்மபுரி பொங்கல் பரிசு வழங்கும் அரசு விழாவில், அதிமுக அமைச்சர் கே.பி. அன்பழகனும், திமுக எம்.எல்.ஏவும் மாவட்டச் செயலாளருமான தடங்கம் சுப்பிரமணியனும் ஒரே மேடையில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதை அரசியல் நாகரிகம் என்று ஒரேயடியாக நம்பிவிடவும் முடியவில்லை.

அதிமுக அமைச்சரும், திமுக எம்.எல்.ஏவும் ஒரே மேடையில் சிரித்து மகிழ்வது பற்றி தர்மபுரியில் விசாரித்தால், “நீங்கதான் மின்னம்பலத்தில் மொத்தமா எழுதிட்டீங்களே... திமுகவினருக்கு தாராளமா கான்ட்ராக்ட் பணிகள் போயிருக்குன்னு. அதுதான் காரணம்” என்று சிரித்தனர் அதிமுகவினர்.

திமுகவினரை இப்படி வசப்படுத்திவிட்டார்கள் என்றால்... அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் அமோகமான பொங்கல் பரிசுகள் வழங்கியிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி.

“ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள டி.டி.வி.தினகரனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் ரகசிய உறவுகள் இருப்பதை அறிந்த முதல்வர், அவர்களைக் கணிசமாக கவனிக்க அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். முதல்வர் சொன்ன தொகையைப் பல அமைச்சர்கள் அந்தந்த மாவட்ட எம்.எல்.ஏக்களுக்குக் கொடுத்து திருப்திப்படுத்தியுள்ளார்கள். இதில் மூன்று அமைச்சர்கள் மட்டும் முரண்டு பிடித்துள்ளார்கள். காரணம், முதல்வர் குறிப்பிட்ட தொகை அவர்கள் கைக்கு முழுதாக வந்து அடையாததுதான்.

கர்நாடக எல்லையோர மாவட்ட அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட தொகை முதல்வர் சொன்னதில் பாதிதான். ஆனால், ஏற்கெனவே ஜெயலலிதா தோற்ற தொகுதிக்காரரோ, ‘முதல்வர் கொடுக்கச் சொன்னதை முழுசா கொடுங்க’ என்று கேட்டு வாங்கிக் கொண்டாராம். .

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஜனவரி 9ஆம் தேதி வருகிறது. அதைத் தள்ளிவைக்க முதல்வர் தரப்பில் சட்ட ரீதியான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். எனவே, திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால்கூட அதற்கு திமுக எம்.எல்.ஏக்களே ஆதரவு அளிப்பார்களா என்பது கேள்விக்குறிதான்” என்கிறார்கள் ஆளுங்கட்சியினர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018