மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துப் போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உயர் நீதிமன்றத்தைச் சட்டப்படி எதிர்கொள்வோம், எங்களது கோரிக்கையை நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை நோட்டீஸ்

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் போக்குவரத்து துறை கூறியுள்ளது.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி

இன்று தமிழகம் முழுவதும் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. நாளை 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும். பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு இழப்பு

தொடர்ந்து மூன்று நட்களாகப் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 22,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு ரூ.20 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கும். ஆனால் இந்த வேலைநிறுத்தத்தால் அரசுக்கு ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பதிவில் தயக்கம்

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்வதில் தயக்கம் காட்டிவருவதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்தார்கள். ஆனால் இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கும் குறைவான நபர்களே முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிஐடியு மாநிலக் குழுத் தலைவர் சவுந்தரராஜன் கேள்வி

செந்தில்குமரய்யா என்பவர் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.வி. முரளிதரன், என். சேஷசாயி அறிவித்த கருத்துகளுக்கு சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் பதிலளித்து, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

அவர் முன்வைத்துள்ள விமர்சனங்களும் கேள்விகளும் வருமாறு:

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இது வரம்பு மீறிய செயல். நீதிபதிகள் தங்களை மேம்பட்டவர்களாக நினைத்துக்கொண்டதன் வெளிப்பாடுதான் இது. சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும் எதிராகச் செயல்பட்டுள்ளனர்.

30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை சேம நல நிதி கணக்கில் இருக்கும். சட்டப்படி இதனை 30 நாட்களுக்குள் ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்தத் தொகையை 7 ஆண்டுகளாக வழங்காமல் அரசு இழுத்தடிக்கிறது.

உழைத்த பணத்தைக் கையாடல் செய்தவர்கள் குற்றவாளியா? பணத்தைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் ஊழியர்கள் குற்றவாளியா? இதற்கு நீதிபதிகளும் ஆதரவு தெரிவிக்கிறார்களா?

சட்டப்படி 30 நாட்களுக்குள் கொடுக்க வேண்டிய பணத்தை 12 தவணையாக நீதிபதிகள் கொடுக்க சொல்கிறார்கள். அவ்வாறெனில் நீதிபதிகளுக்கு பணிக்கொடைச் சட்டம் தெரியாது என்றே பொருள்.

நீதிபதிகள் அவர்களின் ஓய்வுக் காலப் பலன்களை 5 ஆண்டுகளுக்கு பிறகு 12 தவணைகளில் கொடுப்பதாகச் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா? தொழிலாளியை இவ்வளவு ஏளனமாக நீதிமன்றம் பார்ப்பதை ஏற்க முடியுமா?

நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் முன்பு ஊழியர்களின் வாதத்தையும் கேட்டிருக்க வேண்டும். எங்களது வாதத்தைக் கேட்காமல் தீர்ப்பு வழங்கியது ஒருதலைப்பட்சமானது.

என்று சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018