மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: மதத் தூய்மையைக் காப்பாற்ற நடக்கும் வன்முறை!

சிறப்புக் கட்டுரை: மதத் தூய்மையைக் காப்பாற்ற நடக்கும் வன்முறை!

கர்நாடகாவில், மங்களூருவில் உள்ள சோமேஸ்வரக் கடற்கரையில் பிற்பகலில் சிறிது நேரம் பொழுதைக் கழித்த 20 வயது மாணவர் தன்னுடன் பயிலும் தோழியுடன் பேருந்தில் ஏறினார். பேருந்து உல்லால் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது, ஐந்து பேர்கொண்ட ஒரு கும்பல் பேருந்தில் ஏறியது. பேருந்தில் அவர்களைப் பார்த்த அந்தக் கும்பல் அவர்களின் மதம் பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்களைப் பேருந்திலிருந்து வெளியே இழுத்தனர். இருவரையும் மோசமாகத் திட்டித் தீர்த்த பிறகு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை மட்டும் போக அனுமதித்தனர். இந்து மதத்தைச் சேர்ந்த அந்த மாணவனை போலீஸ் வரும்வரை தாக்கினர்.

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதன்முறை அல்ல. தங்களது மதத்தைக் காக்க வேண்டும், தங்களுடைய மதம்தான் பெரியது என நினைத்து உயிர்களைத் துச்சமாக எண்ணிக் கொலை செய்யும் கும்பல் ஒழுக்கத்தைக் காப்பாற்றுதல் என்ற போர்வைக்குள் மறைந்து கிடக்கிறது.

கர்நாடகாவில் கடந்த ஏழு ஆண்டுகளில், இதுபோன்று பதிவான 225 வழக்குகளில் இதுவும் ஒன்று. பழைமைவாதத்தையும் மரபையும் மதத் தூய்மையையும் பாதுகாக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் இந்து மற்றும் முஸ்லிம் விழிப்புணர்வுக் குழுக்கள் மேற்கொள்ளும் செயல்களால் வன்முறைகள் அரங்கேறுகின்றன. இரு மதங்களிடையே நடைபெறும் இந்தப் போட்டாபோட்டி அச்சமான சூழலை உருவாக்கியுள்ளது. இந்தக் குழுக்களுக்கு முதுகெலும்பாக மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. அரசியல் கட்சித் தொண்டர்கள், ஓட்டுநர்கள், வணிகர்கள் ஆகியோர் இந்த நெட்வொர்க்கில் இருக்கிறார்கள். கலப்புத் திருமணம் செய்வதைக் கண்டுபிடித்து அதற்கு எதிரான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.

பதிவு செய்யப்படாத பல சம்பவங்கள்

கர்நாடக சமூக நல்லிணக்கக் குழுவைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான சுரேஷ் பட் பக்ராபைல் கரையோர கர்நாடகாவில் ஒழுக்க நெறிமுறையை முன்வைத்து நடக்கும் இனவாத வன்முறை நிகழ்வுகள் குறித்துப் பதிவு செய்துவருகிறார். கரையோர நகரங்களில் மதத் தூய்மை மற்றும் ஒழுக்கம் பேணும் கொள்கையால் நிகழும் வன்முறை சார்ந்த வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 2009ஆம் ஆண்டிலிருந்து இந்த மன்றம், ஊடகம் மற்றும் போலீஸ் அறிக்கைகளிலிருந்து இந்தச் சம்பவங்கள் குறித்த விவரங்களைத் தொகுத்துவருகிறது.

மன்றம் அளித்த பதிவுகளின்படி, ஒவ்வொரு மாதத்திலும் இதுபோன்ற குற்றச் செயல்களில் குறைந்தபட்சம் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எங்களுடைய மதிப்பீட்டின்படி, 20% வழக்குகள் பதிவாகவில்லை என சுரேஷ் பட் பக்ராபைல் கூறுகிறார்.

இந்து, முஸ்லிம் என இரு பிரிவினரிலும் இதுபோன்ற கண்காணிப்புக் குழுக்கள் இயங்கிவருகின்றன என்பதைக் கர்நாடக சமூக நல்லிணக்கக் குழுவின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பக்ராபைலும் அவரது கூட்டாளிகளும் மதத் தூய்மை நாடி ஒழுக்கக் கொள்கைகளை வலியுறுத்தும் குழுக்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளில் தெளிவானதொரு நடைமுறை இருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், பாதிக்கப்பட்டவர்கள் தனிநபரால் அல்லாமல் படத்தில் காட்டப்படுவது போன்று ஒரு குழுவினரால் எதிர்கொள்ளப்படுவர். இவர்கள் திடீரெனத் தாக்குதல் நடத்துவார்கள்.

சாதி / மத மறுப்புத் திருமணம் செய்பவர்கள் குறித்த தகவல்களை இந்தக் குழுவுக்குத் தெரிவிப்பதற்கான நெட்வொர்க் பரந்து விரிந்திருக்கிறது. வலதுசாரிக் குழுக்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், நகரில் உள்ள தனியார் பேருந்து ஊழியர்கள் ஆகியோர் இந்த நெட்வொர்க்கில் இருக்கிறார்கள். பெரும்பாலான தகவல்கள் இவர்கள் மூலம் சென்றடைகின்றன என மங்களூரின் முக்கிய சமூகச் செயல்பாட்டாளர் வித்யா தின்கர் கூறியுள்ளார்.

நகரம் முழுவதும் உள்ள பாதுகாப்பு ஏஜென்சிகளின் ஊழியர்கள் வலதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களாக இருப்பதால், பெரும்பாலான முக்கிய வணிக நிறுவனங்களின் மீதான கண்காணிப்பு அவர்களுக்குச் சாத்தியமாகிறது. இந்த நெட்வொர்க் அறநெறி பற்றிய பழைமைவாதக் கருத்தை உடையவர்கள் மற்றும் உள்ளூர் வணிகரால் மேலும் பலப்படுத்தப்படுகிறது. நகரத்தில் உள்ள உள்ளூர் வலதுசாரித் தலைவர்களின் மொபைல் எண்கள் எளிதாகக் கிடைக்கின்றன. இந்து ஜகாரண் வேதிக் போன்ற அமைப்புகளுக்கு நகர்ப்புறம் முழுவதும் அதிகாரபூர்வமற்ற அலுவலகங்கள் உள்ளன. அந்த அமைப்பின் தொண்டர்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். வலதுசாரி அமைப்புகள், பிரபலமான இடங்களிலிருக்கும் நபர்களைத் தங்களது அமைப்புக்குத் தேவையான உறுப்பினர்களாக மாற்றிக்கொண்டு அமைப்பை விரிவாக்கம் செய்துகொள்கின்றனர் என வித்யா தின்கர் கூறியுள்ளார்.

ஒழுக்கக் காவலர்களும் பொருளாதாரமும்

மங்களூருவில் இயங்கும் ஒழுக்கக் காவலர்களின் செயல்பாடுகளின் மையமாக இருப்பது பொருளாதாரம்தான்.

மங்களூரில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படும் பாதுகாப்பு ஏஜென்சிகளில் ஒன்றான பஜ்ராங் தால் ஏஜென்சியின் தலைவர், சரண் பாம்ப்வெல். இவரின் நிறுவனமான ஈஸ்வரி மேன்ஸ் பவர் சொல்யூஷன்ஸ் உள்ளூர் வணிகங்களுக்கும் முக்கிய மால்களுக்கும் பாதுகாப்பு வழங்குகிறது.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், வலதுசாரி அமைப்புகளால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பின்மையிலிருந்துதான் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான கோரிக்கை உருவானது. பாம்ப்வெல் தலைமையிலான பாதுகாப்பு நிறுவனம் அத்தகைய நிறுவனங்களில் ஒன்று. இதுகுறித்து பாம்ப்வெலிடம் கேட்டபோது, தங்களது வணிகமும் அரசியல் தொடர்புகளும் வேறு வேறு என்றார். குறைந்த கட்டணத்தில் சேவை வழங்குவதால், எங்கள் நிறுவனத்தைப் பலரும் அணுகுகிறார்கள் என்றார்.

தனது வணிகம் வலதுசாரி அமைப்புகளின் மறைமுகப் பாதுகாப்பினால் நடைபெறுகிறது என்பதை பாம்ப்வெல் தீவிரமாக மறுத்துள்ளார்.

காவல் துறையிலும் ஒழுக்கக் காவலர்கள்

2017ஆம் ஆண்டின் கடைசி வாரத்தில் ஒரு நடிகை தனக்கும் தனது தோழிக்கும் ஏற்பட்ட தொந்தரவுக்குச் சுப்ரமண்யா காவல் நிலைய அதிகாரிகள் காரணம் என்று குற்றம்சாட்டினார். இவரது தோழி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். தாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், தன்னையும் தன் தோழியையும் போலீஸார் தாக்கியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து தக்ஷிண கன்னடா போலீஸ் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். போலீஸ் கான்ஸ்டபிள் அந்தப் பெண்களிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறார் என்று கூறினார். அந்தச் சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் இருந்த கான்ஸ்டபிள் மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஜோடியை ஒன்றாகப் பொது இடங்களில் பார்க்கக் கூடாது என மிரட்டும் போலீஸார் அதிகம் உண்டு என்று வித்யா தின்கர் சுட்டிக்காட்டினார். “காவல் துறைக்குள்ளேயே பழைமைவாத, இனவாதக் கொள்கைகள் இருக்கின்றன. பெரும்பாலான வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க விரும்பிய போதிலும், போலீஸார் அதற்கு அனுமதி அளிப்பதில்லை” என்றும் அவர் அவர் கூறினார்.

கர்நாடகாவில் ஒழுக்கக் காவலர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருந்தாலும், எல்லோருமே இதுபோன்ற பழைமைவாதக் கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை என்று சமூகச் செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். தாராளவாதிகளின் மவுனம் இதுபோன்ற செயல்கள் அதிகரிப்பதற்குக் காரனமாக அமைந்துவிடுகின்றன.

ஆனால், நிலைமை மாறிவருகிறது. மங்களூரு புறநகர்ப் பகுதியில் ஒரு கும்பலால் இரண்டு இளம் பெண்கள் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஒரு பெண்ணின் தாயார் துணிந்து அந்தக் கும்பலுக்கு எதிராகப் புகார் அளித்தார்.

இதுகுறித்து அந்தத் தாயார் கூறுகையில், “என்னுடைய மகள் என்னுடைய அனுமதியுடன்தான் சுற்றுலாவுக்குச் சென்றாள். பெண் நண்பர் மட்டுமல்லாமல், ஆண் நண்பர் வருவதையும் எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்து, அனுமதி வாங்கித்தான் சென்றாள். எதுவாக இருப்பினும், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்கள் குறுக்கிடுவது நாகரிகமல்ல” என்றார்.

இதுபோன்ற விழிப்புணர்வும், காவல் துறையினரின் கண்டிப்பான நடவடிக்கையும் இருந்தால் ஒழுக்கம் என்ற பெயரால் பழைமைவாத மதக் குழுக்கள் தனிநபர்களின் சுதந்திரத்தில் அத்து மீறித் தலையிடுவதும் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதும் குறையும்.

நன்றி: https://www.thequint.com/news/india/how-mangaluru-well-oiled-moral-policing-system-works

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 7 ஜன 2018