மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

பறவைக் காய்ச்சல்: எச்சரிக்கும் பாமக!

பறவைக் காய்ச்சல்: எச்சரிக்கும் பாமக!

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவக்கூடிய ஆபத்து அதிகமுள்ள நிலையில், அதுகுறித்த புரிதலின்றி அரசு அலட்சியம் காட்டுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (ஜனவரி 6) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் தமிழகத்திலும் பரவக்கூடிய ஆபத்து அதிகமுள்ள நிலையில் அதுகுறித்த புரிதலின்றி அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூரின் தாசரஹள்ளி பகுதியிலுள்ள புவனேஸ்வரி நகரில்தான் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் முதன்முதலில் கண்டறியப்பட்டன. அப்பகுதிக்கு இறைச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட கோழிகள் திடீரென இறந்த நிலையில், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது பறவைக் காய்சலால்தான் அவை உயிரிழந்தன என்பது தெரியவந்துள்ளது. பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் நூற்றுக்கணக்கான கோழிகள் கொன்று புதைக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மக்களிடையே ஒருவிதமான பதற்றம் நிலவிவரும் நிலையில், பெங்களூரு மாநகராட்சியின் ஏலகங்கா மண்டலத்தில் கோழி மற்றும் முட்டை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நல்வாய்ப்பாக கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. எனினும், பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கும், தமிழகத்திலிருந்து பெங்களூருக்கும், குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சென்றுவருவதால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பெங்களூரு வழியாக தமிழகத்துக்கு வரும் தொடர்வண்டி பயணிகள் அனைவருக்கும் பாலக்கோடு, தர்மபுரி, சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுக்காக மருத்துவ ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அண்மைக்காலங்களில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களால் தமிழகம் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளைச் சந்தித்து இருக்கிறது. இத்தகைய சூழலில் பறவைக் காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையில் தமிழக மக்கள் இல்லை.

எனவே, இந்த பறவைக் காய்ச்சல் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளிலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். பறவைக் காய்ச்சலால் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவம் அளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 7 ஜன 2018