மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சண்டே சக்சஸ் ஸ்டோரி: பிரேம் கணபதி (தோசா பிளாசா)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: பிரேம் கணபதி (தோசா பிளாசா)

தனது 17ஆவது வயதில் வீட்டில் சொல்லாமல் மும்பை சென்றவர் பிரேம் கணபதி. வேலை தேடியும் வாழ்வதற்கான இருப்பிடம் தேடியும் மும்பை சென்றவர், இன்று மும்பையில் பல கோடிகளில் தொழில் செய்யும் தொழிலதிபராக விளங்குகிறார். இவருடைய வெற்றிக் கதையை இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் நாகலாபுரத்தில் 1973ஆம் ஆண்டு பிறந்தவர் பிரேம் கணபதி. உடன் பிறந்தவர்கள் ஏழு பேர் இருந்ததால் இவருடைய பெற்றோரால் இவரைக் கல்லூரியில் சேர்க்க இயவில்லை. அந்த எண்ணத்தைக் கைவிட வலியுறுத்தப்பட்டார். எனவே சென்னைவந்து வேலைக்குச் சென்றார். சென்னையில் அவர் 250 ரூபாய் வரை ஊதியம் பெற்றார்.

“1990ஆம் ஆண்டில் மும்பையில் ரூ.1,200க்கு ஊதியம் கிடைக்கும் வேலை ஒன்று இருக்கிறது என்று நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். அங்கு சென்றுவிட்டு என் வீட்டுக்குத் தகவல் சொன்னேன். ஆனால், எங்கள் வீட்டில் ஏற்க மறுத்துவிட்டார்கள். இதனால் அங்கிருந்து சொல்லாமல் கிளம்பிவிட்டேன். ஆனால், என்னுடைய பயணத்தின்போது கையிலிருந்த 200 ரூபாயும் திருட்டு போய்விட்டது. அப்போது எனக்கு 17 வயது. அங்கு சென்று அந்த மொழியைப் புரிந்துகொள்ளவும் எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது.

அடுத்த நாளே ஒரு பேக்கரியில் பாத்திரங்கள் கழுவும் பணி கிடைத்தது. அங்கு ரூ.150 ஊதியமாகக் கொடுக்கப்பட்டது. இரவில் அங்கேயே தூங்கவும் அந்த பேக்கரி உரிமையாளர் அனுமதித்தார். அடுத்த இரண்டாண்டுகளில் பல்வேறு உணவகங்களில் வேலை தேடினேன்” என்று தனது வாழ்க்கைப் பயணம் தொடங்கியதை எகனாமிக் டைம்ஸ் ஆங்கில ஊடகத்துக்கு ஒருமுறை அளித்த பேட்டியில் இவரே கூறியுள்ளார்.

அதன்பிறகு சேம்பூரில் பீட்சா டெலிவரி செய்யும் பணியை சில ஆண்டுகள் செய்தார். பிறகு, அங்கிருந்து நவி மும்பைக்குச் சென்று அங்கிருந்த ஓர் உணவகத்தில் பாத்திரம் கழுவும் பணியை மேற்கொண்டார். இந்தத் தொழில்கள் மூலம் சேமித்த பணத்தைக்கொண்டு கணபதி 1992ஆம் ஆண்டு தள்ளுவண்டிக் கடை ஒன்றைச் சொந்தமாக வைத்தார். வாஷி ரயில் நிலையத்துக்கு எதிரில் வைக்கப்பட்ட இந்தக் கடையில் இட்லி, தோசை விற்பனை செய்து வந்தார். இந்தக் கடையை வைக்க அவர் தனது நண்பர்களிடம் கடன் வாங்கியும் உள்ளார். தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டார். இந்த வண்டிக்கு 150 ரூபாய் வாடகை. தொடக்கத்தில் மிகுந்த சிரமத்தைத் தான் எதிர்கொண்டதாக ரெடிஃப் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், “நான் கடை வைத்த தொடக்கத்தில் மிகுந்த நெருக்கடி இருந்தது. நகராட்சி ஊழியர்கள் வந்து என்னுடைய தள்ளுவண்டியை எடுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், நான் மிகுந்த தைரியமாகவும், உறுதியாகவும் இருந்தேன். நம்பிக்கையைக் கைவிட்டதில்லை” என்று கூறியுள்ளார்.

