மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

ரஜினியின் அதிகபட்ச ஆசை - கமலின் நிறைவேறும் கனவு!

ரஜினியின் அதிகபட்ச ஆசை - கமலின் நிறைவேறும் கனவு!

நடிகர்கள் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நடைபெற்றுவரும் நட்சத்திரக் கலை விழாவில் ரஜினி, கமல் என்னும் இரு நட்சத்திரங்களும் ஒரே மேடையில் மையம் கொண்டனர். பேச வேண்டிய கருத்துகளையும் அவரவர் பாணியில் தெளிவாகக் கூறினார்கள்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திரக் கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மலேசியாவில் உள்ள புக்கிஜாலி ஸ்டேடியத்தில் நடந்த நட்சத்திர கலை விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

வெள்ளிக்கிழமை தொடங்கிய நட்சத்திரக் கலை விழாக்கள் தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. நேற்று காலையில் நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்குப் பிறகு விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் நடிகர் சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணி, விஷாலின் மதுரை காளைஸ் அணியைத் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி, விஜய் சேதுபதியின் ராம்நாடு ரைனோஸ் அணியை வீழ்த்தியது. இதன்பின்னர் ஆர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் கால்பந்து போட்டி நடைபெற்றது.

அஜீத், விஜய் இருவரும் வர மாட்டார்கள் என்று முன்பே தெரிந்தாலும், மலேசிய ரசிகர்கள் ரஜினி, கமலுக்காக ஆர்வத்தோடு காத்திருந்தார்கள். சிறிது தொலைவிலேயே இருக்கும் ஓட்டலில் இருந்து ஸ்பெஷல் ஹெலிகாப்டரில் விழா நடக்கும் மைதானத்துக்குள் வந்திறங்கினார்கள் ரஜினியும் கமலும்.

போட்டிகள் முடிவடைந்ததும் இருவரும் ரசிகர்களைச் சந்தித்துவிட்டு புக்கிஜாலி ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்வுக்குச் சென்றனர். இரண்டு நாளும் விஜய் சேதுபதி படத்தின் புரொமோஷன் நாளாகவே அமைந்தது.

‘ஜுங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியீடு, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இசை வெளியீடு என விஜய் சேதுபதியின் படம் பற்றிய அறிவிப்பாகவே இருந்தன.

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்பது இந்த கலை விழாவில் அவர் பேசியதன் மூலம் அறியலாம். “என்னை வாழவைத்த தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை” என்று அரசியலைத் தாண்டியும் தான் மக்கள்மீது கொண்டிருக்கும் அன்பு குறித்து முத்தாய்ப்பாகப் பேசினார்.

கமல் பேசியபோது “இளம் தலைமுறை நடிகர்கள் சிறப்பாகப் பங்காற்றி வருகின்றனர். அவர்களது உழைப்பில்தான் இவ்வளவு பெரிய விழா நடைபெறுகிறது. இதுபோலவே, என் கனவான நடிகர்கள் சங்கக் கட்டடமும் விரைவில் கட்டி முடிக்கப்படும் என நம்புகிறேன். தேட வேண்டியது திறமையைதானே தவிர, தலைமையை அல்ல” என்று கூறினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018