மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

விமர்சனம்: சாவி

விமர்சனம்: சாவி

ஒருவன் தன் நண்பனுக்காக உதவி செய்யப் போக, அதனால் அவன்மீது திருட்டுப் பழியும் கொலைப் பழியும் விழுகின்றன. அதிலிருந்து மீண்டு அவன் தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறானா, இல்லையா என்னும் கதையே சாவி.

மதுரையில் சாவி செய்யும் வேலை செய்துவருபவர் பிரகாஷ் சந்திரா. சாவி செய்வதில் வல்லவராக இருக்கும் இவர், நல்ல விஷயங்களுக்காக அவ்வப்போது போலி சாவிகளையும் செய்து தருகிறார்.

சேல்ஸ் கேர்ளாக வரும் சுனுலட்சுமிக்கும் பிரகாஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருநாள் வேலை முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பும்போது, நண்பன் ராஜலிங்கம் அவனது உறவினர் வீட்டுச் சாவியை தவற விட்டதாகவும் வீட்டைத் திறந்து உதவுமாறும் அழைக்க பிரகாஷ் சந்திராவும் வீட்டைத் திறக்க உதவி புரிகிறார். மறுநாள் அது நண்பனின் உறவினர் வீடு இல்லை என்பதும், அந்த வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், பிரகாஷ் சந்திராவுக்குத் தெரிய வருகிறது.

பணத்தை இழந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறார். இந்தக் குற்ற உணர்ச்சியில் மாட்டிகொள்ளும் பிரகாஷ் சந்திரா உண்மையான திருடனைப் பிடிக்க முயல்கிறார். போலீஸ் பிரகாஷ் சந்திராவைத் தேட, பிரகாஷ் திருடனைத் தேட, பல திடுக்கிடும் சம்பவங்கள், ட்விஸ்ட்டுகள் அரங்கேறுகின்றன. திருடன் பிடிபட்டானா, பிரகாஷ் சந்திரா தப்பித்தாரா என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குநர் ஆர்.சுப்பிரமணியன் அமைத்திருக்கும் திரைக்கதை படத்தைக் கவனிக்க வைத்திருக்கிறது. ஒரு வீட்டில் பணம் திருடு போவதை மையமாக வைத்து அமைத்திருக்கும் திரைக்கதையும் காட்சிகளை வடிவமைத்த விதமும் சாவியைச் சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் க்ரைம் படமாக மாற்றியிருக்கின்றன. படத்தை எப்படிக் கொடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதில் ரொம்பத் தெளிவாக இருந்திருக்கிறார் இயக்குநர்.

ஒவ்வொரு காட்சியிலும் ஆர்வமும் விறுவிறுப்பும் குறையாமல் இறுதிவரை கொண்டுசென்றிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் பிரகாஷ் சந்திரா ஏற்கனவே முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறார். ஏற்கெனவே நடித்த அனுபவம் அழகாகப் பிரதிபலிக்கிறது. திருடனைத் தேடும் இடத்தில் இவரின் யதார்த்த நடிப்பு பாராட்டும்படி உள்ளது.

அறம் படத்தில் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த சுனுலட்சுமியும் கதாபாத்திரமாகப் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளார்.

காமெடி அதிகம் இல்லையென்றாலும், நாயகியின் தந்தையாக வருபவர் குடிகாரக் கதாபாத்திரத்தில் சிரிக்க வைக்கிறார். பிரகாஷின் அண்ணன், போலீஸ் கான்ஸ்டபிள், அவரது நண்பன், தந்தை என அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். சிறு வேடங்களில் நடித்திருப்பவர்கள்கூடத் தங்களது நடிப்பால் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்கள்

சேகர் ராமின் ஒளிப்பதிவு கிராமப்புறக் காட்சிகளை கண்முன்னே நிறுத்திச் சென்றிருக்கிறது. சதீஷின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.

சுவாரஸ்யமான திரைக்கதைக்கு விறுவிறுப்பூட்டும் விதத்தில் படத்தைக் கச்சிதமாகச் செதுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளரான சுரேஷ் அர்ஸ்.

முதலில் குழப்பமாகத் தொடங்கும் கதை போகப் போக ஒவ்வொரு காட்சியும் புரியும்படி தெளிவாக விறுவிறுப்பாகவும் சாமர்த்தியமாகவும் செல்கிறது. நடிகர்களின் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

த்ரில்லிங் அனுபவத்தை அளிக்கும் சாவி மக்களிடம் சென்றால் நிச்சயம் வெற்றிபெறும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018