2018 டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை!

2018ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று (ஜனவரி 5) வெளியிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு 12, 218 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. பின்னர் கூடுதலாக அட்டவணையில் தெரிவிக்காத பதவிகளுக்கும் சேர்த்து அறிவிக்கை வெளியிடப்பட்டன. அவற்றில் 18 தேர்வுகள் நடத்தப்பட்டன. மீதமுள்ள 6 தேர்வுகள் இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளன. கடந்த 5 ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகள் பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படாமல் இருந்தது. அதற்கான முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குரூப் 2 பதவிகள், தொழிலாளர் அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி தோட்டக்கலை அலுவலர், மீன்வளத்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், அரசு உதவி வழக்கறிஞர், அருங்காட்சியக காப்பாட்சியர், நூலகர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 23 விதமான பதவிகளில் 3,235 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, ஆய்வக உதவியாளர் (56) பணியிடத்துக்கு மே 6ஆம் தேதியும், மோட்டார் வாகன ஆய்வாளர் (113) பணியிடத்துக்கு ஜூன் 10ஆம் தேதியும், தோட்டக்கலை உதவியாளர் (805) பணியிடத்துக்கு ஜூன் 9ஆம் தேதியும், விவசாய அதிகாரி (183) பணியிடத்துக்கு ஜூன் 10ஆம் தேதியும் எழுத்து தேர்வு நடைபெறும். வனத்துறை பயிற்சியாளர் (158) பணியிடத்துக்கு ஜூன் 16ஆம் தேதியும், மீன்வளத்துறை ஆய்வாளர் (72) பணியிடத்துக்கு ஜூலை 15ஆம் தேதியும், அரசு உதவி வழக்கறிஞர்(43) இடத்துக்கு ஜூலை 28, 29ஆம் தேதியும், குரூப் 2 (நேர்முகத் தேர்வு பதவி)- 1547 பணியிடத்துக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதியும் தேர்வு நடைபெறும். குரூப் 1 (57) பணியிடத்துக்கு அக்டோபர் 14ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையை www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
2015ஆம் ஆண்டு 12 தேர்வுகளை நடத்தி 5,028 காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி உள்ளது. 2016ஆம் ஆண்டு 17 தேர்வுகளை நடத்தி 6,383 காலிப்பணியிடங்களை நிரப்பி உள்ளது.