மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்!

ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்!

‘உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள். பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்’ என்று நேற்று (ஜனவரி 5) இரவு உறுதிபட தெரிவித்தார் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

நேற்று முன்தினம் (ஜனவரி 4) போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் சங்கங்கள், அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடையேயான பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நடந்தது. அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகத் தெரிவித்து, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன சில தொழிற்சங்கங்கள். இதனால், ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் நேற்று பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதையடுத்து, நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். இருவரும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல் வெளியானது. முதலமைச்சருடன் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விஜயபாஸ்கர்.

அப்போது, இந்த ஆண்டில் மட்டும் 23 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இறுதியில் ஊதிய விகிதம் 2.44 மடங்கு உயர்த்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதைச் சில தொழிற்சங்கங்கள் ஏற்காமல், அரசு ஊழியர்களுக்கு நிகராக 2.57 மடங்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டுமெனத் தெரிவித்ததாகக் கூறினார்.

“2013ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் 5.5 சதவிகிதம் ஊதிய உயர்வு ஏற்பட்டதையும் சேர்த்தே கணக்கிட்டால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2.44 மடங்கானது அரசு ஊழியர்களுக்கான 2.57 மடங்குக்கு இணையானதாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியக்குழு மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பது நடைமுறையில் உள்ளது” என்றும் கூறினார்.

அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வால் இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று கூறிய விஜயபாஸ்கர், இந்த ஊதிய ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டபோதிலும், சில தொழிற்சங்கங்கள் திசைமாற்றி போராட்டத்தில் ஈடுபட வைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

“போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும். ஆனால், சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் என்று கூறி, நள்ளிரவில் பேருந்துகளை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பல்வேறு தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்க முன்வந்தபோது, அவர்களைத் தாக்கியும் பேருந்துகளின் மீது கற்களை வீசியும் சேதம் ஏற்படுத்தினர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சென்னை நீதிமன்றம் இந்த வேலைநிறுத்தம் சட்டத்துக்குப் புறம்பானது என்றும், அதில் ஈடுபடுவோர் உடனடியாகப் பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. எனவே, உண்மை நிலையை உணர்ந்து ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது” என்று கூறினார்.

ஒவ்வொரு முறையும் முதலமைச்சரின் ஒப்புதலுடனே பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும், அவரது ஒப்புதலுடனே ஒப்பந்தம் தற்போது கையெழுத்தானது என்றும் கூறினார் விஜயபாஸ்கர். வேலைநிறுத்தப் போராட்டத்துக்காகப் பேருந்துகளைப் பாதி வழியில் நிறுத்திய தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய விஜயபாஸ்கர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் உத்தரவை ஏற்று தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள். பேருந்துகள் இயக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 6 ஜன 2018