தள்ளுவண்டிக் கடையில் தனது சொந்த ஊரின் சுவையில் தோசையும், சாம்பாரும் செய்து விற்பனை செய்தார். இந்தச் சுவை வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. கடையில் தனக்கு உதவியாகத் தனது இரண்டு தம்பிகளையும் அழைத்துக்கொண்டார். தரமாகவும் தூய்மையாகவும் உணவு தயாரித்து விற்பனை செய்தார். மிகவும் தூய்மையாக ஆடை அணிந்துகொண்டு, தொப்பியும் அணிந்துகொண்டு இவர்கள் கடையை நடத்திய விதம் மற்ற தள்ளுவண்டிக் கடைகளில் இருந்து இவர்களை தனித்துக் காட்டியது. அப்போது நிகர வருமானம் மாதத்துக்கு ரூ.20,000ஆக அதிகரித்தது.

கணபதிக்கு அவருடைய அறை தோழர்கள் படித்தவர்களாக இருந்ததால் கணினி பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தினமும் மாலை இரண்டு மணி நேரம் கணினி உபயோகித்து வந்தார். இதைப் பயன்படுத்தி பல்வேறு தொழில்கள் பற்றித் தெரிந்துகொண்டார். இவரின் வெற்றிக்கு இவருடைய சகோதரர்களும் பெரிதும் உதவியுள்ளார். பிறகு மெக் டொனால்டு நிறுவனத்தின் தொழில் வெற்றி குறித்தும் அறிந்துள்ளார். தனக்கும் அப்படியோர் உணவகம் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் அப்போதுதான் அவருக்கு எழுந்துள்ளது.

அதன்பிறகு 1997ஆம் ஆண்டு 5,000 சதுர அடியில் இடம் ஒன்றைத் தான் சேமித்து வைத்திருந்த 50,000 ரூபாயைக் கொண்டு குத்தகைக்கு எடுத்தார். இந்த இடத்தில் சாகர் தோசா பிளாசா என்ற உணவகத்தைத் தொடங்கினார். இதற்கு ரூ.5,000 வாடகையும் செலுத்தினார். இரண்டு ஆட்களைப் பணிக்கு நியமித்தார். இந்த உணவகம் கல்லூரி மாணவர்களால் நன்றாக இயங்கியது. அப்போதே இணையதளத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்றும் கற்றுக்கொண்டார். இதைப் பயன்படுத்தி மேலை நாடுகளில் எப்படி உணவு தயாரிக்கிறார்கள் என்று அறிந்து புதிய உணவுகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டார். ஸ்வேஸ்வான் தோசா மற்றும் பனீர் சில்லி, ஸ்பிரிங் ரோல் தோசா போன்றவற்றைச் செய்து கற்றுக்கொண்டார். ஒரே வருடத்தில் 26 வகை தோசைகளை அறிமுகம் செய்தார்.

2002ஆம் ஆண்டில் இவருடைய திறமைகளைப் பயன்படுத்தி 102 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினார். கடை பிரபலமானதால் வெளி ஆர்டர்களும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன்பிறகு தனது கனவான ஷாப்பிங் மால்களில் உணவகம் தொடங்க விரும்பினார். சில புறநகர் மால்களில் இடம் தேடினார். ஆனால், அந்த மால்களில் மெக் டொனால்டு மற்றும் பீட்சா ஹட் நிறுவனங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்தன. “அப்போது ஒரு மால் நாங்கள் இருக்குமிடத்திற்கு அருகில் வரவிருந்தது. அதன் மேலாண்மைக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் விதித்தக் கட்டணம் எங்களுக்கு ஒத்து வந்தது. ஆனால், அவர்கள் ஒரு நிபந்தனை வைத்தார்கள். தோசை மாவு மற்றும் சில பொருள்கள் விநியோகம் கேட்டார்கள். முதல் கடையை தானேவில் உள்ள வொண்டர் மாலில் 2003ஆம் ஆண்டு தொடங்கினோம். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு நாங்கள் தனியாக லோகோ பெற்றோம்” என்று தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

கடையின் வளர்ச்சியால் வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கியது. தற்போது நியூசிலாந்து, துபாய், மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏழு மையங்கள் உள்ளன. இந்தியாவில் 45 மையங்கள் உள்ளன. முதன்முதலில் 1,000 ரூபாயில் தள்ளுவண்டிக் கடையை தொடங்கினர். இன்று இவருடைய ஒட்டுமொத்த நிறுவனங்களின் வர்த்தக மதிப்பு 30 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. மெக் டொனால்டை போன்று ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று எண்ணி, விடாமுயற்சியோடு செயல்பட்ட கணபதி இன்று உணவுத் துறையில் சாதிக்க விரும்புபவர்களின் வழிகாட்டியாக உருவெடுத்துள்ளார்.

பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 7 ஜன 2018