34 மணி நேரத்தை இழந்த மாநிலங்களவை: வெங்கையா நாயுடு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் 34 மணி நேர இழப்பை மாநிலங்களவை சந்தித்துள்ளதாகவும், அதற்குக் காரணமான உறுப்பினர்கள் தங்களது நடத்தை குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென்றும் கூறினார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர், நேற்றுடன் (ஜனவரி 5) முடிவடைந்தது. இடைப்பட்ட நாள்களில், 9 அரசு மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் மிக உயர்வான தருணங்களையும் சில இடையூறுகளால் தாழ்வான நிகழ்வுகளையும் கடந்து வந்ததாக வருத்தம் தெரிவித்தார் மாநிலங்களவையின் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு.
“எதிர்கட்சிகளின் இடையூறுகளால் மாநிலங்களவை 34 மணி நேரத்தை இழந்திருக்கிறது. இதனால் அவையின் மதிப்பு குறைந்திருக்கிறது. நாட்டு நலன் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் திட்டங்களையும் விவாதிப்பதே ஜனநாயகத்துக்கான அடையாளம். ஆனால், அமளியில் ஈடுபட்டு அவையை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், அவை உறுப்பினர்கள் தங்களது நடத்தை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
தான் துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்பு பங்கேற்ற கூட்டத்தொடர் என்பதால், இன்னும் நல்லமுறையில் இது நடந்திருக்கலாம் என்று நினைப்பதாகத் தெரிவித்தார் வெங்கையா நாயுடு.
“எத்தனை வேறுபாடுகள், கசப்புணர்வுகள் இருந்தாலும், நாடாளுமன்றம் அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் பிரிவினைகளைக் காட்டும் இடமல்ல” என்றார்.
நேற்று மதியம் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டதால், தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் மாலையில்தான், ஜனவரி 29ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியானது.