மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும் ஊடக விழாக்கள்!

சிறப்புக் கட்டுரை: ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும் ஊடக விழாக்கள்!

ஹர்தோஷ் சிங் பால்

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள், விளம்பரதாரர்கள் உதவியுடன் நடத்தும் மிகப் பெரிய நிகழ்ச்சிகளில் இந்திய அரசியல்வாதிகள் முதல் அமெரிக்க வெளியுறவு அலுவலக அதிகாரிகள் வரை பங்கேற்றிருக்கிறார்கள். இந்த விழாக்களால் ஊடகங்கள் தங்கள் கவுரவத்தை அவர்களிடம் பணயம் வைக்கின்றன. சமீப காலங்களில் பிரதமர் மோடி இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதனால், ஊடகம் மற்றும் வியாபாரத்துக்கும் இடையிலான சுவர் தகர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளது. மிகப் பெரிய ஊடக பிராண்டுகளுக்குப் பெரிய அளவில் விளம்பரம் பெற்றுத்தரும் பிரபல பேச்சாளர்களுக்கு இவை அவர்களுக்கான தளத்தையும் விரிவான அளவில் புகழையும் ஈட்டித்தருகின்றன. பல ஊடக நிறுவனங்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் இரு தரப்பினருக்கும் நன்மை பயப்பதால் ஸ்பான்சர்களும் தாமாகவே முன்வந்து இவற்றை நடத்திவைக்கின்றனர். ஆனால், சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய ஊடக குழுமங்களான ஹிந்துஸ்தான் டைம்ஸும், டைம்ஸ் குழுமமும் நடத்திய இத்தகைய மெகா நிகழ்ச்சிகள் எவ்வாறு ஊடகங்களின் சுதந்திரத்தை பாதிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டின.

பின்னணியில் நடப்பது என்ன?

மார்ச் மாதம் எகனாமிக் டைம்ஸ் நடத்திய குளோபல் பிசினஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இருந்த பிரதமர் கடைசி நேரத்தில் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி கலந்துகொள்ளவில்லை. அவருடன் சேர்ந்து பல மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டனர். இது டைம்ஸ் குழுமத்துக்குப் பெரும் அவமானமாகப் கருதப்பட்டது. அதுவும் அரசுக்கு ஆதரவாக இந்த இதழில் செய்திகள் வெளிவரும் நிலையில், அரசின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது.

ஆனால், இதற்குப் பிறகு நடந்த சில நிகழ்வுகள் இதற்கான காரணங்களை விளக்குவதுபோல அமைந்தன. தி எகனாமிக் டைம்ஸில் அரசுக்கு எதிரான செய்திக் கட்டுரைகளை எழுதிவந்த ரோகிணி சிங் அந்த இதழிலிருந்து வெளியேறினார் (இந்த ரோகிணி சிங்தான் ‘தி வையர்’ இணையதளத்தில் அமித் ஷா மகனின் தொழில் வளர்ச்சி குறித்த கட்டுரையை எழுதியவர்). டைம்ஸ் குழுமத்தின் ரேடியோ சேனல் ஒன்றில் மோடியைக் கேலி செய்து வெளியாகிக்கொண்டிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

மேலும், செப்டம்பர் மாதம் ஹிந்துஸ்தான் குழும உரிமையாளர் ஷோபனா பார்தியா மோடியைச் சந்தித்தபோது இந்நிகழ்ச்சிக்கு அவரை வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, மீடியா ஹவுஸ், ஹிந்துஸ்தான் குழுமத்தின் எடிட்டர் - இன் - சீஃப் பாபி கோஷின் வெளியேற்றத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளிவந்த சில நாள்களில் இந்தப் பத்திரிகை மதம், சாதியின் பெயரால் நடத்தப்பட்டுவந்த குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டுவந்த ஹாட் ட்ராக்கர் (Hate Tracker) என்ற நிகழ்ச்சியை நிறுத்தியது.

பெரிய ஊடகங்களும் பெருநிறுவனங்களும்

இந்த மிகப் பெரிய, லாபகரமான ஊடக நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கும் அழுத்தம் குறித்து நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இதில் எந்த நிறுவனமும் தங்கள் வருமானத்துக்கும் லாபத்துக்கும் மத்திய அரசைச் சார்ந்திருக்கவில்லைதான். ஆனால், மோடி தங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையென்ற செய்தி, கார்ப்பரேட் உலகில் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என இவை அஞ்சுகின்றன. இந்தியாவில் உள்ள பெரிய ஊடகங்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் விளம்பரங்களையே சார்ந்துள்ளன என்பதால் அவற்றின் ஆதரவு இவர்களுக்கு மிக முக்கியம். மேலும், இந்தியாவின் பகுதி தாராளமயமாக்கல் பொருளாதாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்குக் கட்டுப்பட்டே உள்ளன. அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்த விரும்பினால், தனித்தனியாகப் பத்திரிகையாளர்களைக் கையாள்வதைவிட, வர்த்தக நிறுவனங்களின் மூலம் ஒட்டுமொத்தமாக அந்த ஊடக நிறுவனத்தையே வளைப்பது எளிது.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்துறை மாநிலமான குஜராத்தின் முதல்வராக இருந்தபோதே கார்ப்பரேட் நிறுவனங்களைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்தவர் மோடி. 2002இல் மோடி முதல்வராக இருந்தபோதுதான் குஜராத்தில் இந்தியாவின் மாபெரும் வன்முறைக் கலவரங்களில் ஒன்றாகக் கருதப்படும் கலவரம் நடந்தது. இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு சிஐஐ எனப்படும் இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்புக் கூட்டம் ஒன்றில் மோடி கலந்துகொண்டார். அதில் மோடியை வைத்துக்கொண்டே இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களான ஜாம்ஷெட் கோத்ரேஜும் ராகுல் பஜாஜும் ‘மகாத்மா காந்தியின் மாநில’மான குஜராத்தில் நிலவும் சூழல் குறித்துக் கவலை தெரிவித்தனர். கடுப்பான மோடி, சிஐஐக்குப் போட்டியாக ரிசர்கன்ட் குரூப் ஆஃப் குஜராத் என்ற இணை அமைப்பை உருவாக்கி ஆதரித்தார். அடுத்த மாதமே சிஐஐயின் தலைவர் ஓடிவந்து மோடியிடம் மன்னிப்புக் கேட்டார். இதற்குப் பின் ரத்தன் டாடா போன்ற முன்னணித் தொழிலதிபர்கள் அங்கீகரிக்க, தேசிய அளவிலான தலைவராக உயர்ந்தார் மோடி.

கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுக்குள் வந்தன. பெரும்பாலான ஊடகங்களும் பின்தொடர்ந்தன. 2014இல் மோடியின் தேர்தல் பிரசாரங்களை ஆதரித்துப் பெருமளவில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஊடகச் செய்திகளில் 2002 கலவரம் குறித்து அடக்கி வாசிக்கப்பட்டது. மோடி பெரு நிறுவனங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம் அப்படி.

இம்மாதிரியான ஊடகக் கருத்தரங்குகளில் ஊடகங்கள், பெரு நிறுவனங்கள், அரசு என மூன்று பெரிய சக்திகள் மிகச் சுலபமாகச் சந்தித்துக்கொள்ள முடியும். இது இதழியல் மதிப்பீடுகளைப் பாதிக்கிறது. மேலும், இவை அனைத்து ஊடக நிறுவனங்களும் வெகுவாகச் சார்ந்திருக்கும் நிதி திரட்டும் சாதனங்களாகவும் மாறிவிட்டன. சென்ற ஆண்டில் கேரவான் இதழ் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பாரம்பர்யச் சிந்தனை மற்றும் பாலின அதிகாரத்தைச் சுற்றியுள்ள சவால்களை வலியுறுத்தும் நோக்கத்துடன் ‘தி பிரிட்ஜ் டாக்ஸ்’ எனக் குறிப்பிடப்படும் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி, காங்கிரஸ் அரசியல்வாதிகளான மணி சங்கர் அய்யர், சச்சின் பைலட், ரோஹிணி நிலேகானி உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர். இதுபோன்ற நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய நிர்பந்தங்களை இந்தக் கருத்தரங்கு அம்பலப்படுத்தியது. எகனாமிக் டைம்ஸ், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவை இதுபோன்ற அழுத்தங்களுக்கு ஆட்படக்கூடியவை என்பது அந்தக் குழுமங்களின் நிகழ்வுகளை ஒட்டி நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

