மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

மார்ஷ் சகோதரர்கள் ஆட்டம் தொடருமா?

மார்ஷ் சகோதரர்கள் ஆட்டம் தொடருமா?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என இங்கிலாந்து அணி போராடிவருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 479 ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் கடந்த வியாழன் (ஜனவரி 4) தொடங்கிய கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 346 ரன்களைச் சேர்த்தது. அதன் தொடர்ச்சியாகக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரோன் பென்கிராப்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டேவிட் வார்னர் (56) அரைசதம் அடித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் வழக்கம் போல் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தினார். அவர் 83 ரன்கள் சேர்த்த நிலையில் மொயன் அலி வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய உஸ்மான் கவாஜா 171 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் இன்னும் நான்கு ரன்களைச் சேர்த்திருந்தால் இதற்கு முன்னர் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆன 174 ரன்களைக் கடந்திருப்பார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மார்ஷ் சகோதரர்கள் மிட்சல் மார்ஷ், ஷான் மார்ஷ் ஜோடி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சினைச் சமாளித்து ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் முன்னிலை பெற உதவி புரிந்தனர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 479 ரன்களைச் சேர்த்துள்ளது. ஷான் மார்ஷ் 98 ரன்களுடனும், மிட்சல் மார்ஷ் 63 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மார்ஷ் சகோதரர்கள் இருவரும் நாளை நான்காம் நாள் ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடுவார்களா எனப் பொறுத்திருந்து காண்போம்.

போட்டி நடக்கும் விதத்தைப் பார்க்கும்போது இங்கிலாந்து தோல்வியைத் தவிர்ப்பது கடினம் என்றே தோன்றுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 6 ஜன 2018