புற்றுநோய் சிகிச்சைக்கான நிதி:மாரத்தான்!

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக, மாரத்தான் ஓட்டம் நாளை(ஜனவரி 7) சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக நேற்று(ஜனவரி 5) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா கூறியது: "ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. புகையிலையைப் பயன்படுத்துவதே 40 சதவீத புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம். தற்போது மருத்துவ தொழில் வளர்ச்சியின் காரணமாக நோய்களைக் குணப்படுத்தி, நோயாளிகளை உயிர் பிழைக்கவைக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் சிகிச்சைக்காக நோயாளிகள் அதிகமாகச் செலவு செய்யமுடியவில்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை வழங்க வேண்டும் என்பது தான் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் நோக்கம் என தெரிவித்தார்.
மருத்துவமனையின் தேவைகளை நிறைவு செய்ய கடுமையாகப் போராடி வருகிற நிலையில், இம்மருத்துவமனைக்குத் தாராளமாக நிதி அளித்தவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இம்மருத்துவமனையில் குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக நிதி திரட்டும் நோக்கத்தில் நெவில் எண்டவர்ஸ் பவுண்டேஷன் சார்பில் நாளை ‘டான் டு டஸ்க்’ என்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த மராத்தான் ஓட்டம் சென்னையில் காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.