உலகளாவிய நிலவரம்

இத்தகைய நிகழ்ச்சிகள் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றன. ஊடக சுதந்திரத்துக்கான உலகளாவிய தரங்களை நிர்ணயிப்பதாகக் கருதப்படும் அமைப்புகள்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. கடந்த பத்தாண்டுகளில், நியூயார்க் டைம்ஸ் இதழ் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த NYTLive என்ற பிரிவைத் தொடங்கியது. நியூயார்க் டைம்ஸ் இதழின் உள்ளடக்கம் எத்தகைய தர அளவுகோல்களைக் கொண்டிருக்கிறதோ அதே அளவுகோல்கள்தான் NYTimes.com-க்கும் பொருந்தும் என்று நியூயார்க் டைம்ஸின் உள்ளடக்கம் சார்ந்த நெறிகளுக்கான ஆவணம் ஒன்று கூறுகிறது. இதில் இடம்பெறும் செய்திகளைக் கட்டுப்படுத்துவது ஆசிரியர் குழுதான். அதாவது, யாரை அழைப்பது, எதைப் பற்றிப் பேசச் சொல்வது என்பனவற்றை NYTLive-ன் சீனியர் எடிட்டரும் சீனியர் வைஸ் பிரசிடெண்ட்டும்தான் முடிவு செய்வார்கள் என்றாலும் தேர்ந்தெடுக்கப்படும் விஷயங்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மேடையில் பேசுபவர்கள் யார் என்பன குறித்து இறுதியாக முடிவெடுக்கும் அதிகாரம், அதன் தலைமைக்குத்தான் உண்டு. மேலும் ஸ்பான்சர்கள், பார்வையாளர்களை அதிகரிப்பது மற்றும் இதுதொடர்பான தலைப்புகள் போன்ற நிகழ்ச்சிகளின் மற்ற அம்சங்களிலும் NYTLive-ன் சீனியர் வைஸ் பிரசிடெண்ட்டுதான் முடிவெடுப்பார் என்றாலும், இதிலும் செய்தித் தலைமைதான் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. மேலும் ஸ்பான்சர்களுக்கோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களுக்கோ இதில் இடம்பெறும் விஷயங்களிலோ அல்லது யார் மேடையில் இடம்பெறுவார்கள் என்று முடிவெடுப்பதிலோ எந்த அதிகாரமும் இருக்காது.

தனிப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுக்கும் சுதந்திரம் உண்டு. அந்த இதழில் வேலைபார்க்கும் ரிப்போர்ட்டர்கள், உதவி ஆசிரியர்கள் அதில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் விருப்பமில்லை எனக் கூற முடியும். ரிப்போர்ட்டர்கள் இதன் பேச்சாளர்கள் பங்கேற்பு அல்லது பங்கேற்பாளர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட மாட்டார்கள் என்ற கொள்கையை இது பின்பற்றுகிறது.

இவ்வளவு தெளிவான கொள்கைகள் இருந்தும் கடந்த ஆண்டு ஜூனில் கொலம்பியா ஜர்னலிசம் ரெவ்யூ, “டிஜிட்டல் யுகத்தில், நியூயார்க் டைம்ஸ், செய்தி மற்றும் விளம்பரத்துக்கு இடையேயான வழுக்குப் பாதையில் பயணிப்பது அதிகரித்துவருகிறது” என்ற கட்டுரையை வெளியிட்டது. இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துவதன் அபாயம் குறித்து எச்சரித்தது. நடந்த தவறுகளைச் சுட்டிக்காட்டியது.

இந்தியா: விதிமீறல்களே இங்கு இயல்பு

இந்திய ஊடக நடைமுறையின்படி, விதிமீறல்கள் சாதாரணமானவை என்பது மட்டுமல்லாமல், இவை விதிமீறல்களாகவே பார்க்கப்படுவதில்லை. இந்தச் சூழலில், ஊடக நிறுவனங்களின் இப்படிப்பட்ட கருத்தரங்குகளுக்கான அணுகுமுறைகளின் தார்மிக வழிகாட்டிக் கொள்கைகள் மிகவும் முக்கியமானதாக மாறுகின்றன.

தி கேரவான் இதழில் எடிட்டோரியல் ஊழியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்கேற்கவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படும் அதே நேரத்தில், அவர்களின் பங்கேற்பு கட்டாயம் இல்லை. ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் குழுமம், இந்தியா டுடே ஆகியவற்றில் இதழியல் பிரிவையும் இம்மாதிரி நிகழ்வுகளை நடத்தும் பிரிவையும் தனியாக வைக்கும் போக்கே கிடையாது. பத்திரிகைகளில் பணியாற்றும் இதழியலாளர்கள், இந்த மாநாட்டுக்கான வேலைகளைப் பார்க்கும்படி பணிக்கப்படுவார்கள். ரிப்போர்ட்டர் மட்டத்தில்கூட இதற்காக வேலை பார்க்க வேண்டும். அழைப்பிதழ்களைக் கொண்டு போய்க் கொடுப்பது, தங்கள் பகுதிகளில் உள்ள முக்கியஸ்தர்கள் நிகழ்வுக்கு வருவதை உறுதிசெய்வது போன்றவை அவர்களுக்கான பணிகள்.

தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்களை அழைப்பதில் செய்தியாளர்களுக்குப் பெரிய பிரச்னை இருக்காது. ஆனால், செய்தியாளர் சந்திப்புகளில் யாரை நோக்கிக் கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டுமோ அவர்களையே அழைக்க வேண்டியிருக்கும்போதுதான் சிக்கல். அந்த நபரோ, தலைவரோ விழாவுக்கு வரும்போது இந்தச் செய்தியாளர் அவர் பக்கத்திலேயே நிற்க வேண்டும். பிறகு, அவர் எப்படி எதிர்காலத்தில் அந்தத் தலைவரை அல்லது நபரை விமர்சிக்கும் வகையில் அல்லது அவருக்கு எதிராக எவ்வாறு எழுதுவார்? மேலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என்பதால், பேட்டிகள் மற்றும் விவாதங்கள் போன்றவை அந்தத் தலைவருக்கான மக்கள் தொடர்பு நிகழ்ச்சிபோல வடிவமைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அரசியல்வாதிகளை சுலபமாக அணுகுவதற்கு வழிகோலும் அதே நேரத்தில், இதன்மூலம் அரசியல்வாதிகளுக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான உறவு வளர்வதால், அவர்களுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட நிறுவனங்கள் தயங்கும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா தி இந்து இதழில், “இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது. இது தனியாரின் பணம் என்பதால் நாம் அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனால், இதே அமைப்புகள் பொதுப் பணம் செலவிடப்படும் விதத்தைக் கேள்வி கேட்பதால் இதைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்தகைய நிகழ்வுகளுக்குப் பணம் தருகின்றன. பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதும் பண உதவியின் அடிப்படையில் நடக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளின் அடிப்படை நேர்மையையே கேள்விக்குட்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

ஊடகங்களின் நியாயமான சிக்கல்கள்

கடந்த சில பத்தாண்டுகளாக, ஊடகங்களின் மீதான பொருளாதார அழுத்தம் கூடிக்கொண்டே வருவதையும் அதனால் ஏற்படும் சிரமங்களையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அச்சு ஊடகங்களின் விறபனை சரிந்துள்ளது அல்லது தேக்கமடைந்துள்ளது. இணையத்தில் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இன்னமும் பல பதிப்பாளர்களுக்குக் கனவாகவே உள்ளது. அதேசமயம், விளம்பர வருமானம் டிஜிட்டில் மீடியாவை நோக்கிப் போவதும் அதிகரித்துவருகிறது. இதில் பெரும்பாலும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்குக்குச் செல்கிறது. மீதி இருப்பதைப் பெறுவதற்காக லட்சக்கணக்கான டிஜிட்டல் தளங்கள் போட்டி போடுகின்றன.

இப்படிப்பட்ட போட்டி நிறைந்த வர்த்தக சூழலில், நல்ல முறையில் பத்திரிகை நடத்த வேண்டுமென்றால் வருமானத்துக்கான மாற்று வழிகளைப் பார்த்தே ஆக வேண்டும். அதற்காக இம்மாதிரி நிகழ்வுகளும் தேவைப்படுகின்றன. ஆனால், நாம் எதற்காக இதழியல் பணியைச் செய்கிறோமோ, அதற்கான காரணமே இந்த நிகழ்வுகளால் அடிபட்டுப் போகுமென்றால், பிறரைப் பற்றிக் கேள்வி எழுப்பும் உரிமையை நாம் இழந்துவிடுவோம். எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான தர அளவுகோல்களைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். அத்துடன், கொலம்பியா ஜர்னலிசம் ரிவ்யூ தன் கட்டுரையில் குறிப்பிடுவதுபோல, ஊடகங்கள் எப்படி எல்லோரையும் பற்றிச் செய்திகளை வெளியிடுகின்றனவோ, அதேபோல ஊடக உலகத்தைப் பற்றிய செய்திகளையும் வெளியிட வேண்டும்.

*

(கட்டுரையாளர் ஹர்தோஷ் சிங் பால், The Caravan இதழில் அரசியல் பிரிவு ஆசிரியர்)

நன்றி: http://www.caravanmagazine.in/perspectives/high-profile-events-news-organisations-damage-journalistic-independence

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 6 ஜன 2018