மூன்றாவது நாளாகத் தொடரும் போராட்டம்!

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்துக் கழகங்களின் 13ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அன்று முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் (ஜனவரி 6) போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள், அலுவலகத்துக்குச் செல்வோர் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தனியார் பேருந்துகள், ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 20ரூபாய்க்கு 60ரூபாய் வாங்குவதாகக் குற்றம்சாட்டி இதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வேலை நிறுத்தம் காரணமாக நேற்று ஒரே நாளில் ரயில்களில் 14 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் 865 அரசுப் பேருந்துகளுக்கு 50க்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதுபோன்று, கடலூரில் 350 பேருந்துகளுக்கு 44 பேருந்துகளும், அரியலூரில் 194 பேருந்துகளுக்கு 31 பேருந்துகளும், திருவாரூரில் 239 பேருந்துகளுக்கு 50 பேருந்துகளும் மட்டுமே இயக்கப்படுகின்றன.
சென்னையைப் பொறுத்தவரை 30 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. திருவான்மியூர் பணிமனையில் இருந்து இயக்கக் கூடிய 106 பேருந்துகளுக்கு 39 பேருந்துகளும், அடையாரில் 142 பேருந்துகளுக்கு 60 பேருந்துகளும், பெசன்ட் நகரில் 11 பேருந்துகளும், தாம்பரத்தில் 200 பேருந்துகளுக்கு 45 பேருந்துகளும் மட்டுமே இயக்கப்படுகின்றன.