மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

பேருந்து ஓட்டியவருக்குச் சேலை அணிவித்துப் பரிகாசம்!

பேருந்து ஓட்டியவருக்குச் சேலை அணிவித்துப் பரிகாசம்!

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்குத் தொழிற்சங்க பிரதிநிதிகள் சேலை அணிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி மூன்றாவது நாளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி வேலைக்கு யாரும் செல்லவில்லை. இதனால், போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். சில இடங்களில் ஓட்டுநர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். அதைத் தவிரத் தற்காலிகமான ஓட்டுநர்கள், நடத்துநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், திருச்சி மணப்பாறையில் போராட்டத்தை மீறி பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்குத் தொழிற்சங்கத்தினர் சேலை அணிவித்துள்ளனர். தொழிற்சங்க பிரதிநிதிகளிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கு, ஊழியர்கள் சீருடை அணியாமல், கலர் உடையில் பேருந்தை இயக்கிவருகின்றனர். அதுபோன்று, திண்டுக்கல்லில் இருந்து மணப்பாறைக்கு சென்ற பேருந்தைத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், போராட்டத்தை மீறிப் பேருந்து ஓட்டுவதால் சேலை கட்டிக்கொண்டு ஓட்டுமாறு அவரிடம் சேலை கொடுத்துள்ளனர். இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை விட்டு இறங்க முயற்சித்தபோது, பிரதிநிதிகள் அவரைப் பிடித்து அவருக்கு சேலையைப் போர்த்தினர். அந்த இடத்துக்கு போலீசார் வந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அப்புறப்படுத்தினர்.

மற்றொரு பக்கம் தற்காலிக ஓட்டுநர்களால் இயக்கப்படும் பேருந்துகள் விபத்துக்குள்ளாகின்றன. திருப்பூர் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து ஈரோட்டுக்குச் செல்வதற்காகத் தற்காலிக ஓட்டுநர் ஆதிஷ்குமார் பேருந்தை ஓட்டிச் சென்றார். பேருந்து ஷெரீப் காலனி பகுதியில் வளைவில் திரும்பும்போது ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் உரசியது. இதில் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதில் பயணிகள் யாரும் இல்லை.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெறும்பூருக்குச் சென்ற அரசுப் பேருந்தைத் தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரான ஆறுமுகம் இயக்கி வந்தபோது, தனியார் பேருந்து மீதும், கார் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. அதுபோன்று, சென்னை அருகே ஆவடி பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுநர் இயக்கி வந்தபோது பேருந்து நிலையத்தின் சுவர் மீது பேருந்தின் பக்கவாட்டின் நடுப்பகுதி உரசியது.

இதற்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஒரு பேருந்து விபத்துக்குள்ளானதினால் உயிரிழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண் என்பது அவமானத்தின் அடையாளமா?

கோழைத்தனமாகவும், அச்சத்துடனும் செயல்படுகின்ற ஒருவரை இந்த சமூகம் பெண் சார்ந்த பொருட்களை வைத்து அவமானப்படுத்துவது மோசமான செயல் என்று கவிஞர் சல்மா கூறுகிறார். “சேலை,வளையல், போட்டு போன்றவை பெண்களை அடையாளப்படுத்துபவை. அச்சத்துடன் செயல்படுகின்ற ஒருவருக்கு சேலை அணிவிப்பது, வளையல் போட்டுவிடுவது, பொட்டு வைப்பது போன்றவை கண்டிக்கத்தக்க செயல்கள். ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டுமென்றால் பெண் சார்ந்த பொருட்களுடன் அவரை இணைத்துப் பேசினாலோ, சித்தரித்தாலோ அவமானப்படுத்திவிடலாம் என்றே இந்தச் சமூகம் நினைக்கிறது. பெண் என்பதையே அவமானத்தின் அடையாளமாகச் சமூகம் கருதுவதன் வெளிப்பாடுதான் இது” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

பொது நோக்கத்துக்காகப் போராடும் அமைப்புகளும், தனிநபர்களும் இதுபோன்ற செயல்களுக்குப் பின்னால் இருக்கும் மனப்பான்மையைப் புரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் சல்மா கேட்டுக்கொண்டார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018