மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஆளுநர் விழாவில் ‘ஜாஸ் சினிமா’ ஸ்பான்சர்!

ஆளுநர் விழாவில்   ‘ஜாஸ் சினிமா’ ஸ்பான்சர்!

இன்று இந்திய சினிமாத் துறை சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்வது பற்றியும் இதற்கான தீர்வுகள் பற்றியும் விவாதிக்கும் பொருட்டு... பாரத் நிதி என்ற அமைப்பும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் சேர்ந்து இன்று (ஜனவரி 6) காலை சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று காலை கருத்தரங்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.

இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் கலந்துகொண்டனர்.

அதேநேரம் பாஜகவின் முக்கிய புள்ளிகளையும் இந்த விழாவில் பார்க்க முடிந்தது. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் உள்ளிட்ட பாஜக முக்கியஸ்தர்கள் முன்வரிசைகளில் அமர்ந்திருந்தனர்.

இதெல்லாம் செய்தியல்ல...

இந்த விழா மேடையில் இவ்விழாவுக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் இரண்டாவதாக ஜாஸ் சினிமாஸ் பெயர் இருக்கிறது. ஆம், இந்த விழாவின் முக்கியமான ஸ்பான்சர்களில் ஒருவர் ’ஜாஸ் சினிமாஸ்’

பொதுவாகவே ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்கள் என்றாலே அது யாரால் நடத்தப்படுகிறது, விழாவில் ஆளுநரைத் தவிர வேறு யார் யார் கலந்துகொள்கிறார்கள், அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் யார் என்பதையெல்லாம் ராஜ்பவன் வட்டாரத்தில் இருந்து விசாரித்துதான் ஒப்புதல் வழங்குவார்கள்.

இந்நிலையில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் சி.ஐ.ஓ.வாக இருக்கும் ஜாஸ் சினிமா நிறுவனம் தமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் முக்கிய ஸ்பான்சர் ஆக வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்த சினிமா மேடையில் இருந்து

ஒரு நுண்ணரசியலும் வெளிப்பட்டிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து இந்தியா முழுதும் சுமார் 190 இடங்களில் ஆயிரக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் ரெய்டு நடத்தினர். அதில் சென்னையில் சுமார் ஐந்து நாட்கள் ஜாஸ் சினிமா நிறுவனத்தையும் விவேக் வீட்டையும் குறித்து வைத்து மத்திய வருமான வரித்துறையினர் ரெய்டு என்ற பெயரில் குடைந்து எடுத்தனர். அப்போது விவேக்கை வீட்டை விட்டே வெளியே வரவிடவில்லை என்று புகார்கள் சொல்லப்பட்டன. அந்த ரெய்டின் போது என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து இந்த தேதி வரை மத்திய வருமான வரித்துறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ரெய்டுக்குப் பின் விவேக் உள்ளிட்டோரை மத்திய வருமான வரித்துறை அலுவலகமான சாஸ்திரி பவனுக்கு விசாரணைக்கு அழைத்தார்கள். அதன் பிறகான நடவடிக்கை என்ன என்பது குறித்தும் இன்று வரை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் மத்திய அரசை குறை சொல்லியே டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், அவரது நெருங்கிய உறவினரான விவேக் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம், ஆளுநர், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு ஸ்பான்சராக இருப்பது விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது.

இந்த சந்தேகத்தை அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக புள்ளி ஒருவரிடம் கேட்டோம்.

‘’சார்... எப்படியல்லாம் யோசிக்கிறீர்கள்? இதற்கும் பாஜகவுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இது பாரத் நிதி என்ற அமைப்பும், தென்னிந்திய ஃபிலிம் சேம்பரும் இணைந்து நடத்தும் ஒரு நிகழ்ச்சி. இதில் எந்த அரசியலும் இல்லை’’ என்று படபடப்பாக மறுத்தார்.

ஆனால் மத்திய நிதித்துறையின் கீழ் வரும் வருமான வரித்துறையால் குடைந்து எடுக்கப்பட்டு இன்னமும் கண்காணிப்பில் இருக்கும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்... மத்திய நிதித்துறை இணை அமைச்சர், மற்றும் மத்திய அரசின் தமிழக பிரதிநிதியான ஆளுநர் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் ஸ்பான்சர் என்பது பல வினாக்களை எழுப்புகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 6 ஜன 2018