தவறான விளம்பரங்களில் நடித்தால் தடை!

தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள் தடை மற்றும் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதாவுக்குப் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரு நடிகரோ, நடிகையோ அல்லது கிரிக்கெட் வீரரோ பிரபலமடைந்த உடன் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை தங்கள் விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்வது வழக்கம். விளம்பரங்கள் மூலம் பிரபலங்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்தப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியே?
தவறான விளம்பரங்களிலிருந்து நுகர்வோர்களைப் பாதுகாக்க மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர திட்டமிட்டது. இது குறித்து ஆராய பாராளுமன்ற குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த புதிய சட்டத்தின்படி தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை மற்றும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் தவறான விளம்பரங்களில் ஈடுபடும் பிரபலங்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும் என்ற பாராளுமன்ற குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.