மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

படைப்பாளிகளை கவுரவிக்கும் இலக்கியத் திருவிழா!

படைப்பாளிகளை கவுரவிக்கும் இலக்கியத் திருவிழா!

இந்தியாவின் புகழ்மிக்க இலக்கியத் திருவிழாக்களில் ஒன்றான ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ ஆங்கிலத்தைத் தாண்டி தமிழிலும் அடியெடுத்துவைக்கிறது!. இனி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடக்கவிருக்கும் இந்தத் தமிழ் இலக்கிய உற்சவத்தின் ஒரு பகுதியாக, தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டைக் கொண்டாடும் இலக்கியத் திருவிழா நடைபெறவிருக்கிறது. இதில் தமிழ்ப் படைப்பாளிகளைக் கொண்டாடும் விதமாக ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்-தமிழ்’ விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் அரங்கில் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழா நாளை (ஜனவரி 7) நடைபெறவிருக்கிறது. நாள் முழுவதும் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க உரையை ந.முத்துசாமியும் (எழுத்தாளர், நாடக இயக்குநர்), அறிமுக உரையை கே.அசோகனும் (தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர்) வழங்கயிருக்கிறார்கள்.

பல்வேறு அமர்வுகளில் நடைபெற இருக்கிற இந்த நிகழ்வில் இலக்கிய ஆளுமைகள் சிறுகதைகள் குறித்து உரையாற்றவிருக்கிறார்கள். முதல் அமர்வில் ‘நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறுகதைகளின் தருணங்கள், சாதனைகள், எதிர்காலம் குறித்து கருத்துரைக்க உள்ளனர். இரண்டாம் அமர்வில் ‘வெகுசன இதழ்களில் சிறுகதை இலக்கியம்’ என்கிற தலைப்பில் பாஸ்கர் சக்தி, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரும், மூன்றாம் அமர்வில் ‘முற்போக்கு இலக்கியமும் திராவிட இயக்க இலக்கியமும்’ என்கிற தலைப்பில் பா.செயப்பிரகாசம், இமையம் ஆகியோரும், நான்காம் அமர்வில் ‘வட்டார இலக்கியம், விளிம்பு நிலையினர் எழுத்துகள்’ என்கிற தலைப்பில் சு.வேணுகோபால், அழகிய பெரியவன், களந்தை பீர்முகம்மது ஆகியோரும் உரை நிகழ்த்த உள்ளனர்.

இதற்கிடையே சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட குறும்படத்தின் திரையிடலைத் தொடங்கி வைத்து இயக்குநர் வெற்றி மாறன் உரையாற்றவிருக்கிறார். அதன் பின்னர் கடைசி அமர்வாக தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண் எழுத்தாளர்கள் என்கிற தலைப்பில் ப்ரசன்னா ராமஸ்வாமி, அ.வெண்ணிலா, சந்திரா உள்ளிட்டோர் கருத்துரைக்கவுள்ளனர்.

ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை உள்ளடக்கிய இந்த விருதுகள் மொத்தம் ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

விருது பெறும் சாதனையாளர்கள்:

வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திரா பார்த்தசாரதி

சமகால இலக்கியச் சாதனைக்கான ஜெயகாந்தன் விருது: இமையம்

அபுனைவு எழுத்துக்கான ஏ.கே. செட்டியார் விருது: ராமாநுஜம்

விளிம்பின் உரத்த குரலுக்கான இன்குலாப் விருது: கீரனூர் ஜாகிர்ராஜா

பெண் படைப்புக் குரலுக்கான பாரதி விருது: தமயந்தி

இளம் படைப்பாளிக்கான பிரமிள் விருது: சயந்தன்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018