மங்களூர் சென்ற மலேசியா மணல்!

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த 58616 டன் மணல் இன்று (ஜனவரி 6) மங்களூரு கொண்டு செல்லப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், மலேசியாவின் பினாங் பகுதியிலிருந்து 58616 டன் மணலை இறக்குமதி செய்து, தூத்துக்குடி துறைமுகத்தில் தேக்கி வைத்திருந்தது. இந்நிலையில் இறக்குமதி மணலை பொதுப்பணித்துறை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், மணலின் விலையை அரசே நிர்ணயிக்கும் எனவும் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. தமிழகத்தில் தற்போது மணல் விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அந்நிறுவனம் இறக்குமதி மணலை கப்பல் மூலம் மங்களூருக்கு கொண்டு சென்றது.
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட மணல் பயன்பாட்டுக்கான நிபந்தனைகளை தளர்த்தி, உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறைப்படி செயல்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
" மணல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ‘குதிரை பேர’ அதிமுக அரசு, இப்போது உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு, மணல் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டிருக்கிறது. ஆனால், அந்த அரசாணையில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், மக்களுக்கு உரிய முறையில் சென்று சேருமா என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.