அதிமுக நிர்வாகிக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு பாடலை நீக்கச் சொல்லி அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததற்கு பதிலளித்துள்ளார் காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி.
சூர்யா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் பொங்கல் தினக் கொண்டாட்டமாக வெளிவரவுள்ள திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தின் மற்ற பாடல்களை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடல் தான். சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் நடைபெறும் அநியாயமான ஊழல்களைக் கண்டு ஆதங்கப்படும் ஒரு தனிமனிதனின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் பாடலாக இது அமைந்திருந்தது.
இரண்டு மாதங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகியான சதீஷ் குமார் என்பவர் சொடக்கு மேல பாடலில் இடம்பெற்றுள்ள, “விரட்டி விரட்டி வெளுக்க தோணுது... அதிகார திமிர... பணக்கார பவர... தூக்கி போட்டு மிதிக்க தோணுது” என்ற வரிகளுக்குக் கண்டனம் தெரிவித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், ஆளும் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் எழுதப்பட்டிருக்கும் இந்தப்பாடலினால் பொதுமக்களிடையே குழப்பம் நிலவுகிறது என்று கூறியிருக்கிறார்.