மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

The Casteless Collective: மார்கழி இசை அரசியல்!

The Casteless Collective: மார்கழி இசை அரசியல்!

வழக்கத்துக்கும் மாறான மார்கழி மாதப் பனி சென்னையை ஆழ்த்தியிருந்தது. காற்றைக் கடினமாக்கி சுவாசிப்பதற்கும் சிரமப்படுத்தியிருந்த மாலை நேரத்து அடர்பனியைக் கிழித்து இலகுவாக்கிக்கொண்டிருந்தது ‘The Casteless Collective’ இசைக் கச்சேரி.

கருவிகளிலிருந்து வெளியாகும் சத்தம் மட்டுமே இசையா, மூச்சைப் பிடித்துக்கொண்டு இசையை செவிவழிப் பருகுவதே ரசித்தலா என்பன போன்று நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்த கேள்விகளின் பதில்களும், அதற்கு போனஸாக இசையும் கிடைத்தது கீழ்ப்பாக்கத்திலுள்ள பெயின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில்.

‘கலைகளை அரசியலாக்குவோம்’ என்ற பிரகடனத்துடன் ரஞ்சித் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். நீலம் பண்பாட்டுக் குழுவினால் நடத்தப்பட்ட இவ்விழாவுக்கு வந்திருந்த மக்களிடம் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அவற்றைப் பட்டியலிட்டால் பெரிதாக இருக்குமென்பதால், அங்கு இல்லாததைச் சுருங்கச்சொல்லலாம். சாதி, மதம், பாலினம், பொருளாதார அந்தஸ்து, மொழி ஆகியவை பொய்யாகிப்போன ஒரு கூட்டத்தை அங்கு பார்க்க முடிந்தது. எல்லா வயதிலான மக்களும் இருந்தனர். பெரும்பான்மை இளைஞர்களாக இருந்தனர். இவர்களை The Casteless Collective டீம் திருப்திபடுத்த முடியுமா என்பது மட்டுமே கேள்வியாக இருந்தபோதுதான் ரஞ்சித் மேடையில் தோன்றி விழாவைத் தொடங்கி வைத்தார். “மகிழ்ச்சி. ரொம்ப சந்தோஷமான மாலை வேளை இது. கலைகளை அரசியலாக்குவோம் - நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி. ரொம்ப நாளா யோசிச்ச விஷயம் இது. என்னுடைய இசை, என்னுடைய எழுத்து, என்னுடைய ஓவியம், என்னுடைய உணவு, என்னுடைய மொழி யாருக்கும் சளைச்சதில்லை அப்படிங்குற கான்செப்ட் தான் இது. அந்த ஒண்ணு தான் எனக்கான இசையை, எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்கிறதுக்காக வந்திருக்கேன். எங்களுக்கான இசையை எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்குறதுக்காக வந்திருக்கோம். The Casteless Collective” என்று இசைக்குழுவை அறிமுகப்படுத்திவிட்டு மேடையிறங்கினார்.

மொத்தமாகவே இசைக்குழுவினர் அரங்கேற்றிய பல பாடல்களில் இசைக் கருவிகளைவிட, தனி நபர்கள் தங்களுக்குள்ளிருந்து உருவாக்கும் இசையே முக்கியத்துவம் வகித்ததாகத் தெரிந்தது. ஒரு கருவி உருவாக்கக்கூடிய இசையையும், அது கொடுக்கக்கூடிய இன்பத்தையும் மனிதனாலும் உருவாக்க முடியும் எனும்போது இசைக் கருவிகளையும் அடிப்படையாக வைத்து மனிதர்களுக்குள் இனம்பிரிப்பவர்களின் அறிவார்ந்த செயலை எண்ணி என்ன சொல்வது?

தங்களது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரத்தை, முழு அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மிகவும் கொண்டாட்டத்துடன் இசைக்குழுவினர் இயங்கினார்கள். அவர்களைவிடவும் ரசிகர்களின் ரியாக்ஷன் அதிகமாக இருந்தது. மேடையில் பாடுகிறவர் என்ன சொல்கிறார் என ரசிகர்களுக்குப் புரிந்தது, இந்தக் கச்சேரியின் மிக முக்கியமான அம்சம்.

சாதி ஏற்றத்தாழ்வு பேசியவர்களுக்குப் புத்தி சொன்னபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்; சமூக நீதியின் அடிப்படையைப் பேசியபோது கரகோஷமிட்டனர்; ஒடுக்கப்பட்டவர்களின் சாதனையைப் பேசியபோது கொக்கரித்தனர்; கடைசியாக, சென்னை எங்கள் கருவறை என சாதி பேதமற்ற ஒரு நிலத்தை சொந்த நிலமாக அடையாளப்படுத்தியபோது மேடையில் பாடிய வரிகளும், கருவிகளிலிருந்து வெளியான இசையும், ரசிகர்களிடமிருந்து சென்ற உணர்ச்சிப் பெருக்கெடுத்த அதிர்வலைகளும் ஒரே நேர்க்கோட்டில் சங்கமித்து ஒரு பரவச நிலைக்குக் கொண்டு சேர்த்தது. அங்கு எந்த மத தெய்வத்தையும் வைத்துக்கொள்ளலாம், எந்த சமய நம்பிக்கைகளையும் வைத்துக்கொள்ளலாம். உலக உயிர்களில் ஏற்றத்தாழ்வும், சக மனிதனிடம் காட்டும் ஆளுமையும் இருப்பவர்களுக்கு அது கிட்டாத ஒன்று. ஆனால், The Casteless Collective இசைக் கச்சேரியில் கிடைத்தது.

அனைத்து வயதினரையும் ஆடவைத்த நிகழ்ச்சியாகவும், ஆண் பெண் பேதமின்றி இசையைக் கொண்டாடி மகிழ்ந்த நிகழ்ச்சியாகவும் மிகப்பெரும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதில் இவ்விழாவை முன்னின்று நடத்திய பா.ரஞ்சித் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

“இந்த கான்செப்டின் நோக்கமே நாம எல்லாம் அரசியல் பண்ணணும் அப்படின்றதுதான். ஏன்னா, நீ யாருன்றதை நீ தெரிஞ்சுக்கணும். நீ இன்னும் என்ன நிலைமைல இருக்கன்றதை நீ புரிஞ்சிக்கணும். இன்னும் சீரழிஞ்சு போய் கெட்டுப்போகக் கூடாது. நம்முடைய அரசியல் வலிமையை நம்ம புரிஞ்சிக்கணும். அதுக்காகத்தான் இவ்வளவு விஷயங்களை நாம பண்றோம். அரசியல் பண்ணணும். புரட்சியாளரைப் பின்தொடருவோம். ஜெய் பீம்” என்று ரஞ்சித் பேசி முடித்த பிறகும் கூட்டம் கலைந்து போகாமல் ஆங்காங்கே நின்று பாடல் வரிகளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளையும், அதன் நேர்த்தியையும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தனர். ஆங்காங்கே செல்ஃபிக்கள் ஃபிளாஷ் ஆகிக்கொண்டிருக்க நிதானமாகக் கூட்டம் கலைந்தது. மக்களின் பேச்சு சத்தம் குறைந்தாலும், கச்சேரியில் கேட்ட இசை காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. மெட்ராஸ் படத்தின் எங்க ஊரு மெட்ராஸ் பாடலில் எங்களத்தான் கட்டி வச்சா சட்டிமேளம் போல நாங்க சத்தம் போடுவோம் எனப் பயன்படுத்தப்பட்டிருந்த வரிகளை நினைவுபடுத்தியது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 7 ஜன 2018